Thats it Let it rule Explanation by Sengottaiyan

அத்திக்கடவு - அவினாசி திட்டத்தை நிறைவேற்றியதற்காக முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவிக்கும் விழா கோவை அன்னூர் அருகே கடந்த 9 ஆம் தேதி நடைபெற்றது. இந்த விழாவில் விவசாயிகள், அதிமுக முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். ஆனால் அதிமுகவின் மூத்த தலைவர்களின் ஒருவரான செங்கோட்டையன் கலந்துகொள்ளாதது கட்சியினர் மற்றும் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், “அத்திக்கடவு - அவினாசி திட்டக்குழு நடத்திய பாராட்டு விழாவை நான் புறக்கணிக்கவில்லை. என்னை வளர்த்து ஆளாக்கிய எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற தலைவர்களின் படங்கள் வைக்கப்படாததால் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. அத்திக்கடவு திட்டத்தைக் கொண்டுவர 2011ஆம் ஆண்டு ஜெயலலிதா ரூ. 3.72 கோடி நிதியளித்தார். ஆனால் திட்டப் பணிகளைத் தொடங்க அடித்தளமாக இருந்த தலைவர்களின் படங்கள் மேடையில் இல்லை” எனத் தெரிவித்திருந்தார். இத்தகைய சூழலில் தான் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே குள்ளம்பாளையத்தில் உள்ள செங்கோட்டையன் வீட்டிற்கு 2 காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் 2 தலைமைக் காவலர்கள் உட்பட நான்கு பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

Advertisment

அதே சமயம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள அவரது வீட்டில் தனது ஆதரவாளர்களுடன் செங்கோட்டையன் இன்று (12.02.2025) காலை 11 மணியளவில் ஆலோசனை நடத்தியதாகத் தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில் இது தொடர்பாக செங்கோட்டையனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “கூட்டத்தினர் என் வீட்டிற்கு வருவது வழக்கம். 100 பேர் 200 பேர் தினமும் ஒன்றாகத்தான் வருவார்கள். இன்றைக்குக் கோபிச் செட்டிப்பாளையம், நாளை அந்தியூரில் பொதுக்கூட்டம் நடத்துவது தொடர்பாக நோட்டீஸ் வழங்க வந்தனர். தினமும் நிர்வாகிகள் வருவார்கள், காபி சாப்பிடுவார்கள். அப்போது பேசியது (எடப்பாடி பழனிசாமிக்கான பாராட்டு விழா புறக்கணிப்பு) அதோடு முடிந்தது. ஆள விடுங்க...” எனத் தெரிவித்தார்.