Skip to main content

“ஜல்லிக்கட்டின் வரலாற்றை மாற்ற நினைக்கிறது ஒரு கூட்டம்” - நிர்மலா சீதாராமனுக்கு சு.வெங்கடேசன் பதில்

Published on 17/01/2024 | Edited on 17/01/2024
Su Venkatesan's reply to Nirmala Sitharaman

தமிழர் திருநாளான பொங்கல் திருநாள் நேற்று முன் தினம் (15-01-2024) தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து நேற்றும் மாட்டுப் பொங்கல் கொண்டாட்டங்கள் நடந்து முடிந்தது. இன்று (17-01-24) காணும் பொங்கலும் கொண்டாடப்பட உள்ளது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் எனப் பலரும் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். மேலும், தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளையொட்டி தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் மதுரையில் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக அளவில் புகழ் பெற்றவை. புகழ்பெற்ற இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் மதுரை மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் உள்ள சிறந்த காளைகள் பங்கேற்கும்.

அந்த வகையில், மதுரை அவனியாபுரத்தில் நேற்று முன் தினமும் (15-01-24), பாலமேடு பகுதியில் நேற்றும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. அதனை தொடர்ந்து, அலங்காநல்லூர் பகுதியில் இன்று (17-01-24) ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 1200 காளைகள், 700 மாடுபிடி வீரர்கள் பங்கேற்று விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர், “சங்ககால தமிழ் இலக்கியமான கலித்தொகையில், ஏறு தழுவுதலில் பங்கேற்கும் காளைகள் சிவன், முருகன், பலராமன், கிருஷ்ணன் உள்ளிட்ட தெய்வங்களுடன் ஒப்பிட்டு உவமைப்படுத்தப்பட்டுள்ளன. அக்கால மக்களின் வாழ்க்கை இப்படியிருக்க, அதனை வேறுவிதமாக காட்டுவது தீய உள்நோக்கம் மற்றும் பிரிவினைவாத நோக்கம் கொண்டது” என்று பதிவிட்டிருந்தார். 

இதற்கு மதுரை எம்.பி சு.வெங்கடேசன் காட்டமாக பதில் அளித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ்(ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “ஏறுதழுவல் என்னும் ஜல்லிக்கட்டின் வரலாற்றை மாற்ற நினைக்கிறது ஒரு கூட்டம். ‘தீய உள்நோக்கங்கொண்ட பிரிவினைவாதம்’ என நிர்மலா சீதாராமன் கூறுகிறார். உலகம் அதிர உரக்கச்சொல்வோம்..கீழடி அகழாய்வு தொடங்கி அலங்காநல்லூர் வாடிவாசல் வரை “தமிழும் திமிலும்” எமது பேரடையாளம்” என்று பதிவிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்

Next Story

“பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல; தீராத வன்மம்” - சு.வெங்கடேசன்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
BJP unending anger towards Tamil Nadu says Su. Venkatesan

திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு  நிதி வழங்காமல் இருந்தது. இந்த நிலையில்,  தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே சமயம் கர்நாடகாவிற்கு வறட்சி நிவாரணமாக ரூ.3,454 கோடியை மத்திய அரசு அறிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மதுரை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சு.வெங்கடேசன் பாஜக தமிழகத்திற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை செய்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கர்நாடகாவில் முதல் கட்டம் சாதகமாக இல்லை போல, வறட்சி நிவாரணம் என ரூ.3454 கோடி அறிவிப்பு. தமிழ்நாட்டிற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை. மிக் ஜாம் புயல் மற்றும் வெள்ளத்திற்கு ரூ.275 கோடி மட்டுமே. தமிழ்நாடு  கேட்டதோ 38,000 கோடி. பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல… வன்மம். தீராத வன்மம்” எனக் கடுமையாக சாடியுள்ளார்.

Next Story

'பாஜக ஆட்சிக்கு வந்தால் தேர்தல் பத்திரம் கொண்டு வருவோம்'-நிர்மலா சீதாராமன் 

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

தேர்தலுக்கு முன்னதாகவே தேர்தல் பத்திரம் தொடர்பான கருத்துக்கள் மற்றும் நீதிமன்றத்தின் உத்தரவுகள் இத்தேர்தலில் மிகப்பெரும் பேசு பொருளாக இருந்தது. உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடுக்கப்பட்ட  நிலையில் பாஜக அரசு கொண்டு வந்த தேர்தல் பத்திரத் திட்டம் என்பது அரசியலமைப்புக்கு எதிரானது எனக் கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்றம், நன்கொடை வழங்கியோர், நன்கொடையைப் பெற்ற கட்சிகளின் விவரங்களை ஆணையத்திடம் வழங்க உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் மீண்டும் தேர்தல் பத்திரங்களைக் கொண்டு வருவோம் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பாஜக ஆட்சிக்கு வந்தால் மீண்டும் தேர்தல் பத்திரங்களைக் கொண்டு வருவது தொடர்பாக ஆலோசிப்போம். அனைவரும் ஏற்கத்தக்க வகையில் தேர்தல் பத்திரம் கொண்டு வருவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்வோம். தேர்தல் பத்திரம் வெளிப்படை தன்மையானது, கருப்பு பணத்தை ஒழிப்பதற்கானது என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.