உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களால் வருடந்தோறும் பொங்கல் திருநாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த கொண்டாட்டத்தையொட்டி தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு, இலவச வேட்டி, சேலைகள் மற்றும் ரொக்கப் பணம் வழங்கப்படுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு தைப்பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்குத் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு வழங்கிட அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது. வழக்கமாக வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகை, இந்தாண்டிற்கு வழங்கப்படாதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், புதுச்சேரியில் பொங்கல் பரிசாக ரூ.750 வழங்கப்படும் என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். பொங்கல் பண்டிகையையொட்டி இந்த முறை பொங்கல் பரிசுத் தொகுப்பிற்கு பதிலாக புதுச்சேரியில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ.750 வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் ரங்கசாமி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.