பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2018 ஆம் ஆண்டு தேர்தல் பத்திரம் திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்தத் திட்டத்தின் மூலம், தனிநபர் அல்லது கார்ப்பரேட் நிறுவனங்கள், வங்கி மூலம் தேர்தல் பத்திரத்தை பெற்றுக்கொள்ளலாம். இந்தத் தேர்தல் பத்திரங்களில் வாங்குபவரின் பெயர், முகவரி, இந்த நிதி யாரிடம் இருந்து பெறப்பட்டது ஆகிய விபரங்கள் மற்றவர்களுக்குத் தெரியாது என்றும் கூறப்பட்டது. அந்த தனிநபரோ அல்லது கார்ப்பரேட் நிறுவனமோ இந்த பத்திரங்களை கொண்டு தங்களுக்கு விருப்பமான கட்சிகளுக்குத் தேர்தல் நிதியாக வழங்கலாம். மேலும், அந்த கட்சிகள் 15 நாட்களுக்குள் எந்தவித கட்டுப்பாடுமின்றி இதனை நிதியாக மாற்றிக்கொள்ளலாம். அப்படி இல்லையென்றால், அந்த தேர்தல் பத்திரத் தொகை பிரதமர் நிவாரண நிதியில் டெபாசிட் செய்யப்படும் என்று அந்த திட்டத்தில் கூறப்பட்டது.
இந்த திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இதையடுத்து, அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலமாக நிதியை பெறுவது என்ற திட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனிடையே, மத்திய அரசு சார்பில் தலைமை வழக்கறிஞர் வெங்கடரமணி இது குறித்து கடந்த 29 ஆம் தேதி இது தொடர்பான எழுத்துப்பூர்வ வாதத்தை தாக்கல் செய்தார். அப்போது அதில், “கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தாமல் அனைத்தையும் அறிந்துகொள்ளும் பொதுவான உரிமை இருக்க முடியாது. கட்சி பெறும் நிதி விபரங்களை மக்கள் அறிந்துகொள்ள உரிமை இல்லை. எல்லாத் தரவுகளையும் பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய அவசியம் இல்லை. எனவே, இந்த விவகாரம் நீதிமன்றத்தின் வரம்பிற்குள் அடங்காது” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இது தொடர்பான விசாரணை, தலைமை நீதிபதி டி.ஓய். சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, பி.ஆர். கவாய், ஜே.பி. பரிதிவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகிய ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வில் முதல் நாளான நேற்று (31-10-23) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் பிரசாந்த் பூஷன், கபில் சிபில் ஆகியோர் தங்களது வாதத்தை முன்வைத்தனர்.
அதில் அவர்கள், “தேர்தல் தொடர்பான சட்டம் என்பது இந்திய இறையாண்மைக்கு எதிரானது. மேலும், இது இந்திய ஜனநாயகத்துக்கு எதிரானது. இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தும் போது, தேர்தல் ஆணையம் மற்றும் ரிசர்வ் வங்கி ஆகியவை எதிர்ப்பு தெரிவித்தது. அரசியல் கட்சிகளுக்கு யார் நிதியளிக்கிறார்கள் என்ற விபரத்தை அறிந்துகொள்ளும் உரிமை வாக்காளர்களுக்கு நிச்சயமாக இருக்கிறது. இதுபோன்ற நன்கொடை ஊழலை தான் ஊக்குவிக்கிறது” எனத் தெரிவித்தனர்.
அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி டி.ஓய். சந்திரசூட், “தேர்தல் பத்திரத்தின் மூலம் நன்கொடை அளிப்பவரின் விபரங்களை வெளியிட்டால், இந்த கட்சிக்கு நீங்கள் பங்களித்ததை மற்ற அரசியல் கட்சிகள் அறிந்து கொள்ளும். இதனால், அவர்கள் பாதிக்கப்படலாம் என்ற அனுமானமும் உள்ளது என்பதை கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். இருப்பினும், இது அரசின் கொள்கை சார்ந்த ஒன்றாக இருக்கிறது” என்று தெரிவித்தார்.