Skip to main content

“இடுக்கி மாவட்டத்தை தமிழகத்திடம் கொடுத்துவிடுங்கள்” - சீமான் 

Published on 15/11/2021 | Edited on 15/11/2021

 

"Give Idukki district to Tamil Nadu" - Seeman

 

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து நீர் திறக்கப்பட்டதைக் கண்டித்து பல்வேறு அரசியல் கட்சியினரும், விவசாய அமைப்புகளும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அந்தவகையில், நாம் தமிழர் கட்சியின் சார்பில் தேனி மாவட்டம், பங்களாமேட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டார். 

 

இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர், “முல்லைப் பெரியாறு அணையில் கேரள நீர்வளத்துறை அமைச்சர் உள்ளிட்டோர் சேர்ந்து தண்ணீரைத் திறந்தனர். இதுகுறித்து தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனிடம் கேட்டால், தமிழக அரசுக்குத் தெரிந்துதான் தண்ணீர் திறக்கப்பட்டது என்கிறார். பிறகு ஏன் தமிழகம் சார்பில் அரசியல்வாதிகள், அதிகாரிகள் அங்கு செல்லவில்லை என்பதற்குப் பதில் இல்லை. கேரள அரசியல்வாதிகள் முல்லைப் பெரியாறு அணையை இடிக்க வேண்டும் என்கின்றனர். தமிழர்களால் கட்டப்பட்ட அணையை இடிக்க விடமாட்டோம். வேண்டுமென்றால் அணைக்கு உள்ளே இருமாநில அரசுகளும் சரிபாதியாக நிதியைப் பங்கீடு செய்துகொண்டு புதிய அணையைக் கட்டட்டும். இதை அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

 

நடிகர் பிரித்விராஜ் முல்லைப்பெரியாறு அணை குறித்து சமூகவலைதளத்தில் பதிவிட்டதைத் தொடர்ந்து கேரள முதல்வர் பினராயி விஜயன், அணை பாதுகாப்பாக உள்ளது. அணை குறித்து தவறான தகவல் பரப்புவோர் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அதேவேளையில் நீதிமன்றத்தில், அணை பலவீனமாக உள்ளது என்ற கருத்தைக் கேரள அரசு முன்வைப்பது முரணாக உள்ளது. உச்ச நீதிமன்றம் 142 அடிவரை அணையில் தண்ணீர் தேக்கலாம் என உத்தரவிட்டிருந்தபோதும், 136 அடியைத் தாண்டியபோதே, தண்ணீர் திறக்கப்பட்டதற்கு தமிழக அரசு கண்டனம் தெரிவிக்கவில்லை. அணையை இடிக்க வேண்டும் என கேரளா தரப்பில் தொடர்ச்சியாக கூறப்பட்டு வருகிறது. இதற்கும் எவ்வித கண்டனமும் இல்லை. முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்பதை விளக்க வேண்டும்.

 

பேபி அணையைப் பலப்படுத்த தடையாக உள்ளதாகக் கூறப்படும் மரங்களை வெட்ட 40 ஆண்டுகளாக கேரள அரசுடன் போராட வேண்டிய நிலை உள்ளது. பெருந்தலைவர் காலத்தில் தேவிக்குளம், பீர்மேடு பகுதிகள் கேரளாவுடன் சென்றது. அதைத் தொடர்ந்து அணையின் பாதுகாப்புப் பணி உரிமையையும் எம்.ஜி.ஆர். விட்டுக்கொடுத்தார். தற்போது அணை பலவீனமாக உள்ளது; பாதுகாப்பில்லாத சூழல் உள்ளது என்கிறார்கள். அவ்வாறு பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறது என நினைத்தால் இடுக்கி மாவட்டத்தைத் தமிழகத்திடம் கொடுத்துவிடுங்கள். முல்லைப் பெரியாறு அணைக்காகப் போராடும் பாஜகவினர், நேரிடையாக பிரதமர் மோடியிடம் முறையிட்டால் விரைவில் தீர்வு கிடைத்துவிடும். பாட்டாளி மக்களுக்காக உழைக்கும் கட்சி எனக் கூறும் கம்யூனிஸ்டுகள், ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு நிலைப்பாட்டை எடுக்கின்றனர். முல்லைப்பெரியாறு விவகாரத்தில் தமிழக விவசாயிகளை வஞ்சிக்கின்றனர். இவர்கள்தான் மேற்கு வங்கத்தில் மம்தாவை தோற்கடிக்க பாஜகவை ஆதரித்தவர்கள். இத்தகையைச் சூழலில் தமிழக அரசு முல்லைப் பெரியாறு அணை உரிமையை விட்டுக்கொடுத்துவிடக் கூடாது. இல்லையெனில், கேரளாவுக்கு கொண்டு செல்லப்படும் உணவுப் பொருட்களைத் தடுப்போம். தமிழக மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு கேரள அரசு செயல்பட வேண்டும்” என்று பேசினார். 

 

 

சார்ந்த செய்திகள்