Skip to main content

'இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும்'- தொல்.திருமாவளவன் எம்.பி. வலியுறுத்தல்!

Published on 21/03/2021 | Edited on 21/03/2021

 

UN INDIA GOVERNMENT VCK THOL THIRUMAVALAVAN STATEMENT

 

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கை போர்க்குற்றங்கள் தொடர்பாக 6 நாடுகளால் முன்மொழியப்பட்டுள்ள தீர்மானம் வாக்கெடுப்புக்கு வரவுள்ள நிலையில், அதற்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

 

இலங்கையில் நடத்தப்பட்ட இனப்படுகொலையில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு 10 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்ட நிலையில் அதற்கான நீதி வழங்கப்படாத நிலை உள்ளது. இது தொடர்பான விவாதம் ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது தொடர்பான தீர்மானம் நாளை (22/03/2021) மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ள நிலையில், இந்த தீர்மானத்துக்கு எதிராக வாக்களிக்கும் படி இலங்கை அரசு இந்தியாவைக் கேட்டுக்கொண்டுள்ளது.

 

போர்க்குற்ற விசாரணைக்கு ஆதரவாக பிரிட்டன் உள்ளிட்ட ஆறு நாடுகள் கொண்டு வரும் தீர்மானத்தை ஆதரிக்குமாறு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஏற்கனவே வலியுறுத்தியிருந்தோம். இது தொடர்பாக குடியரசுத் தலைவருக்கும் கடிதமும் எழுதியிருந்தோம். இந்நிலையில் இலங்கை அரசுக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கும் என்று அந்நாட்டு அமைச்சர் தெரிவித்திருப்பது மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் இந்திய நிலை குறித்து கருத்து தெரிவித்த இந்திய பிரதிநிதி, 1987-ஆம் ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் விளைவாக இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட 13வது சட்டத் திருத்தத்தின் அடிப்படையில் தமிழர்களுக்கான உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என  கருத்து தெரிவித்திருந்தார். இலங்கைக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கும் என்று இலங்கை தரப்பில் கூறியிருந்தாலும் இந்திய அரசு தரப்பில் இதுவரை எந்த உறுதியான கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

 

நாளை (22/03/2021) விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ள அந்தத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நாளை மறுநாள் (23/03/2021) நடைபெறும் என்று தெரிகிறது. பெரும்பாலான நாடுகள் இந்த தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்க உள்ள நிலையில் நிச்சயமாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட இருக்கிறது. இந்தச் சூழலில் இந்திய அரசு அந்த தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தாலோ அல்லது வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தாலோ அது முழுக்க முழுக்க தமிழர் விரோத நிலைப்பாடாகவே கருதப்படும். எனவே, இந்திய அரசு தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.

 

ஈழத்தமிழர் பிரச்சினைக்கு இந்தத் தீர்மானம் முழுமையான தீர்வளிக்குமென்றோ இனப்படுகொலைக்கு முழுமையான நீதியை வழங்குமென்றோ கூற முடியாது என்றாலும், தொடர்ந்து இலங்கை அரசை சர்வதேசக் கண்காணிப்பில் வைத்திருக்கவும்; ஈழத்தமிழர் அமைப்புகள் அனைவரும் ஒன்று சேர்ந்து விடுத்த கோரிக்கையான சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணை என்பதை நோக்கி நகர்த்துவதாகவும் இது நிச்சயம் அமையும். எனவே, அந்த வகையில் முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று இந்திய அரசை வலியுறுத்துகிறோம்." இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்