Skip to main content

பாமகவினரை அதிர்ச்சியடைய வைத்த, அமைச்சரின் பரபரப்பு பேச்சு..!

Published on 24/03/2021 | Edited on 24/03/2021

 

Minister's sensational speech that shocked the people of PMK

 

அதிமுக அரசால், வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அந்த இடஒதுக்கீடு தற்காலிகமானது எனவும், 6 மாதம்தான் செயல்படும் என்றும் அமைச்சர் உதயகுமார் பிரச்சாரத்தில் தெரிவித்துள்ளார். மேலும், மீண்டும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அதன் அடிப்படையில்தான் இடஒதுக்கீடு வழங்கப்படும் எனக் கூறினார். இது பாமகவினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

 

நேற்று (23.03.2021) மதுரை, திருமங்கலம் அருகே சவுடார்பட்டியில் அத்தொகுதி அதிமுக வேட்பாளரான அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது, “சட்டசபையில் முதல்வர் அறிவித்த 20% வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டைப் பற்றி பலரும் பேசி வருகின்றனர். அது தாற்காலிகமானதுதான், தற்போது மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்துகொண்டிருக்கிறது. அதனால் 6 மாத காலம் தற்காலிக மசோதாவாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது, அது 6 மாத காலம் மட்டுமே செயல்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். 68 சமுதாயங்களைச் சேர்ந்தவர்களுக்கு 7.5 சதவீத என்றும், குறிப்பிட்ட ஒரு சமுதாயத்திற்கு 10.5 சதவீதம் என்றும் இதர சமுதாயத்திற்கு 2.5 சதவீதம் இடஒதுக்கீடு என கூறி வருகின்றனர். ஆனால் அது உண்மையல்ல. நான் சவுடார்பட்டியிலிருந்து சத்திய செய்து சொல்கிறேன். மீண்டும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதன் அடிப்படையில்தான் இடஒதுக்கீடு வழங்கப்படும்” என்று கூறினார்.

 

கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி சட்டப்பேரைவையில் வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்தார். பாமக மற்றும் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த அமைப்பினர், பல கட்ட போராட்டங்களை நடத்தி வந்ததன் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார். இந்நிலையில், இந்த இடஒதுக்கீடு 6 மாதங்களுக்கான தற்காலிக ஏற்பாடு என அமைச்சர் உதயகுமார் பிரச்சாரத்தில் கூறியது, கூட்டணிக் கட்சியான பாமவுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்