Skip to main content

“உதயநிதியிடம் நான் முதலமைச்சராக அதிகம் எதிர்பார்க்கிறேன்” - முதல்வர் ஸ்டாலின்

Published on 29/12/2022 | Edited on 29/12/2022

 

“I expect a lot from Udhayanidhi as Chief Minister” CM Stalin

 

திருச்சி மாவட்டத்தில் மூன்று இடங்களில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்ளத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை விமானம் மூலம் திருச்சி வந்தார். திருச்சியில் பல்வேறு நலத்திட்டங்களுக்கான பணிகளை அடிக்கல் நாட்டிய முதல்வர் முடிவுற்ற பணிகளைத் துவக்கி வைத்தார்.

 

விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “அமைச்சரவைக்கு புதியவர் உதயநிதி ஸ்டாலின். அவர் அமைச்சரவைக்குத்தான் புதியவர். ஆனால் உங்களுக்கு நன்கு அறிமுகம் ஆனவர். உங்களுக்குப் பழைய முகம்தான். அவர் அமைச்சராகப் பொறுப்பேற்றபோது விமர்சனம் வந்தது. வரத்தான் செய்யும். அப்போது என் செயல்பாட்டைப் பாருங்கள் அதன் பின் விமர்சனம் செய்யுங்கள் எனக் கூறினார். 

 

அவர் சட்டமன்ற உறுப்பினராகப் பொறுப்பேற்ற போதும் விமர்சனம் வந்தது. ஆனால் தன் செயலால் பதில் சொல்லி பாராட்டுகளைப் பெற்றார். உதயநிதிக்கு ஏராளமான பொறுப்புகள் உள்ளது. இளைஞர் நலன், விளையாட்டு, மகளிர் மேம்பாடு, சிறப்புத் திட்டச் செயலாக்கம் வறுமை ஒழிப்பு கிராமப் புற கடன்கள் என முக்கியமான துறைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் விளிம்பு நிலை மக்களை மேம்படுத்தும் துறைகள். 

 

அமைச்சர் பொறுப்பில் சிறப்பாகச் செயல்பட்டு இத்துறைகளை மேம்படுத்துவார் என்ற நம்பிக்கை எனக்கு அதிகமாக உள்ளது. மேம்படுத்த வேண்டும் என்பதை முதலமைச்சராக எதிர்பார்க்கிறேன். ஒலிம்பிக் விளையாட்டுகளில் பதக்கங்களை வெல்லும் வாய்ப்பினை ஏற்படுத்த நம் மாநில இளைஞர்களுக்கு உலகத் தரம் வாய்ந்த பயிற்சிகளைக் கொடுக்க தமிழகத்தில் நான்கு மண்டலங்களில் ஒலிம்பிக் அகாடமிகள் உருவாக்கப்படும் என சட்டமன்ற பேரவையில் அறிவித்திருந்தேன். 

 

அந்த அறிவிப்பினை உறுதிப்படுத்தும் வகையில் திருச்சியில் அனைத்து வசதிகளுடன் கூடிய ஒலிம்பிக் அகாடமிகள் உருவாக்கப்படும். கல்வியில் வேலைவாய்ப்பில் அறிவுத்திறனில் தொழில் வளர்ச்சியில் மட்டுமல்ல நம் தமிழகம் உலகத்துடன் போட்டியிட வேண்டும். அதற்காக விளையாட்டு வீரர்களை உருவாக்க வேண்டும்” எனக் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்