விழுப்புரம் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநில மாநாடு நேற்று முன் தினம் (03-01-25) அன்று தொடங்கியது. 3, 4, 5 ஆகிய மூன்று தேதிகளில் நடைபெற்ற இந்த மாநாட்டில் முதல் நாளின் போது மாநாடு மற்றும் செந்தொண்டர் பேரணி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இரண்டாவது நாளில், மாநாட்டு பிரதிநிதிகளின் விவாதம் நடைபெற்றது.
இந்த நிலையில் மூன்றாவது நாள், இன்று (05-01-25) புதிய நிர்வாகிகள் மற்றும் புதிய மாநிலக் குழு, மாநில செயற்குழு, புதிய மாநில செயலாளர் தேர்வு நடைபெற்றது. இதில் புதிய மாநிலச் செயலாளராக, பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினராக பதவி வகித்து வரும் பெ.சண்முகம், மலைவாழ் மக்கள் சங்கத்தின் தலைவராக பதவி வகித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் அமைப்பு, விவசாய சங்க மாநில செயலாளராகவும் பெ.சண்முகம் பதவி வகித்துள்ளார். தற்போதைய மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனின் பதவி காலம் நிறைவடைந்ததையொட்டி, பெ.சண்முகம் அடுத்த மாநிலச் செயலாளரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விதிப்படி மாநிலச் செயலாளர் வயது 72 வயதுக்குள இருக்க வேண்டும். கே.பாலகிருஷ்ணன் 71 வயதை கடந்த நிலையில் புதிய மாநிலச் செயலாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளது.