
இளைஞர்களே… இந்தப் பயணத்தில் நீங்களும் இணையுங்கள்... கண்ணியமான அரசியலுக்கும், களங்கமற்ற தலைமைக்கும் தோள் கொடுங்கள். ஆதாயமில்லா மக்கள் பணிக்கும், சமரசமில்லா மக்கள் நலனுக்கும் கரம் கொடுங்கள் என்று அன்போடு அழைக்கிறேன் என்று மதிமுகவின் 32-ஆம் ஆண்டு தொடக்கத்தில் அக்கட்சியின் முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் “நான்கே நான்கு ஆசை வார்த்தைகள் கூறினால், ஆயிரமாயிரம் பேர்கள் அணி திரள்வார்கள் என்ற நிலையில், தலைவர் வைகோ அவர்கள் தனது பயணத்தை தெளிவாக வரையறுத்தார். என்னோடு வந்தால் பட்டமோ பதவியோ கிடைக்காது. இது முள்ளும் கல்லும் நிறைந்த பாதை. செந்நீரும் கண்ணீரும் சிந்த நேரிடும். சிறைச்சாலைக்கும் செல்ல நேரிடும். அதற்கு சித்தமானவர்கள் மட்டும் என் பின்னால் வாருங்கள்.”என்று கூறி, திராவிட இயக்கத்தின் கொள்கை வலிமையுள்ள தூணாக, மாபெரும் இயக்கமாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கினார்.
உயர் பதவிகள் ஒரு இயக்கத்தை தேடி வந்தால், அது அந்த இயக்கத்தின் தலைமைக்கு தான் சென்று சேரும் என்ற விதியை, அரசியலில் அதிசயமாக திகழும் மதிமுக மாற்றி அமைத்தது. தலைவர் வைகோ அவர்களுக்காக வந்த ஒன்றிய அமைச்சர் பதவியை தனது சகாக்களுக்கு பெற்றுக் கொடுத்து அழகு பார்த்தவர் தலைவர் வைகோ. இதுதான் மதிமுகவின் உயர்நிலை ஜனநாயகமாக கருதப்படக் கூடிய அளவு உன்னதமான இடத்தை பெற்றது.
நாடாளுமன்றம், சட்டமன்றம் மற்றும் மாமன்றம் உள்ளிட்ட உள்ளாட்சி மன்றங்களுக்கும் தனது கழகக் குரலை ஒலிக்க சரியான தோழர்களை தேர்ந்தெடுத்து அனுப்பியது மதிமுக. வாய்ப்பு கிடைக்கும் தருணங்களில் எல்லாம் தன் இருப்பை மக்களுக்காக பயன்படுத்த தவறியதே இல்லை இந்த இயக்கம்.
பணபலமோ, சினிமா கவர்ச்சியோ, சாதி, மத, இனவாத அரசியலோ இல்லை. ஆட்சி அதிகாரமும் இல்லை. ஆனால், அரசியலில் நேர்மை, பொதுவாழ்வில் தூய்மை, இலட்சியத்தில் உறுதி ஆகியவை மதிமுகவின் அடையாளங்களாக விளங்கின. இவை தான் மக்களை மதிமுக பக்கம் ஈர்த்தது; எப்போதும் மக்கள் பக்கமே மதிமுகவை நிற்கச் செய்தது.
மதிமுக, தனது பயணத்தில், இன்று (06.05.2025) மற்றொரு மைல்கல்லாக 32 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்து நிமிர்ந்து நிற்கிறது. பல்வேறு சந்தர்ப்பங்களில், பொதுமக்கள் நலனுக்காக பல வெற்றிகளை பெற்றிருக்கிறது. அந்த நீண்ட பட்டியலில் முக்கியமான சில…
1. தென் மாவட்டங்கள் பசி பட்டினியால் பேரழிவை சந்திக்க இருந்த நிலையில், முல்லை பெரியாறு அணை பிரச்சனைக்கு ஐந்து மாவட்ட மக்களை திரட்டி, கட்சி அடையாளங்களை துறந்து போராடி வென்ற இயக்கம் மறுமலர்ச்சி திமுக.
2. தூத்துக்குடி நாசக்கார நச்சு ஆலை ஸ்டெர்லைட்டுக்கு எதிராய், அது கொண்டுவரப்படும் என்ற அறிவிப்பு வந்த காலந்தொட்டு, அதை தீர்க்கமாக எதிர்த்து நீதிமன்றம் நாடாளுமன்றம் மக்கள் மன்றங்களில் போராடி வென்ற இயக்கம் மறுமலர்ச்சி திமுக. அந்த நச்சு ஆலை மூடப்பட்ட வழக்கின் தீர்ப்பில் நீதி அரசர்களால் பாராட்டப்பட்ட பெயர் வைகோ.
3. ஐநா சபையில் யுனெஸ்கோவால் (UNESCO World Heritage Site) உலக பாரம்பரிய சின்னமாக அங்கீகரிக்கப்பட்ட மேற்குத் தொடர்ச்சி மலையில் தேனி மாவட்டத்தில் நியூட்றினோ ஆய்வகம் அமைக்க ஒன்றிய அரசால் திட்டமிடப்பட்டு நிதி ஒதுக்கிய பின்பும் அதனை தடுத்து நிறுத்திய ஒரே இயக்கம் மறுமலர்ச்சி திமுக.
4. சீமைக்கருவேல மரங்களால் தமிழ்நாட்டின் நிலத்தடி நீர் இல்லாமல் போகும், மண் மற்றும் காற்று மாசு ஆகும் என்ற பேரபாயத்தை உணர்ந்து தலைவர் வைகோ அவர்கள் தொடர்ந்த வழக்கில், அடுத்த 10 ஆண்டுகளில் சீமைக்கருவேல மரத்தை முழுவதுமாக தமிழ் நாட்டிலிருந்து அகற்ற உயர் நீதிமன்றத்தின் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு ஆணை பெற்றுத்தந்த கட்சி மதிமுக.
5. இந்தியா சுதந்திரம் அடைந்து அதன் அரசியல் அமைப்புச் சட்டம் அங்கீகரிக்கப்பட்டு, ஆண்டுகள் பல கடந்தும் அதனை இயற்றி தந்த புரட்சியாளர் மாமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் திருவுருவப்படத்தை, நாடாளுமன்ற மைய மண்டபத்தில் அமைக்கச் செய்து என்றென்றும் நிலைபெறச் செய்த பெருமை மறுமலர்ச்சி திமுகவையே சாரும்.
6. தொழிலாளர்களுக்கு மே ஒன்றாம் தேதி ஊதியத்தோடு கூடிய விடுமுறையை அறிவிக்க செய்தது, ராணுவத்தில் பணிபுரியும் இஸ்லாமிய சகோதரர்களுக்கு வெள்ளிக்கிழமை தொழுகை நடத்த அனுமதி பெற்று தந்தது, ரயிலில் பயணிக்கும் டிடிஆர்-க்கு நிரந்தரமாய் ஒரு தனி படுக்கை ஏற்பாடு செய்தது.
7. நெய்வேலி என்.எல்.சி நிறுவனம், தனியாருக்கு தாரைவாக்க அனைத்து முடிவுகளும் எடுக்கப்பட்ட பின்பும் ஒன்றிய அரசோடு போராடி அதனை மீட்டுத் தந்த இயக்கம் மறுமலர்ச்சி திமுக.
8. கொலை குற்றம் சுமத்தப்பட்டு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்ட மூன்று தமிழர்களின் தூக்குக் கயிறை அறுத்து அவர்களின் உயிரை காப்பாற்றியது மறுமலர்ச்சி திமுக. தனது அப்பழுக்கற்ற 61 ஆண்டுகால அரசியல் பொதுவாழ்வில் நிரபராதிகளான 15 க்கு மேற்பட்ட அப்பாவி தமிழர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை நீக்க சட்டப்போராட்டம் நடத்தி வென்றுகாட்டிய தலைவர் வைகோ அவர்கள்.
9. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட வேண்டும் என்ற நிலையிலிருந்து டெல்டா பகுதியை பெட்ரோலிய மண்டலமாக்கும் முயற்சியை தவிடுபொடியாக்கி, மீத்தேன் ஷேல் கேஸ் திட்டங்களை அங்கிருந்து அப்புறப்படுத்திய இயக்கம் மறுமலர்ச்சி திமுக.
10. இனப்படுகொலைக்கு ஆளான இலங்கைத் தமிழர்களுக்கு தமிழீழம் ஒன்றே நிரந்தர தீர்வு என்றும் அதற்கு பொது வாக்கெடுப்பு ஒன்றே வேண்டும் என்றும் உலகிலேயே முதன்முதலாய் ஐநா அவையில் முழங்கிய தலைவர் வைகோ, அவர் கண்ட இயக்கம் மதிமுக.
இப்படி எண்ணற்ற சாதனைகளை சத்தமில்லாமல் செய்து மக்களையும் மண்ணையும் காத்து நிற்கும் பெருமை மறுமலர்ச்சி திமுகவிற்கே உண்டு. இத்தனைப் பெருமைகள் பெற்ற மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் இன்றும் என்றும் தமிழ்நாடு அரசியல் களத்தில் தனித்த அடையாளத்தோடு மிடுக்காய் நிற்கிறது; நிற்கும்.