
சென்னையில் அதிமுக சார்பில் திமுகவை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசுகையில், ''திமுக ஆட்சிக்கு வந்து நான்காண்டு காலம் நிறைவு செய்து ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த நான்காண்டு காலத்தில் தமிழகத்தில் ஆளுகின்ற திமுக, அதனுடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்ன பெரிய திட்டத்தை கொண்டு வந்தார். எதுவுமே இல்லை. சாதனை... சாதனை... என்று சொல்கிறார். உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வர் ஆக்கியது தான் இவர்களின் சாதனை. வேறு எந்த சாதனையும் இந்த ஆட்சியில் பார்க்க முடியவில்லை. இந்த ஆட்சியில் ஏழைகளுக்கு என்ன திட்டங்களை கொண்டு வந்தீர்கள். நாட்டு மக்களுக்கு என்ன பெரிய திட்டத்தை கொண்டு வந்து நிறைவேற்றுநீர்கள். ஒன்றுமே கிடையாது. குடும்பத்தில் இருப்பவர்கள் ஆட்சி அதிகாரத்தில் தொடர வேண்டும் இதுதான் உங்களுடைய நிலைப்பாடு.
2026 சட்டமன்றத் தேர்தல் குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டுகின்ற தேர்தல்; வாரிசு அரசியலுக்கு முடிவு கட்டுகின்ற தேர்தல்; மன்னராட்சிக்கு முடிவு கட்டும் தேர்தல். மக்கள் விரோத ஆட்சி. ஒட்டுமொத்த தமிழ் மக்களே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் இந்த ஆட்சியை எப்பொழுது அகற்றும் நேரம் வரும் என காத்துக் கொண்டிருக்கிறார்கள். நாட்டு மக்களை பற்றி சிந்திக்காமல் வீட்டு மக்களை பற்றி சிந்திக்கின்ற உங்களுக்கு 2026 சட்டப்பேரவை தேர்தலில் தமிழ்நாடு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். பாஜகவுடன் 2031 ஆம் ஆண்டு வரை கூட்டணி இல்லை என சொல்லிவிட்டு எப்படி நீங்கள் 2031 ஆம் ஆண்டு வரை வைத்தீர்கள் என்று என்னை நோக்கி மு.க.ஸ்டாலின் கேட்கிறார். ஸ்டாலின் அவர்களே இது என் கட்சி எங்களுடைய ஒத்த கருத்துடைய கட்சிகளை எல்லாம் ஒன்றாக இணைத்து வாக்குகள் சிதறாமல் வெற்றி பெறுவதற்காக அமைக்கப்பட்ட கூட்டணி எங்கள் கூட்டணி. உங்களுக்கு ஏன் கோபம் வருகிறது.
ஸ்டாலினுக்கு தேர்தல் ஜுரம் வந்துவிட்டது. எங்கள் கூட்டணி வலிமையான கூட்டணி; வெற்றி கூட்டணி. எங்கள் கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் சேர இருக்கிறார்கள். எங்கள் கூட்டணியில் பல கட்சிகள் சேர்கின்ற பொழுது ஸ்டாலின் தெரிந்து கொள்வார் அதிமுக எவ்வளவு பலமான கூட்டணி அமைத்திருக்கிறது என நீங்கள் உணர்வீர்கள் நாங்கள் பாஜகவுடன் கூட்டணி வைக்கும் போதுகூட உள்துறை அமைச்சர் அமித்ஷா செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளிக்கும் போது குறிப்பிட்டார் 'அதிமுக-பாஜக கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை தாங்கும்' என்று சொன்னார். இதனால் ஸ்டாலின் பதறுகிறார். அவர் எண்ணினார் அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைக்காது என எண்ணினார். அவருடைய எண்ணம் எல்லாம் கானல் நீர் ஆகிவிட்டது.
திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் ஏதேதோ பேசுகிறார்கள். நாங்கள் கூட்டணி வைத்தால் நீங்கள் ஏன் பதறுகிறீர்கள். சில கட்சிகள் நாங்கள் வரலாற்று பிழை செய்து விட்டோம் என்று சொல்கிறார்கள். நாங்கள் வெற்றிக்கு கூட்டணி அமைக்கின்றோம்'' என்றார்.