
ஜம்மு - காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதிக்குச் சென்ற சுற்றுலாப் பயணிகள் மீது கடந்த 22ஆம் தேதி (22.04.2025) பயங்கரவாதக் கும்பல் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தியது. இதில் 26 பேர் பரிதாபமாகக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இந்தியா மட்டுமல்ல பல்வேறு நாட்டுத் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து, பஹல்காம் உள்ளிட்ட ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு தீவிர கண்காணிப்பில் இந்திய ராணுவப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாகப் பாகிஸ்தானுக்கு எதிராக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் உத்தரப் பிரதேசத்தில் பிரியாணி கடை ஊழியரைக் கொன்று விட்டு பஹல்காம் தாக்குதலுக்கு பழிவாங்கியதாக இளைஞர் ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலம் ஆக்ராவில் குலாம் அலி(27) என்பவர் தனது உறவினர் நடத்தி வரும் பிரியாணி கடை ஒன்றில் ஊழியராக வேலைப் பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் திடீரென அந்த கடைக்கு வந்த மனோஜ் சௌத்ரி என்ற இளைஞர் குலாம் அலியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார். மேலும் கடையில் பணியாற்றிய சைஃப் அலி என்பவரையும் துப்பாக்கியால் சுட்டுள்ளார். அதில் அவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது தொடர்பாக வீடியோ வெளியிட்ட மனோஜ் சௌத்ரி, காஷ்மீர் பஹல்காம் தாக்குதலுக்கு பழிவாங்கவே சுட்டதாக தெரிவித்திருக்கிறார். மேலும் தான் சத்ரிய கௌ ரக்ஷக் தள் என்ற பசு பாதுகாப்பு அமைப்பை சேர்ந்தவர் என்று கூறியிருக்கிறார். இதனைத் தொடர்ந்து மனோஜ் சௌத்ரியை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிராஅக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மனோஜ் சௌத்ரிக்கும் பசு பாதுகாப்பு அமைபுக்கு எந்த தொடர்பு இல்லை என்று போலீசார் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.