
இருசக்கர வாகனம் திருடு போனது தொடர்பாக திருவள்ளூர் மாவட்டம் ஆவடி காவல் நிலைய குற்றப்பிரிவில் பெண் ஒருவர் புகார் அளித்த்திருந்தார். இதனையடுத்து புகார் கொடுத்த சென்ற பெண்ணுக்கு காவலர் ஒருவர் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி சேலத்தில் இன்று (08.05.2025) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் இந்த சம்பவம் தொடர்பான காணொளி ஒன்றை செய்தியாளார்களுக்கு காண்பித்தார்.
அதனைத் தொடர்ந்து அவர் பேசுகையில், “சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் கெட்டு குட்டிச்சோறாகி நாசமாகி போச்சு. அமைச்சர் ரகுபதி பேசுகிறார் எடப்பாடி பழனிச்சாமி தூங்கிட்டு இருக்காரு. இந்த அரசாங்கம் தூங்கிட்டு இருக்கிறது. காவல்துறை தூங்கிட்டு இருக்கிறது. காவல்துறை பொறுப்பைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் தூங்கிட்டு இருக்காரு. சட்டத்துறை அமைச்சர் கும்பகரணம் தூக்கத்தில் இருக்கிறார். இந்த ஆட்சியில் பொதுமக்களுக்கும் பாதுகாப்பு இல்லை. பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை. அவரவர்கள் பாதுகாப்பு அவர்களே தேடிக்கொள்ள வேண்டும் என்று நான் 3 நாளுக்கு முன் சமூக வலைத்தளத்தில் பதிவை வெளியிட்டேன்.
நேற்றைய தினம் இப்படி ஒன்று நடந்திருக்கு. ஒரு பெண்மணி தன்னுடைய இரு சக்கர வாகனம் காணவில்லை என்று காவல் நிலையத்திலே புகார் கொடுத்திருக்கிறார். அதைக் கண்டுபிடித்து விட்டேன் என்று அந்த பெண்ணை ஒரு காவலர் அழைத்திருக்கின்றார். அந்த பெண்மணியும் அதை நம்பி அங்கே செல்கின்ற பொழுது நான் உங்களுடைய இருசக்கர வாகனத்தைக் கண்டுபிடித்து விட்டேன். எங்களுக்கு 15 ஆயிரம் ரூபாய் கொடுங்கள் என்று அந்த காவலர் கேட்டதாகவும், அந்த பெண்மணி அவ்வளவு பணம் இல்லை. ஒரு சிறிய தொகை கொடுப்பதாகச் சொல்லி அதைக் கொடுத்திருக்கிறார். பிறகு அந்த காவலர் குறித்து வந்த செய்தி எல்லாம் தெரியும். அதை என் வாயில் இருந்து சொல்லக்கூடாது. அசிங்கமா இருக்குது.
இந்த சம்பவம் எப்படி நடந்தது என்பது குறித்து எல்லாமே அந்த பெண்மணி வலைதளத்தில தைரியமாக வெளியிட்டுருக்காங்க. ஆக இந்த ஆட்சியின் உடைய லட்சணத்தை மக்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். இனி இப்படிப்பட்ட பிரச்சனை நடக்கக்கூடாது என்பதற்காக நான் சொல்கிறேன். நாட்டில் நிலவுகின்ற பிரச்சனைகள், நாட்டில் நிலவுகின்ற அட்டூழியங்கள் குறித்தும், பெண்களுக்குப் பாதுகாப்பான செய்திகள் எல்லாம் வெளியிட்டால் தான் பெண்கள் பாதுகாப்பாக இருக்க முடியும்.

இனியாவது இப்படிப்பட்ட துயரமான சம்பவங்கள் நடைபெறக்கூடாது என்பதுதான் என்னுடைய நோக்கம். ஒரு பெண் எப்படிப் பதறிப் போய் சொல்கிறார். சிந்தித்து பாருங்கள். ஆனால் முதலமைச்சரும், சட்டத்துறை அமைச்சர் சொல்கிறார்கள் எதிர்க்கட்சிகள் வீணாக எங்கள் மீது குறை சொல்கிறார்கள். வீண் பழி சுமத்துனாங்கன்னு. அந்த பெண்மணி வலைத்தளத்தில் வெளியிட்ட செய்தியைத்தான் நான் காட்டியிருக்கிறேன். இதை மக்களுக்குக் கொண்டு போய் சேர்க்க வேண்டும். மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த செய்தி வெளியிடுங்கள். நான் ஏற்கனவே டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சரைச் சந்தித்த பொழுது தமிழ்நாட்டிற்குத் தேவையான நிதி பல துறைகள் வராமல் நிலவில் இருக்கின்றது அதை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை மனு கொடுத்தோம். நானும், நாடாளுமன்றம் உறுப்பினர்களும் சென்று உள்துறை அமைச்சரை அவர் இல்லத்திலே சந்தித்து கோரிக்கை மனு அளித்தோம்.
அதன் அடிப்படையிலே 100 நாள் வேலைத் திட்டத்திற்குத் தேவையான நிதியை ஒதுக்கீடு செய்திருக்கின்றார். அதோடு மெட்ரோ ரயில் திட்டத்தின் 2ஆம் கட்டத்திற்கு நிலுவை நிதியை ஒதுக்கீடு செய்திருக்கின்றார். ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்று அண்மையிலே அறிவித்திருக்கின்றார். எங்களால் கொடுக்கப்பட்ட சில கோரிக்கைகள் இன்றைக்கு நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. நான் ஏற்கனவே சொன்னதை போல ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தமிழ்நாட்டு மக்களுக்குத் தேவையான திட்டங்களைச் செய்வதிலும் தமிழ்நாடு வளர்வதற்கான அடிப்படை நிறைவேற்றுவதற்கும் நாங்கள் எப்பொழுதும் துணை இருப்போம் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன்” எனப் பேசினார்.