அண்ணா பல்கலைக்கழக வளாகத்தினுள் மாணவி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட வழக்கு தமிழக அரசியலில் பேசுபொருளாக இருக்கும் சூழலில், பா.ஜ.க. மாநிலத் தலைவர், தமிழக அரசை விமர்சித்துப் பேசிவருகிறார். இது தொடர்பாக சமூக ஆர்வலர் சுந்தரவள்ளியை நக்கீரன் வாயிலாகச் சந்தித்தோம். அப்போது அவர் தனது கருத்துகளை நம்மிடையே பகிர்ந்துகொண்டார்.
பா.ஜ.க. மாநில தலைவர் அந்த சாட்டையை இடுப்பில் கட்டிக்கொண்டே திரிய வேண்டும். ஏனென்றால் அவர் தோல் உரிய உரிய அவர் அடித்துக்கொள்ள வேண்டிய இடம் பா.ஜ.க.வில் நிறைய உள்ளது. பா.ஜ.க.வின் அடையாள முகமான மோடி, பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து பேசும்போது, செல்ஃபி எடுத்து அனுப்புங்கள் என்று பேசியிருந்தார். அவருக்குப் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு செல்ஃபியில்தான் தீர்மானிக்கப்படுகிறது. இப்படிப்பட்டவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் பெண்கள் கல்லூரிக்குள் சென்றால் புரட்சி என்று பேசியிருப்பதைப் பார்த்தால் நகைச்சுவையாகத்தான் தோன்றும். ஒரு ஆண் படிப்பது ஒரு குடும்பத்திற்காக இருக்கலாம். ஆனால் ஒரு பெண் படித்தால் அது சமூகத்தின் மாற்றம். ஏனென்றால் பெண்ணின் தலையில்தான் கலாச்சாரம், பண்பாடு, மூடநம்பிக்கை போன்ற அனைத்து விதமான அயோக்கியத்தனத்தைப் பெண்கள் தலையில் கட்டிவிடுவார்கள். ஒரு பெண் படித்துவிட்டால், கேள்வி கேட்டு பகுத்தறிவோடு செயல்படுவாள். இப்படிப்பட்ட சமூக மாற்றத்திற்கான பெண் கல்வியைக் குறித்துத்தான் முதல்வர் பேசியிருக்கிறார்.
மோடி ஆட்சியில் பெண்கள் அச்சுறுத்தலுக்கு ஆளாகிறார்கள் என உலக நாடுகள் பட்டியல் போட்டுக் கொடுத்துள்ளனர். இதற்கு மோடியும் அவருடைய கும்பலும் வெட்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் எதற்கும் கூச்சப்படாத கும்பல்தான் மோடி கும்பல். மோடி ஆட்சி செய்த கடந்த 2022ஆம் ஆண்டு பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் குறித்த பட்டியல் போட்டார்கள். அதில் முதல் 10 இடத்தில் தமிழ்நாடு இல்லை. ஆனால், அந்த 10 இடத்தில் 7 மாநிலங்கள் பா.ஜ.க. ஆட்சி செய்யும் மாநிலங்கள்தான். பெண்கள் மீதான அத்துமீறல்கள், சுரண்டல், வன்முறை என அனைத்து விஷயத்திலும் முதல் இடத்தில் இருப்பது உத்திர பிரதேச மாநிலம்தான்.
பா.ஜ.க. மாநில தலைவரிடம் சில கேள்விகள் கேட்கிறேன். முதலாவதாக கே.டி. ராகவன் தன் கட்சியின் அதிகாரத்தையும் கட்சித் தலைவர்களின் தொடர்பை பயன்படுத்தி கட்சியில் மாவட்ட பொறுப்பில் இருக்கும் பெண்ணை பாலியல் சுரண்டலில் ஈடுபட்டார். இந்த விவகாரத்தில் பா.ஜ.க. என்ன நடவடிக்கை மேற்கொண்டது?. இரண்டாவதாக உசிலம்பட்டியில் இருக்கும் பா.ஜ.க. கட்சியைச் சேர்ந்த பெண்கள், மதுரை மாவட்ட புறநகர் மாவட்ட தலைவர் பெண்களை இழிவாக பார்ப்பதாக அவரை பதவியில் இருந்து மாற்றக் கோரி போஸ்டர் அடித்து போராட்டம் செய்தனர். அதில் பா.ஜ.க. என்ன நடவடிக்கை எடுத்தது? அதே மதுரையில் வணிகத் துறையில் ஷா என்பவர் 16 வயது குழந்தையை பாலியல் துன்புறுத்தல் செய்து சிறை சென்றார். விழுப்புரம் மாவட்டத்தில் காயத்திரி என்ற பா.ஜ.க. கட்சியைச் சேர்ந்த பெண் பா.ஜ.க நிர்வாகி ஒருவர் மீது எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் புகார் கொடுத்தார். ஆனால் பா.ஜ.க.வினர் பாதிக்கப்பட்ட பெண்ணை கட்சியில் இருந்து நீக்கிவிட்டு, அந்த பா.ஜ.க. நிர்வாகியைக் கடந்த சட்டமன்ற தேர்தலில் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக வேட்பாளராக நிறுத்தினார்கள். இப்படி இருக்கும்போது அரைவேக்காட்டுக்கு(தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர்) பேச என்ன தகுதி இருக்கிறது.
குஷ்பு மற்றும் காயத்திரி ரகுராம் வந்தால் நான் கதவைத் திறந்தே வைத்திருப்பேன் என்று கேடுகெட்ட விதத்தில் பேசியது பா.ஜ.க மாநில தலைவர்தான். சொந்த கட்சி பெண்கள் பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்படும்போது அதைப் பற்றிக் கேட்க வக்கற்ற முதுகெலும்பற்ற சுயநலவாதியான பா.ஜ.க. தலைவர் தமிழ்நாடு அரசைக் கேள்வி கேட்க என்ன தகுதி இருக்கிறது. நான் தமிழ்நாடு அரசு பற்றி கேள்வி கேட்பேன். யார் தவறு செய்தாலும் நான் களத்தில் நிற்பேன். அடுத்ததாகத் தமிழ்நாடு அரசு பெண்கள் பாதுகாப்புக்கு என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுவேன். ஆனால், பா.ஜ.க. மாநிலத் தலைவர் வெறும் குற்றச்சாட்டை முன்வைத்து அரசியல் மட்டுமே செய்து வருகிறார்.