Skip to main content

ஒட்டப்பிடாரம் அனல் பறக்கும் பிரச்சாரம்...

Published on 06/05/2019 | Edited on 06/05/2019

ஒட்டப்பிடாரம் இடைத் தேர்தல் களம் அனலைக் கிளப்புகிறது. தி.மு.க.வின் வேட்பாளரான சண்முகையாவை ஆதரித்து கே.என்.நேரு ஆஸ்டின் எம்.எல்.ஏ., கனிமொழி கே.கே.எஸ்.எஸ்.ஆர். கருப்பசாமிபாண்டியன், ஜோயல், அனிதாராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. என்று பதினொன்றுக்கும் மேற்பட்டவர்கள் களமிறக்கப்பட்டதோடு பிரச்சாரங்களையும் தீவிரப்படுத்தியுள்ளனர். கடந்த மூன்று தினங்களாக தொகுதியில் மையமிட்ட தி.மு.க. தலைவர் ஸ்டாலின், மாப்பிள்ளையூரணி, முத்தையாபுரம் சிலுக்கன்பட்டி, ஒட்டப்பிடாரம் போன்ற பகுதிகளில் தன் கட்சி வேட்பாளரான சண்முகையாவை ஆதரித்துப் பிரச்சாரம் மேற் கொண்டார்.

 

stalin

 

அப்போது அவர், “தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டவைகளை நிறைவேற்றுவதோடு குடி தண்ணீர் உள்ளிட்ட அத்யாவசியப் பணிகளை முடிப்போம்” என்றார். 
 

தொகுதிக்குட்பட்ட பகுதியான செய்துங்கநல்லூரில் அ.ம.மு.க. வேட்பாளரான சுந்தாராஜை ஆதரித்துப் பேசிய அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் தினகரன், “இ.பி.எஸ். ஆட்சியில் மக்கள் கஷ்டப்படுகிறார்கள். ஆனால் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் வளமாக உள்ளனர். மக்களுக்கு எதுவும் செய்வது கிடையாது. ஒட்டப்பிடாரம் பகுதியில் குளங்கள் தூர்வார, குடிநீர் பிரச்சனையைத் தீர்க்க, அங்கன்வாடி மையங்களில் சுற்றுச் சுவர் கட்ட, மயானம் செல்ல வசதி, முதியோர் பென்ஷன் கிடைக்க அ.ம.மு.க வசதிகளைச் செய்யும்” என்று வாக்குறுதி கொடுத்து வருகிறார்.
 

ttv dinakaran

 

அதேசமயம் அ.தி.மு.க வின் வேட்பாளரான மோகனுக்குப் பக்கபலமாக அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, கடம்பூர் ராஜ், சேவூர் ராமச்சந்திரன், மணிகண்டன் என 8 அமைச்சர்கள் முகாமிட்டுள்ளனர். மேலும் அதிமுக வேட்பாளரான மோகனை ஆதரித்து குறுக்குச் சாலையில் பிரச்சாரம் மேற்கொண்ட ஓ.பி.எஸ், “ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் இ.பி.எஸ். தலைமையில் நடந்து கொண்டிருக்கிறது. அவர் வழங்கிய எந்தத் திட்டத்தையும் குறைக்கவில்லை. ஜெயலலிதா மேலே இருந்து எங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். ஒழுங்காக அமைச்சர்கள் பணி செய்கிறார்களா? என்றும் பார்த்துக் கொண்டிருக்கிறார்” என்று பிரச்சாரத்தில் பேசிவருகிறார்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விளவங்கோடு இடைத்தேர்தல்; காங்கிரஸ் வகுத்த வியூகம் - எதற்காக களமிறக்கப்பட்டார் தாரகை?

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Full report about Tharagai Congress candidate who is contesting Vilavancode by-elections

தமிழகத்தில் நாடாளுமன்ற முதல் கட்டமாக நடைபெறுகிறது. இதையொட்டி, அரசியல் கட்சிகள் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு முடித்து வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், தமிழக மக்களவை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 9 இடங்களும், புதுச்சேரி தொகுதியும் ஒதுக்கப்பட்டது. இதில், தமிழகத்தில் உள்ள 9 தொகுதிகளில் 7 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை முன்னதாக காங்கிரஸ் தலைமை அறிவித்தது. ஆனால், நெல்லை மற்றும் மயிலாடுதுறை தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்படாமல் இருந்தது.

இந்த நிலையில், கடந்த 25 ஆம் தேதி திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் நெல்லை மற்றும் கன்னியாகுமரி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பிரச்சார கூட்டத்தில் பேச இருக்கிறார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்தது. இதனால், முதல்வர் வருகைக்குள் காங்கிரஸ் நெல்லை வேட்பாளர்களை இறுதி செய்யும் என தகவல் வெளியாகி இருந்தது.   இதையடுத்து, நெல்லை தொகுதி வேட்பாளர் எப்போது அறிவிக்கப்படுவார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், டெல்லி காங்கிரஸ் தலைமை நெல்லை மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக வழக்கறிஞர் 'ராபர்ட் ப்ரூஸ்' போட்டியிடுவார் என அறிவித்துள்ளது. ராபர்ட் ப்ரூஸ் தேசிய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராகவும், கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் தலைவராகவும் இருக்கிறார்.

Full report about Tharagai Congress candidate who is contesting Vilavancode by-elections
விஜயதரணி

இதனிடையே, விளவங்கோடு தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த விஜயதரணி பாஜகவில் இணைந்து விட்டதால், அந்த தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த முறை திமுக கூட்டணி பேச்சுவார்த்தையிலும் அந்த தொகுதி காங்கிரஸ் கட்சிக்கே மீண்டும் ஒதுக்கப்பட்டள்ளது. விளவங்கோடு தொகுதி சட்டபேரவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி அதிக முறை வெற்றி பெற்றுள்ளது. முதல் முறையாக இந்த முறை தான் இடைத்தேர்தல் நடக்கிறது. தொடர்ந்து மூன்று முறை எம்எல்ஏவாக விஜயதரணி இருந்ததால், இந்த தொகுதியில் பெண் வேட்பாளரையை அனைத்து கட்சிகளும் நிறுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, முதலில் அதிமுக சார்பில் சமூக சேவகி ராணி என்பவர் வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளார். அவர் தொகுதி முழுவதும் தீவிர பிரச்சாரம் தொடங்கி விட்டார். இதையடுத்த, பாரதிய ஜனதா வேட்பாளராக புதுமுகம் நந்தினி என்பவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இங்கு கடந்தமுறை தேர்தலில் பாரதிய ஜனதா சார்பில் போட்டியிட்ட ஜெயசீலனுக்கே மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என்ற எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,  அதிமுக பெண் வேட்பாளரை நிறுத்தியாதல் பாஜகவும் போட்டிக்கு நந்தினியை நிறுத்தியுள்ளது. ஆனால், காங்கிரஸ் வேட்பாளரை அறிவிக்காமல் இருந்த நிலையில், நெல்லை மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கப்பட்டதுடன் சேர்த்து விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலின் வேட்பாளர் அறிவிக்கப்பட்டார். இந்த முறையும் பெண் வேட்பாளராக 'தாரகை கத்பர்ட்' என்பவரை டெல்லி காங்கிரஸ் தலைமை  நிறுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த டாக்டர் 'தாரகை கத்பர்ட்' முதல் முறையாக  இடைத்தேர்தலில் களம் காண்கிறார். இவர், தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராகவும் உள்ளார். 

மீனவர் சமூகத்தைச் சேர்ந்த தாரகை கத்பர்ட், காங்கிரஸ் கட்சியில் நீண்ட காலமாகப் பயணித்து வருகிறார். கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்துள்ளார். தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியில் நியமிக்கப்பட்ட முதல் பெண் மாவட்ட தலைவர் தாரகை கத்பர்ட் தான். விளவங்கோடு சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட பலர் விருப்ப மனு கொடுத்திருந்தாலும், அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் லாரன்ஸ், கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் டாக்டர் பினுலால் சிங், மாநில பொதுச்செயலாளர்கள் கே.ஜி.ரமேஷ் குமார், தாரகை கத்பர்ட் ஆகிய நான்கு பேரும் இறுதிப்பட்டியலில் இருந்ததாக சொல்லப்பட்டது. இந்த நிலையில் தாரகை கத்பர்ட் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

Full report about Tharagai Congress candidate who is contesting Vilavancode by-elections
தாரகை

தாரகை கத்பர்ட் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றது. முதல் காரணம் நாடாளுமன்ற தேர்தல். நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்ந்து சட்டமன்றத் தேர்தலும் நடப்பதால் மீனவர்கள் வாக்குகளை கவர வேண்டும் என்பதில் காங்கிரஸ் கவனமாக இருப்பதாக கூறப்படுகிறது.

இதனிடையே, மீனவர் அமைப்புகள் எல்லாம் இணைந்து விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மீனவர் வேட்பாளரை அறிவித்தால் ஆதரவு தருகிறோம் என வெளிப்படையாக சொல்லியுள்ளனர். இதுவும், மீனவரான தாரகை கத்பர்ட்டை வேட்பாளராக தேர்வு செய்ய ஒரு காரணம் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. தாரகை கத்பர்ட் தேர்வு செய்யப்பட முக்கியமான காரணம் மற்றொன்று உள்ளது. அண்மையில் கன்னியாகுமரி மாவட்டம், வெள்ளமோடியில் நடந்த மகிளா காங்கிரஸ் அகில இந்திய மாநாட்டில் பேசிய மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, "விளவங்கோடு தொகுதியில் நீங்கள் நினைப்பது நடக்கும்.." என சூசகமாக கூறியிருந்தார். மற்ற கட்சிகளின் சார்பாக பெண் வேட்பாளர்களே களமிறக்கப்பட்டதால், காங்கிரஸ் சார்பிலும் பெண் வேட்பாளராக தாரகை கத்பர்ட் களம் இறக்கப்பட்டிருக்கிறார்.

Full report about Tharagai Congress candidate who is contesting Vilavancode by-elections

இதனிடையே, திடீரென காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விஜயதரணி பாஜகவில் இணைந்ததை கடுமையாக 'தாரகை கத்பர்ட்' விமர்சனம் செய்து வந்தார். தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கு செயல்பட்டு வந்த தாரகை கத்பர்டிற்கு இந்த முறை டெல்லி காங்கிரஸ் தலைமை அங்கீகரித்து வாய்ப்பு வழங்கியுள்ளது. டெல்லி காங்கிரஸ் தலைமையின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதை அடுத்து தாரகை கத்பர்ட்டின் ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர். இதையடுத்து, நெல்லை மாவட்டம் நாங்குநேரி பிரச்சார கூட்டத்தில் நெல்லை மற்றும் கன்னியாகுமரி மக்களவை தொகுதி வேட்பாளர்களையும், விளவங்கோடு இடத்தேர்தல் காங்கிரஸ் வேட்பாளரையும் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்தி வாக்கு சேகரித்தார்.

இன்னும், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் அறிமுகப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விஜயதரணி எம்எல்ஏ-வாக இருந்த விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ், பாஜக, அதிமுக, நாம் தமிழர் என பிரதான நான்கு கட்சிகளும் பெண் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருப்பது அப்பகுதியில் வரவேற்பை பெற்றுள்ளது.

Next Story

“வாக்குப்பதிவு முடிந்த நாளன்று தென்னரசு என்ன சொன்னார்?” - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், கே.எஸ்.அழகிரி கூட்டாகப் பேட்டி

Published on 03/03/2023 | Edited on 03/03/2023

 

What did the thennarasu say on the day the voting ended?- EVKS Ilangovan, KS Alagiri jointly interviewed

 

பல்வேறு பரபரப்புகளை கடந்து ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்று முடிந்தது. காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்ததிலிருந்து தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தார். வாக்கு எண்ணிக்கையின் முடிவில் 1 லட்சத்து 10 ஆயிரத்து 556 வாக்குகளைப் பெற்று அவர் வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் தென்னரசு 43 ஆயிரத்து 981 வாக்குகளைப் பெற்று டெபாசிட்டை தக்க வைத்தார்.

 

இந்நிலையில், வெற்றி பெற்ற வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். பின்னர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

 

கே.எஸ்.அழகிரி பேசுகையில், ''முதல்வரின் இரண்டாண்டு கால சிறந்த ஆட்சிக்கு கிடைத்திருக்கிற நற்சான்றிதழ். பொதுமக்கள், உழைக்கின்ற மக்கள், பெண்கள் இவர்களெல்லாம் இந்த ஆட்சியினுடைய செயல்பாடு திருத்தி அளித்திருக்கிறது என்பதற்கான சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள். குடிநீர் அவர்களுக்கு கிடைக்கிறது, தடையில்லாத மின்சாரம் கிடைக்கிறது, பெண்கள் இலவசமாக பேருந்துகளில் பயணம் செய்கிறார்கள், மழைநீர்; கழிவுநீர் அகற்றம் தொடர்ச்சியாக நடைபெறுகிறது. இந்த அடிப்படை காரணங்கள் தான் இந்த வெற்றிக்கு ஒரு மூலகாரணம். அதேபோல் ராகுல் காந்தியினுடைய இந்திய ஒற்றுமை பயணம் தமிழகத்தில் ஒரு பெரிய எழுச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் குடும்பமும் அரசியல் சார்ந்த குடும்பம். நூறாண்டு காலமாக ஈரோடுக்கும் தமிழகத்திற்கும் அரும்பணியாற்றிய குடும்பம். இவைகளெல்லாம் சேர்ந்து மகத்தான வெற்றியை கொடுத்தது. குறிப்பாக தமிழக முதல்வரின் அயராத உழைப்பு; இந்த தேர்தலில் அவர் காட்டிய மிகப்பெரிய ஆர்வம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அசைவையும் கூர்ந்து கவனித்து இந்த வெற்றியை எங்களுக்கு ஈட்டிக் கொடுத்திருக்கிறார்.

 

பாஜகவாக இருந்தாலும் அதிமுகவாக இருந்தாலும் ஒரு தெளிவு இல்லாமல் இருந்தார்கள். எங்கள் கூட்டணிக்கு ஒரு தெளிவு இருந்தது. எங்கள் கொள்கைகளை நாங்கள் அழுத்தமாகச் சொன்னோம். ஆனால், அவர்களுக்கு தெளிவில்லை. சலனத்தோடு இருந்தார்கள். சில இடங்களில் மோடியின் படங்களை அதிமுக பயன்படுத்தினார்கள். சில இடங்களில் பாஜகவின் கொடியைக் கூட அவர்கள் பயன்படுத்தத் தயாராக இல்லை. எனவே, இவையெல்லாம் எங்களுடைய வெற்றிக்கு அடிப்படைக் காரணம்.  ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் காங்கிரஸில் ஒரு மூத்த தலைவர். அயராது உழைக்கக் கூடியவர்'' என்றார்.

 

அதனைத் தொடர்ந்து பேசிய ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், ''அதிமுக சார்பில் போட்டியிட்ட தென்னரசு வாக்குப்பதிவு முடிந்த நாளன்று மாலையில் பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, தேர்தல் சுமூகமாக முடிந்தது. தேர்தல் ஆணையம் மிக நியாயமாக நடந்து கொண்டது. எந்த தவறும் நடக்கவில்லை. ஈரோட்டை பொறுத்தவரை நாங்கள் எல்லாம் நாகரீகமானவர்கள். எந்த தவறும் ஏற்படவில்லை என்பதை தெளிவாகச் சொல்லியிருந்தார். இரண்டு நாட்களுக்குப் பின் தோற்றுவிட்ட பிறகு எடப்பாடி பழனிசாமி சொல்லிக் கொடுத்ததை அவர் சொல்கிறார்'' என்றார்.