உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல்வராக இருந்தவர் மாயாவதி. இவர் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக உள்ளார். இந்த சூழலில் பகுஜன் சமாஜ் கட்சி ஆலோசனை கூட்டம் இன்று (10.12.2023) லக்னோவில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மாயாவதி தனது சகோதரர் மகன் ஆகாஷ் ஆனந்தை அடுத்த அரசியல் வாரிசாக அறிவித்துள்ளார்.
மாயவதியின் சசோதரர் ஆனந்த்குமாரின் மகன் ஆகாஷ் ஆனந்த் (வயது 28) ஆவார். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராக இருக்கும் ஆகாஷ் ஆனந்த் லண்டனில் எம்.பி.ஏ. படிப்பை முடித்தவர் ஆவார். மாயாவதியின் அரசியல் வாரிசாக ஆகாஷ் ஆனந்த் நியமிக்கப்பட்டாலும், தற்போதைக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக மாயாவதியே தொடர்வார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் தேர்தல் பிரச்சார திட்டங்களை வகுப்பதில் முக்கிய பங்காற்றும் ஆகாஷ் ஆனந்த் மாயாவதிக்கு பின்னர் அக்கட்சியின் தலைவராக பதவி வகிக்க உள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியின் பொறுப்பாளராக பணியாற்றியதும், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானாவிலும் பகுஜன் சமாஜ் கட்சி பணிகளுக்கு பொறுப்பு வகித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.