விழுப்புரம் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநில மாநாடு நேற்று முன் தினம் (03-01-25) அன்று தொடங்கியது. இந்த மாநாட்டில், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர்கள் டி.கே.ரங்கராஜன், எம்.பிக்கள் சு.வெங்கடேசன், சச்சிதானந்தம், எம்.எல்.ஏக்கள் நாகை மாலி, சின்னத்துரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசுகையில், “தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசர நிலையை முதல்வர் பிரகடனம் செய்துவிட்டாரா?. தமிழகத்தில் போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுப்பது ஏன்? சீப்பை மறைத்து வைத்தால் திருமணத்தை நிறுத்திவிடலாம் என நினைக்க வேண்டாம். விவசாயிகள், தொழிலாளர்களுக்கு எதிராக திமுக அரசு செயல்பட்டால் போராடுவோம்” என்று பேசி இருந்தார்.
திமுக கூட்டணியில் இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர், திமுகவுக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தது தமிழக அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கே.பாலகிருஷ்ணனின் பேச்சை தி.மு.கவின் நாளேடான முரசொலி விமர்சித்து கட்டுரை வெளியிட்டது. இந்த நிலையில், கே.பாலகிருஷ்ணனின் கருத்து தான் அனைத்து கட்சிகளின் கருத்து என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
திருச்சியில், அமமுக கட்சி நிர்வாகிகள் கூட்டம் டிடிவி தினகரன் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு டிடிவி தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் சொன்ன கருத்து தான் இங்குள்ள அனைத்து கட்சிகளின் கருத்தும். முரசொலி பத்திரிகையில் வந்திருப்பதாக சொல்லியிருக்கும் கருத்துக்கள், ஹிட்லர் போல் முதல்வர் ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார் என்பதற்கு உதாரணமாக இருக்கிறது. மற்றவர்கள் செய்ததை நாடகம் என்று சொல்லி திமுக தவறான முன்னுதாரணங்களை வருவதால் தான், தோழமை கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடந்த ஒரு வாரமாக வார்த்தை பிரோயதங்களை செய்தார்கள். தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி இருக்கிறது என்பது தான் உண்மை” என்று கூறினார்.