
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியப் பொதுச்செயலாளர் பேபி இன்று (20-04-25) நேரில் சந்தித்தார்.
அதன் பின்னர் பேபி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் பேசுகையில், “முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினேன். தமிழ்நாட்டில் வலுவான கூட்டணியை வழிநடத்துவதற்கு மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தேன். மதுரையில் நடந்த மார்க்சிஸ்ட் மாநாடு வெற்றிகரமாக நடந்து முடிந்தது. தமிழ்நாட்டு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே இருப்பதால் மக்களை ஒருங்கிணைப்பது அவசியமான ஒன்று.
திமுக கூட்டணி வலுவாக இருப்பதால் தமிழ்நாட்டில் மதவாத கட்சிகள் காலூன்ற முடியவில்லை. சிறுபான்மையினர் மீதான ஒன்றிய அரசின் தாக்குதலுக்கு வக்ஃப் மசோதாவே ஒரு முன்னுதாரணம். மாநில உரிமைகளை காப்பதற்கான சட்டப்போராட்டத்தில் திமுக அரசு முன்னணியில் நின்று மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற ஜனநாயக கூட்டணியை இன்னும் வலுப்படுத்துவது என முடிவு செய்துள்ளோம். அரசியலமைப்புக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடும் பா.ஜ.கவுடன் அதிமுக கைகோர்த்துள்ளது. அதிமுக - பா.ஜ.க இடையே சந்தர்ப்பவாத கூட்டணி அமைந்திருப்பதை பற்றி முதல்வரும் நானும் விவாதித்தோம்” என்று தெரிவித்தார்.