
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ரெட்டியார் சத்திரம் ஒன்றியத்தில் இருக்கும் ஸ்ரீராமபுரம் பேரூர் கழக செயலாளராக 20 ஆண்டுகளுக்கு மேலாக இருந்தவர் எ.ராஜா (எ) அப்துல் ரகுமான். இவர் பேரூராட்சி மன்ற தலைவர் உட்பட பல பதவிகளில் இருந்தார். இவருடைய மனைவி சகிலா ராஜா தொடர்ந்து ஸ்ரீராமபுரம் பேரூராட்சியில் பேரூராட்சி மன்ற தலைவராக பதவியில் உள்ளார். உடல்நிலை குறைவால் பேரூர்கழக செயலாளர் ராஜாவின் மறைவு செய்தி கேட்ட அமைச்சர் ஐ.பெரியசாமி உடனடியாக மருத்துவமனைக்கு வந்து அவருடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

அதன்பின்னா தொடர்ச்சியாக திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து திமுக நிர்வாகிகளும் ஸ்ரீராமபுரத்திற்கு வந்து மறைந்த ராஜாவின் உடலுக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்கள். அவருடைய உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட பின்பு அனைத்து கட்சிகள் சார்பாக இரங்கல் தீர்மானம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ரெட்டியார்சத்திரம் ஒன்றிய முன்னாள் பெருந்தலைவர் சிவகுருசாமி தலைமை தாங்கினார்.
இரங்கல் தீர்மானத்தின் போது வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்தி ராஜன் பேசும்போது, “பாராளுமன்ற தேர்தலின் போது அயராது உழைத்த கட்சி நிர்வாகியை இழந்து விட்டேன்” என்றார். அதன்பின்னர் பேசிய திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார், “நான் அரசியலுக்கு வந்த போது ரெட்டியார் சத்திரம் பகுதியில் என்னோடு கட்சி பயாற்றி கட்டுப்பாடோடு கட்சியை வளர்த்த எனது சகோதரனை இழந்துவிட்டேன்” என்று கூறி கண்ணீர் விட்டபோது அனைவரும் கண்ணீர் விட்டனர்.

இறுதியாக ஊரக வளர்ச்சி த்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பேசும் போது, “மறைந்த பேரூர்கழக செயலாளர் ராஜா இப்பகுதியில் திமுகவை வளர்த்ததில் அவருடைய பங்கு அதிகம் உள்ளது. கட்சி சொல்கின்ற கட்டளைகளை நிறைவேற்றுவதில் முதன்மையானவர். இங்குள்ள திருமலை ராயபுரம் பள்ளியாக இருந்தாலும் சரி, மருத்துவமனை கட்டிடமாக இருந்தாலும் சரி பேரூராட்சியின் வளர்ச்சியில் அதிக அக்கரை கொண்டவர்கள் ராஜா என்னுடைய ஒவ்வொரு பிறந்த நாள் அன்றும் ஜனவரி 6ம் தேதி தொடர்ந்து கண் சிகிச்சை முகாமை நடத்தி கட்சிக்கு நற்பெயரை ஏற்படுத்திக் கொடுத்தவர் மறைந்த பேரூர் கழக செயலாளர் ராஜா அவருடைய மறைவு எனக்கு மட்டுமின்றி திண்டுக்கல் மாவட்ட திமுகவினர் அனைவருக்கும் பெரிய இழப்பாகும்.
ராஜா கலந்துகொள்ளாத திமுக நிகழ்ச்சிகளே கிடையாது. ஒரு பொதுக்கூட்டமாக இருந்தாலும் சரி அரசு விழாவாக இருந்தாலும் சரி அவருடைய கட்டுப்பாட்டில்தான் அனைத்தும் நடக்கும். அந்த அளவிற்கு கடமை கண்ணியம் கட்டுப்பாட்டுடன் கட்சியை கட்டிக்காத்தவர் ராஜா” என்றபோது அமைச்சர் ஐ.பெரியசாமி கண்கலங்கியபடி பேசினார்.
இதைப் பார்த்த அனைவரும் கண்கலங்கி விட்டனர். மறைந்த ராஜாவின் ஆன்மா சாந்தியடைய இறை வனை வேண்டுவ தோடு அவரது குடும்பத்தாருக்கு கழகம் என்றும் உறு துணையாக இருக்கும் கட்சியின் துணைச்செயலாளர் என்ற முறையில் கட்சித் தலைவர் மற்றும் நிர்வாகிகள் சார்பாக ஆழ்ந்த இறங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறினார். ராஜாவின் மறைவுக்கு மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கட்சி பொறுப்பாளர்கள் தொண்டர்களும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.