
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகாவில் மாட்டு வண்டிகள் மூலமாகவும், அறந்தாங்கி பகுதியில் டாரஸ் லாரிகள் மூலமாகவும் மணல் திருடுவது மாமூலாக நடந்து வருகிறது. மணல் மாட்டு வண்டிகளை பிடிக்கும் அதிகாரிகள், திருட்டு மணல் ஏற்றிச் செல்லும் டாரஸ் லாரிகளுக்கு சல்யூட் அடித்து அனுப்பி வைப்பது வாடிக்கையாகிவிட்டது. இது தெரியாமல் புதிதாக பணிக்கு வந்த போலீசார், நள்ளிரவில் மணல் லாரிகளை பிடித்தால் கூட அடுத்த 5, 10 நிமிடங்களில் உயர் அதிகாரிகளிடம் இருந்து வரும் போன் கால்களுக்கு பணிந்து திருட்டு மணல் லாரிகளுக்கு சல்யூட் அடித்து அனுப்பிவிடுவார்கள். இதில் மாவட்டத் தலைமையிடத்து காவலர்கள் சிலரும் ஆடியோ ஆதாரங்களுடன் சிக்கியுள்ளனர்.
இந்த நிலையில் தான், இன்று (09-05-25) இரவு அறந்தாங்கி அருகே உள்ள ஆளப்பிறந்தான் கிராமத்தில் ஒரு பொக்கலின் மூலம் 3 டாரஸ் லாரிகளில் மணல் திருடப்படுவதாக அறந்தாங்கி காவல்நிலைய உதவி ஆய்வாளர் சரவணனுக்கு தகவல் வந்துள்ளது. இதனால் அவர், சில போலீசாருடன் சென்று 4 வாகனங்களையும் கொத்தாக அள்ளி வந்து காவல் நிலையத்தில் நிறுத்தியுள்ளார். இந்த வாகனங்கள், அறந்தாங்கி பகுதி மணல் மாஃபியாவிற்காக மணல் திருடியது என்பது தெரிய வந்தது. மணல் டாரஸ் லாரிகள், பொக்கலினை காவல் நிலையம் கொண்டு சென்ற தகவல் அறிந்து இரவென்றும் பாராமல் வேகமாகச் சென்ற அறந்தாங்கி தாலுகா வருவாய் அதிகாரி ஒருவர், ‘இந்த மணலுக்கு பர்மிட் இருக்கு வண்டியை விடுங்க’ என்று கூறியுள்ளார். அதற்கு, ‘பர்மிட்டே இல்லை’ என்று உதவி ஆய்வாளர் சரவணன் பதில் தெரிவித்துள்ளார். அதற்கு, சீசிங் பர்மிட் போட்டிருக்கு என்று பர்மிட் இல்லாமலேயே மிரட்டி உருட்டி லாரிகளை தாலுகா அலுவலகம் கொண்டு வந்துவிட்டார் அந்த தாலுகா வருவாய் அதிகாரி.
திருட்டு மணல் லாரிகளை தங்கள் வளாகத்தில் வைத்துக் கொண்டே, விடுமுறையில் உள்ள கோட்டாட்சியரின் பி ஏ மூலம் அவசரமாக பர்மிட் தயார் செய்து வாங்கிக் கொண்டு அடுத்த அரைமணி நேரத்தில் போலீசார் பிடித்து வந்த திருட்டு மணல் டாரஸ் லாரிகளை வருவாய்த்துறையினர் வழக்கம் போல சல்யூட் அடித்து அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்கள், ‘இரவில் எப்போ, எங்கே மணலுக்கு சீசிங் பர்மிட் போட்டாங்க?. அது அறந்தாங்கியில மட்டும் தான் நடக்கும். எல்லாம் மாமூல் படுத்தும்பாடு. புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் ரகுபதி நேற்று தான் கனிமவளத்துறை அமைச்சரானார். ஒரு நாள் கூட முழுதாக முடியவில்லை, அவரது மாவட்டத்திலேயே இப்படி பகிரங்கமாக போலீசாரை மிரட்டி திருட்டு மணல் லாரிகளையும் பொக்கலினையும் வருவாய்த்துறையினர் மீட்டு அனுப்பியுள்ளனர். இப்படித்தான் அமைச்சரின் சொந்த தொகுதியான திருமயம் கனிம கொள்ளைக்கு எதிராக செயல்பட்ட ஜபகர் அலியை கணிமவள கொள்ளையர்கள் லாரி ஏற்றி கொன்றார்கள். இப்படியே கனிமவளத்துறை அமைச்சரின் மாவட்டத்திலேயே இப்படி கனிமங்கள் அதிகாரிகள் துணையோடு கொள்ளை. இனியுள்ள குறை காலத்தை எப்படி அமைச்சர் ஓட்டப்போறாரோ’ என்கின்றனர்
கனிமவளத்துறை அமைச்சர் ரகுபதி இந்த சம்பவத்தில் நடவடிக்கை எடுத்து திருட்டு மணல் டாரஸ் லாரிகளையும் பொக்கலினையும் மீண்டும் பறிமுதல் செய்யவில்லை என்றால் அவருக்கும் அவரது துறைக்கும் தான் அவப்பெயர் ஏற்படும். துறையை நம்பிக் கொடுத்த அரசுக்கும் தான் அவப்பெயர் வரும்.