
தமிழ்நாடு சட்டப்பேரவையில் கூட்டத்தொடர் இன்று (16-04-25) கூடியது. அப்போது, தமிழக அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி, செந்தில் பாலாஜி மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேச முயன்றார். அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, ‘இன்று வந்து தீர்மானத்தை கொடுத்துள்ளீர்கள். அது என் பரிசீலனையில் இருக்கிறது. எனவே, அந்த தீர்மானம் குறித்து முடிவெடுக்கிறேன்’ எனக் குறிப்பிட்டார்.
ஆனால், இதை ஏற்றுக்கொள்ளாத அதிமுக எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து, அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவையை இருந்து வெளிநடப்பு செய்தனர். இந்த நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி, “சட்டமன்றத்தில் சட்டமன்ற பேரவை 72இன் கீழ் அமைச்சர்கள் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் அதிமுக சார்பில் கொண்டு வரப்பட்டது. அது குறித்து பேசுவதற்கு சபாநாயகர் மறுத்துவிட்டார். எனவே, அதனை கண்டித்து வெளிநடப்பு செய்திருக்கிறோம். அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி விளக்கமான செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டது. அதே போல் வனத்துறை அமைச்சர் பொன்முடி, அமைச்சராக பதவியேற்கும் அளித்த உறுதிமொழியையும் மீறி இந்து மதத்தையும், பெண்களைப் பற்றியும் அவதூறாகப் பேசியுள்ளார். மின்சாரம் மற்றும் மதுவிலக்குத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் துறையான டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி ரூ.1,000 கோடி ஊழல் நடந்திருப்பதாக செய்தி வெளியிட்டது. எனவே, இந்த அமைச்சர்கள் மீது கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து விவாதிக்க வேண்டும் என நாங்கள் கடிதம் கொடுத்தோம்.
கடந்த காலங்களில் தமிழக அமைச்சர்கள் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருகின்ற போது, அப்போது இருக்கும் சபாநாயகர் அனுமதி கொடுத்து சட்டமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. எங்களுக்கு அனுமதி கொடுக்க மறுத்த காரணத்தினால் நாங்கள் வெளிநடப்பு செய்திருக்கிறோம்” எனப் பேசினார். இதையடுத்து, மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின் போது கூட்டணி அரசு அமைப்போம் என்று கூறப்பட்டதாக விமர்சனம் எழுந்துள்ளதே? எனச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, “கூட்டணி ஆட்சி அமைப்பதாக அமித் ஷா கூறவே இல்லை. ஆட்சியில் அதிமுக - பா.ஜ.க கூட்டணி அமையும் என்று தான் கூறினோம். டெல்லிக்கு பிரதமர் மோடி, தமிழ்நாட்டுக்கு எடப்பாடி பழனிசாமி என அமித் ஷா தெளிவக கூறினார். நாங்கள் யாருடன் கூட்டணி வைத்தால் திமுகவுக்கு ஏன் எரிச்சல்? திமுகவுக்கு பயம். நாங்கள் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம், அது எங்கள் விருப்பம். திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதற்காக ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளோம்” எனக் கூறினார்.