
காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி, மத்திய பா.ஜ.க அரசு நாடாளுமன்றத்தில் வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதாவைத் தாக்கல் செய்தது. இதனையடுத்து பெரும்பான்மை வாக்கெடுப்பின் அடிப்படையில் நாடாளுமன்றத்தின் இரு அவையிலும் இந்த மசோதா நிறைவேறியது. அதனை தொடர்ந்து, இந்த மசோதாவிற்குக் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ஒப்புதல் அளித்ததை அடுத்து, வக்ஃப் வாரிய திருத்தச் சட்டம் கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்தது.
அதே சமயம் இந்த சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து காங்கிரஸ், திமுக, விசிக, தவெக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தது. அந்த வகையில் 100க்கும் மேற்பட்ட வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, வக்ஃப் திருத்தச் சட்டம் குறித்து வழக்குகள் நேற்று (16-04-25) உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்து அறநிலையத்துறையில் இந்துக்கள் மட்டுமே நிர்வாகிகளாக நியமிக்கப்படும் பட்சத்தில், வக்ஃப் சட்டத்தில் மட்டும் ஏன் புதிய நடைமுறை பின்பற்றப்படுகிறது?, இனிமேல் இஸ்லாமியர்களை இந்து அறக்கட்டளை மற்றும் வாரியங்களில் நியமிப்பீர்களா? வக்ஃப் சொத்து எது என்பதை ஆட்சியாளர்கள் முடிவு செய்வது நியாயமா?. என்று பல்வேறு கேள்விகளை எழுப்பி வக்ஃப் வாரிய சட்டம் குறித்த வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், வக்ஃப் சட்டத்திருத்தம் தொடர்பான மனு மீதான விசாரணை இரண்டாம் நாளாக இன்று (17-04-25) உச்சநீதிமன்றத்தில் வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்ரா, ‘வக்ஃப் வாரிய சட்டத்தினுடைய ஒரு பகுதியை தடை செய்தால் கூட விளைவுகள் கடுமையாக இருக்கும். எனினும், எந்த நியமனமும் இந்த புதிய சட்டத்தில் செய்யப்படாது எனவும் நிலம் எதுவும் வகைப்படுத்தப்படாது என்ற உத்தரவாதத்தை மத்திய அரசு வழங்குகிறது’ எனது தனது வாதத்தை முன்வைத்தார்.
அதனை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், “வக்ஃப் வாரிய புதிய சட்டத்தில் எந்தவொரு உறுப்பினர் நியமனமும் இருக்கக் கூடாது. ஏற்கெனவே, வக்ஃப் வாரியம் என அறிவிக்கப்பட்ட, பதிவு செய்யப்பட்ட சொத்துக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது. புதிய சட்டப்படி நில வகைப்படுத்துதல் கூடாது. ஆவணங்கள் இல்லாத வக்ஃப் சொத்துக்கள் விவகாரங்களிலும் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கவும் கூடாது. நிலம் கையகப்படுத்துதல், உறுப்பினர் நியமனத்தில் தற்போதைய நிலையே தொடர வேண்டும்” எனக் கூறி வக்ஃப் புதிய சட்டத்திற்கு இடைக்காலத் தடை உத்தரவை பிறப்பித்தனர்.
மேலும் நீதிபதிகள் கூறியதாவது, “இந்த விவகாரத்தில் அடுத்த 7 நாள்களுக்குள் மத்திய அரசு விரிவான பதிலளிக்க வேண்டும். அதே சமயம், 5 ரிட் மனுக்கள் மட்டுமே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும். மற்ற மனுக்கள் முடித்து வைத்ததாகக் கருதப்படும். விசாரணைக்கு எடுத்துகொள்வதற்கு எந்த 5 மனுக்கள் என்பதை தேர்வு செய்து கூறுவோம்” எனத் தெரிவித்து இந்த வழக்கை மே 5ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக உத்தரவிட்டனர்.