மஹாராஷ்ட்ரா மாநிலத்தின் மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்றபோது, சட்டமன்ற கூட்டத்தொடரில் கடுமையான அமளியும், கூச்சல் குழப்பமும் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், அவை ஒத்திவைக்கப்பட்ட பிறகு, சபாநாயகரின் அறைக்குச் சென்ற பாஜக உறுப்பினர்கள் சபாநாயகரைத் தவறான வார்த்தைகளால் திட்டியதாகவும், அவரை தாக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து 12 பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் ஒருவருடத்திற்கு இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதற்கான தீர்மானம் சட்டமன்ற விவகாரத்துறை அமைச்சரால் கொண்டுவரப்பட்டு, குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இந்த இடைநீக்க உத்தரவை எதிர்த்து, இடைநீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்தநிலையில் இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கூட்டத்தொடரின் எஞ்சிய காலத்திற்கு அப்பாலும் சட்டமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்தது அரசியலமைப்புக்கு எதிரானது, நியாயமற்றது என கூறி, 12 பாஜக சட்டமன்ற உறுப்பினர்களின் இடைநீக்கத்தை ரத்து செய்துள்ளது. மேலும் சட்டமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்ய கொண்டுவரப்பட்ட தீர்மானம், சட்டத்தின் கண்களில் பலனற்றதாக, சபையின் அதிகாரங்களுக்கு அப்பாற்பட்டதாக இருப்பதாகவும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.