Skip to main content

வாகனத்தில் சென்ற புதுமண தம்பதி; பெண் காவல் உதவி ஆய்வாளருக்கு நேர்ந்த சோகம்!

Published on 05/01/2025 | Edited on 05/01/2025
Accident in Chidambaram

திருமணமாகி இரண்டு மாதம் கூட நிறைவடையாத நிலையில் பெண் காவல் உதவி ஆய்வாளர், தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது அரசு பேருந்து ஏறி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சிதம்பரம் அருகே ஜெயங்கொண்ட பட்டினம் கிராமத்தைச் சேர்ந்தவர் இளவரசி. இவர் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், சேத்தியாத்தோப்பு, உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் உதவி காவல் ஆய்வாளராக பணிபுரிந்த நிலையில் தற்போது குமராட்சி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தார்.

இவருக்கும், அதே கிராமத்தைச் சேர்ந்த கலைவேந்தன் என்பவருக்கும் கடந்த வருடம் நவம்பர் மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில், இருவரும் சிதம்பரம் அருகே உள்ள வீரன்கோவில் திட்டு கிராமத்திற்கு உறவினர் வீட்டிற்கு சுப நிகழ்ச்சிக்கு சென்றபோது, சிதம்பரம் கொடியம்பாளையம் செல்லும் சாலையில் சித்தாலபாடி என்ற இடத்தில் கொடியம்பாளையம் கிராமத்தில் இருந்து சிதம்பரம் நோக்கி வந்த அரசு பேருந்து கணவன் மனைவி சென்ற இருசக்கர வாகனத்தில் மோதியது.

இதில் உதவி காவல் ஆய்வாளர் மற்றும் அவரின் கணவர் பேருந்து அடியில் சிக்கிக்கொண்டனர். இதில் உதவி காவல் ஆய்வாளர் தலை நசுங்கி மூளை சிதறி உள்ளது. பேருந்து அடியில் இருவரும் சிக்கியதால் இருவரும் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், அரசு பேருந்தை ஓட்டி வந்த ஓட்டுநர் மற்றும் நடத்துனர் தலைமறைவாகி உள்ள நிலையில் அண்ணாமலை நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமாகி இரண்டு மாதங்கள் கூட முடியாத நிலையில் கணவன் மனைவி விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சார்ந்த செய்திகள்