Skip to main content

“கெஜ்ரிவால் போல் நானும் கண்ணாடி மாளிகை கட்டியிருக்கலாம்” - பிரதமர் மோடி விமர்சனம்

Published on 03/01/2025 | Edited on 03/01/2025
PM Modi criticizes Arvind kejriwal at delhi

70 சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் பதவிக்காலம், இந்தாண்டு பிப்ரவரி 23ஆம் தேதியுடன் முடிவடையவுள்ளது. அதற்கு முன்னதாக டெல்லி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் விரைவில் நடைபெறவுள்ளதாகக் கூறப்படுகிறது. சட்டமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிப்பை தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த தேர்தலில், இந்தியா கூட்டணியில் இருக்கும் ஆத்மி கட்சி, காங்கிரஸுடன் இருந்து விலகி தனித்து போட்டியிட இருக்கிறது. அதனால், அங்கு காங்கிரஸ், ஆம் ஆத்மி மற்றும் பா.ஜ.க என மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த தேர்தலை எதிர்க்கொள்ள அனைத்து கட்சியும் தீவிர முனைப்புடன் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. இந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சியையும், அரவிந்த் கெஜ்ரிவாலையும், பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார். 

டெல்லியில் நகர்ப்புற மறுசீரமைப்பு திட்டங்கள் உள்பட பல்வேறு திட்டங்களை இன்று பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “இன்று நான் இங்கு இருக்கும் போது, ​​பல பழைய நினைவுகள் நினைவுக்கு வருகிறது. இந்திரா காந்தியின் சர்வாதிகாரத்திற்கு எதிராக நாடு போராடிய போது. அண்டர்கிரவுண்ட் இயக்கத்தில் இருந்த என்னைப் போன்ற பலருக்கு, அசோக் விஹார் நான் வாழ்வதற்கான இடமாக இருந்தது.

அரவிந்த் கெஜ்ரிவால் போல் நானும் கண்ணாடி அரண்மனையை கட்டியிருக்கலாம். ஆனால், நான் எனக்கென்று ஒரு வீட்டைக் கட்டிக் கொண்டது இல்லை. ஆனால் ஏழைகளுக்கு நான்கு கோடிக்கும் அதிகமான வீடுகளைக் கட்டிக் கொடுத்திருக்கிறேன் என்பது நாட்டுக்கே நன்றாகத் தெரியும். நஜாப்கரில் சாவர்க்கர் பெயரில் புதிய கல்லூரி கட்டப்பட உள்ளது. டெல்லியில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தவர்கள் பள்ளிக் கல்வியை சேதப்படுத்தியுள்ளனர். டெல்லிக்கு மத்திய அரசு கொடுத்த பணத்தில் பாதியை கூட கல்விக்காக செலவிடவில்லை தற்போதைய டெல்லி அரசு. 

கடந்த 10 ஆண்டுகளில், டெல்லியை ஒரு பேரழிவு சூழ்ந்துள்ளது. அன்னா ஹசாரேவை முன் நிறுத்தி ஒரு சில நேர்மையற்றவர்கள், டெல்லியை பேரிடரை நோக்கித் தள்ளியுள்ளனர். ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி, டெல்லி சந்திக்கும் பேரிடர். இந்த பேரிடருக்கு எதிராக டெல்லி மக்கள் போர் தொடுத்துள்ளனர். இந்த பேரிடரில் இருந்து டெல்லியை விடுவிக்க டெல்லி வாக்காளர்கள் முடிவு செய்துள்ளனர். டெல்லியின் ஒவ்வொரு வாக்காளரும், பேரழிவை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்று கூறுகிறார்கள்” என்று கூறினார். 

சார்ந்த செய்திகள்