





சென்னை நேரு மைதானத்தில் நடைபெற்ற 'மாநில சுயாட்சி நாயகருக்கு மகத்தான பாராட்டு' நிகழ்வில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ''பெரும்பாலும் பாராட்டு விழாவுக்கு நான் ஒத்துக் கொள்வதில்லை. இதற்கு ஓகே சொன்னதற்கு காரணம் உச்சநீதிமன்ற தீர்ப்புக்காக தான். சமூக நீதி; மாநில சுயாட்சி கிடைக்கும் என திமுகவுக்கு நம்பி வாக்களித்த மக்கள் அனைவரும் நாயகர்கள் தான். உரக்கச் சொல்லப்படாமல் விடப்படும் வெற்றியின் அமைதியின் மீது பொய்கள் நாற்காலி போட்டு அமரும். அது நாட்டுக்கு நல்லதல்ல. அதனால் தான் இந்த விழா. உங்கள் அன்பிற்கும் நம்பிக்கைக்கும் இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் இருக்கக்கூடிய எல்லா மாநிலங்களுக்கும்; இந்திய மக்களுக்கும் சுப்ரீம் கோர்ட் மூலமாக தமிழ்நாடு பெற்று தந்திருக்க கூடிய வெற்றி. இங்கு நிறைய மாணவர்கள் இருக்கிறீர்கள் நாளைய தலைவர்கள் நீங்கள். நீங்களே யோசித்துப் பாருங்கள் முதலமைச்சராகி மக்களுக்கு தேவையான திட்டங்களை தீட்டினால் ஆஃப்ட்ரால் ஒன்றிய அரசின் ஏஜென்ட்டாக நியமிக்கப்பட்ட டெம்பரவரியாக இங்கு தங்கி இருக்கக்கூடிய ஒரு கவர்னர் அதைத் தடுத்து நிறுத்த முடியும் என்றால் மக்கள் போடுகின்ற ஓட்டுக்கு என்ன மரியாதை? எலக்சன் எதுக்கு நடக்கணும்?
ஆளுநர் பதவி என்பது எந்த பயனும் இல்லாத ரப்பர் ஸ்டாம்ப் போஸ்ட். நீங்கள் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் உங்கள் காலேஜ் இருக்கின்ற இடம் மாநில அரசு உடையது. உங்கள் ஆசிரியர்களுக்கு சம்பளம் தருவது மாநில அரசு. மாணவர்களுக்கான எல்லா வசதிகளையும் செய்து தருவது மாநில அரசு. ஆனால் உங்கள் பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்தை நிர்வகிக்கின்ற துணைவேந்தரை ஆளுநர் நியமிக்க வேண்டும் என்றால் அது எந்த வகையில் நியாயம். அதனால்தான் நீதிமன்றத்துக்கு போவோம் என முடிவெடுத்தேன்.
உச்சநீதிமன்றத்தின் நீதியரசர்கள் பர்திவாலா, மகாதேவன் ஆகியோர் அமர்வு அரசியலமைப்பின் வழி நின்று தெளிவான தீர்ப்பை வழங்கி பல ஆண்டுகளாக நிலவுகின்ற ஒரு பிரச்சனைக்கு முடிவு கட்டிருக்கிறார்கள். சிம்பிளா சொன்னால் பூனைக்கும் மணிக்கட்டி உள்ளார்கள். மாணவர்களாகிய உங்களுக்கு தெரியும் ப்ராஜெக்ட் சப்மிட் பண்ணுவதற்கு ஒரு டெட்லைன் கொடுப்பார்கள். அதுபோல சட்டமன்றம் பாஸ் பண்ணக்கூடிய சட்டத்தின் மேல் ஒரு மாதத்திற்குள் ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என டெட்லைன் செட் பண்ணி இருக்கிறார்கள். அதிலும் அந்த தீர்ப்பில் என்னென்ன சொல்லி இருக்கிறார்கள் என்றால் மசோதாவை நிறுத்தி வைப்பதாக இருந்தால் மூன்று மாதத்திற்குள் அரசுக்கு தெரிவிக்க வேண்டும்; குடியரசு தலைவருக்கு அனுப்புவதாக இருந்தால் மூன்று மாதத்திற்குள் செய்ய வேண்டும்; ஒரு சட்ட மசோதா இரண்டாவது முறையாக ஆளுநருக்கு வந்தால் உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும் என சொல்லிவிட்டது உச்சநீதிமன்றம்.
தமிழ்நாடு ஆளுநர் ஒப்புதல் அளிக்காத 10 மசோதாக்களும் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி உச்ச நீதிமன்றம் ஒப்புதல் தந்து தீர்ப்பு வழங்கி விட்டது. ஆளுநருக்கு குடியரசுத் தலைவருக்கும் காலக்கெடு கொடுத்தது மிகப்பெரிய வெற்றி. நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசுக்கும் மதிப்பளிக்க கூடிய வகையில் ஆளுநர் செயல்பட வேண்டும் என தீர்ப்பு வழங்கியிருக்கிறார்கள். இப்படி ஒரு கல்லில் பல மாங்காய்களை அடித்திருக்கிறோம். நான் கேட்கிறேன் பிரதமரின் உரிமையை பிரசிடெண்ட் எடுத்துக் கொண்டால் சும்மா இருப்பார்களா? இந்த தீர்ப்பு வந்ததும் தாங்கிக்க முடியாமல் துணை குடியரசுத் தலைவர் சொல்கிறார், நாடாளுமன்றம் பெரிய அதிகாரம் கொண்டது' என சொல்கிறார்.
நமக்கும் ஆளுநருக்கும் தனிப்பட்ட ஏதாவது பகை இருக்கிறதா? எதுவும் இல்லை. சமீபமாக கூட ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சிக்கு போயிருந்தேன். நன்றாகத்தான் பேசி விட்டு வந்தோம். அரசியலில் கொள்கை மாறுபாடுகள் இருந்தாலும் மனிதர்களுக்குள் பண்பாடு நட்புணர்வு வேண்டும். நாளைக்கு இதே மாதிரி இடத்தில் வேறொருவர் வந்து அவர்களும் இதையே செய்தால் அவர்களுடைய செயல்பாடுகளையும் எதிர்க்கத்தான் போகிறோம்'' என்றார்.