
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்னாளப்பட்டி பைபாஸ் சாலையில் சேரன் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஒன்று அமைந்துள்ளது. ஆத்தூர் தொகுதியில் உள்ள பள்ளிகளில் தொடர்ந்து 18 வருடங்களாக 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளியாக சேரன் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வரலாற்று சாதனையை படைத்துள்ளது. இந்த நிலையில், தான் நேற்று வெளியான 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் சேரன் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளனர்.
பள்ளி மாணவர்களில் முதலிடம் பிடித்த மாணவி எம். முத்து பிரஸிகா 600க்கு 596 மதிப்பெண்கள் பெற்று திண்டுக்கல் கல்வி மாவட்டத்தில் முதலிடமும், மாநில அளவில் 4ம் இடமும் பள்ளியில் முதல் இடமும் பெற்றார். அவரை சின்னாளபட்டிக்கு வந்த ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி நேரில் அழைத்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்து பாராட்டினார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, ‘பெண்கள் சாதனை படைக்கும் காலமாக உள்ளது. அனைத்து துறைகளிலும் பெண்கள் முன்னேறி வருகிறார்கள். அதற்கு காரணம் திராவிட மாடல் ஆட்சி நாயகன், கழகத்தலைவர் மு.க. ஸ்டாலின் தான். இலவச பேருந்து வசதி, பள்ளி மற்றும் கல்லூரி படிக்கும் பெண்களுக்கு உதவித்தொகை வழங்கி வருவதால் பெண் கல்வி பள்ளி படிப்புடன் நிற்காமல் கல்லூரி வரை தொடர்கிறது” எனப் பேசினார். சாதனை படைத்த மாணவி முத்து பிரஸிகாவை கணக்கு தணிக்கையாளராக படிக்க வேண்டும் என கூறிய போது அமைச்சர் ஐ.பெரியசாமி சிறந்த துறையை படியுங்கள் என்றார்.
இந்நிகழ்ச்சியின் போது திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ஆத்தூர் நடராஜன், ஆத்தூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் முருகேசன், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் விவேகானந்தன், அகரம் பேரூராட்சி மன்றத் தலைவர் நந்த கோபால், தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் பாறைப்பட்டி வாஞ்சி நாதன், பேரூராட்சிமன்ற தலைவர் பிரதீபா கனகராஜ், துணைத்தலைவர் ஆனந்தி பாரதிராஜா, அரசு ஒப்பந்த காரர்கள் விக்னேஷ், அரவிந்தன், மெல் வின், ஜீசஸ் அகஸ் டீன், மற்றும் சேரன் பள்ளி ஆசிரியைகள் உடன் இருந்தனர்.