Skip to main content

'உடைகிறதா பாமக?'-மோதலில் ராமதாஸ் அன்புமணி; அதிர்ச்சியில் தொண்டர்கள்

Published on 28/12/2024 | Edited on 28/12/2024
Ramdas Anbumani, who was hit; 'pmk it break?'

புதுச்சேரி மாநிலம் வானூரில் பாமக பொதுக்குழு கூட்டம் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் பாமக தலைவர் அன்புமணி, கவுரவ தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் கலந்துகொண்டனர். இந்த பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து கட்சியின் நிர்வாகிகளுக்கு பொறுப்புகளையும் ராமதாஸ் வழங்கினார்.

அப்போது தொண்டர்கள் மத்தியில் பேசிய ராமதாஸ், பாமக கட்சியின் மாநில இளைஞரணி தலைவராக முகுந்தன் பரசுராமன் என்பவரை நியமித்து அறிவிப்பினை வெளியிட்டார். ஆனால், ராமதாஸ் அந்த அறிவிப்பை அறிவித்து கொண்டிருக்கும் போதே மேடையில் இருந்த அன்புமணி இடைமறித்து முகுந்தன் கட்சியில் சேர்ந்தே 4 மாதங்கள்தான் ஆகிறது. அவருக்கு என்ன அனுபவம் இருக்கு? என்று கேள்வி எழுப்பினார்.

இதனால் ஆத்திரமடைந்த ராமதாஸ், “நான் யாரை நியமிக்கிறேனோ அவர்கள்தான் நிர்வாகிகள். நான் உருவாக்கிய கட்சி. நான் சொல்வதைத்தான் அனைவரும் கேட்க வேண்டும். நான் சொல்வதுதான் நடக்க வேண்டும். பிடித்தால் இருங்கள்; இல்லையென்றால் விலகிக்கொள்ளுங்கள். மீண்டும் சொல்கிறேன் முகுந்தன் மாநில இளைஞர் சங்க தலைவராக நியமிக்கப்படுகிறார்” என்று கோவமாக கூறினார். இதனைத் தொடர்ந்து அன்புமணி, “எனக்கு என்று தனியாக பனையூரில் அலுவலகம் இருக்கிறது. என்னை பார்க்க வேண்டும் என்றால் அங்கு வாருங்கள்” என்று கூறிவிட்டு தொலைப்பேசி எண்ணையும் அறிவித்தார்.

''நீ இன்னொரு அலுவலகம்  திறந்துக்கோ, நடத்திக்கோ. முகுந்தன் உனக்கு உதவியா இருக்க போறாரு. எனவே இதை யாரும் மாற்ற முடியாது'' என ராமதாஸ் காட்டமாக தெரிவித்தார்.

முகுந்தன் ராமதாஸின் மூத்த மகள் காந்திமதியின் மகனும், அன்புமணியின் மருமகனும் என்பது குறிப்பிடத்தக்கது. அன்புமணி ராமதாசுக்கும்  ராமதாசுக்கு ஒரே மேடையில் ஏற்பட்ட இந்த கருத்து மோதல் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அன்புமணி தனி அலுவலகம் மற்றும் தொடர்பு எண்ணை அறிவித்திருப்பது பாமகவில் பிளவு ஏற்படுவதற்கான அறிகுறியா என கலக்கத்தில் உள்ளனர் பாமக தொண்டர்கள்.

சார்ந்த செய்திகள்