திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன், ஸ்டாலின் குடும்பத்துக்கு நெருக்கமான அண்ணாநகர் எம்.எல்.ஏ. மோகனின் மகன் கார்த்திக் உள்ளிட்டோரின் பங்களா மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினரின் அதிரடி ரெய்டுகள் நடந்து வருகின்றன.
ஸ்டாலின் குடும்பத்தைக் குறிவைத்து நடக்கும் இந்த ரெய்டுகளுக்கு திமுக கூட்டணிக் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த நிலையில், அரியலூர் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் இருந்த மு.க.ஸ்டாலினுக்கு இந்த ரெய்டு விபரங்கள் தெரியப்படுத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து, தேர்தல் பிரச்சாரத்தில் இந்த ரெய்டுகள் குறித்து விளாசிய மு.க.ஸ்டாலின், “எனது மகள் செந்தாமரையின் வீட்டில் வருமான வரித்துறையைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ரெய்டு நடத்திக்கொண்டிருக்கிறார்கள். 100-க்கும் அதிகமான போலீஸாரின் பாதுகாப்புடன் ரெய்டு நடக்கிறது.
ஏற்கனவே ரெய்டுகள் மூலம் அதிமுக அரசையும் அதன் தலைவர்களையும் உருட்டி, மிரட்டி வைத்திருக்கிறார் மோடி. அதிமுக தலைவர்களை மிரட்டுவது போல என்னை மிரட்ட முடியாது. நாங்கள் திமுக. நான் கலைஞரின் மகன். இந்த சலசலப்புக்கெல்லாம் பயப்பட மாட்டேன். மிசாவையே பார்த்தவன். எமர்ஜென்சியைப் பார்த்தவன். நீங்க எத்தனை ரெய்டுகள் நடத்தினாலும் நாங்கள் கவலைப்பட மாட்டோம். தேர்தலுக்கு 3 நாட்களே இருக்கும்போது ரெய்டு நடத்தினால் திமுககாரன் பயந்து முடங்கிவிடுவான்னு நினைக்கிறீங்க. அது நடக்காது. நாங்கள் பனங்காட்டு நரி! எந்த சலசலப்புக்கும் அஞ்சமாட்டோம்” என்று ஆவேசத்துடன் மத்திய மோடி அரசை எச்சரித்திருக்கிறார் மு.க.ஸ்டாலின்.
இன்றைய நக்கீரன் இதழில், ராங்கால் பகுதியில் "சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் மருமகன் சபரீசனுக்கு சொந்தமான பங்களாவையும் வருமான வரித்துறையினர் ரகசியக் கண்காணிப்பில் வைத்துள்ளது" என்பதை சுட்டிக்காட்டியிருக்கிறோம் என்பது குறிப்பிடத்தக்கது.