நாட்டின் 16வது குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நாளை (18/07/2022) நடைபெறவுள்ளது.
இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் ஜூலை 24- ஆம் தேதியுடன் நிறைவடைவதால், அடுத்த குடியரசுத் தலைவருக்கான தேர்தல் நாளை (18/07/2022) நடைபெறவுள்ளது. ஆளும் பா.ஜ.க.வின் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் ஜார்கண்ட் மாநில முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்முவும், காங்கிரஸ், தி.மு.க., திரிணாமூல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் சார்பில் பொதுவேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சரும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிடுகின்றனர்.
நாளை நடைபெறவுள்ள வாக்குப்பதிவுக்காக, டெல்லியில் உள்ள நாடாளுமன்றம், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள சட்டமன்றங்களிலும் வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் மாநிலங்களவை, மக்களவை உறுப்பினர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் வாக்களித்து குடியரசுத் தலைவரைத் தேர்வு செய்ய உள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்கு மதிப்பு தலா 708 ஆக உள்ளது. சட்டமன்ற உறுப்பினர்களின் வாக்கு மதிப்பு அந்தந்த மாநிலங்களின் மக்கள்தொகையைப் பொறுத்து மாறுபடுகிறது. அந்த வகையில், தமிழகத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் வாக்கு மதிப்பு 176 ஆக உள்ளது. இந்த தேர்தலில் மொத்த வாக்குகளின் மதிப்பு 10 லட்சத்து 86 ஆயிரத்து 431 ஆக உள்ளது. இதில் அதிக வாக்கு மதிப்பு பெறுவோர் குடியரசுத் தலைவராக அறிவிக்கப்படுவர்.
வாக்கு எண்ணிக்கை வரும் ஜூலை 21- ஆம் தேதி அன்று நடைபெறுகிறது. அன்றைய தினமே தேர்தல் முடிவுகளை இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கவுள்ளது.