
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் மலை உச்சியில் சுற்றுலாப் பயணிகள் குழு ஒன்று பைசரன் புல்வெளிகளில் நேற்று ((22.04.2025) குதிரை சவாரி செய்து கொண்டிருந்தனர். அப்போது ராணுவ சீருடை அணிந்து வந்த பயங்கரவாத கும்பல், சுற்றுலாப் பயணிகள் மீது கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். மேலும் 17 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இதையடுத்து, பஹல்காம் பகுதியில் பலத்த பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் இந்திய ராணுவப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே இந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்கள் ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு நேரில் சென்ற மத்திய அமைச்சர் அமித்ஷா உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
இந்த தாக்குதலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் எனவும், படுகாயமடைந்தோருக்கு தலா ரூ.2 லட்சமும், லேசான காயமடைந்தோருக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா அறிவித்துள்ளார். அதோடு உயிரிழந்தவர்களின் உடல்களை சொந்த ஊர்களுக்கு எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த தாக்குதலில் உயிரிழந்தோருக்கு இன்றைய ஐ.பி.எல். போட்டியின்போது மௌன அஞ்சலி செலுத்தப்படும் என இந்திய கிரிக்கெட் வாரியம் (பி.சி.சி.ஐ.) அறிவித்துள்ளது. எனவே கிரிக்கெட் வீரர்கள், போட்டியின் நடுவர்கள் என அனைவரும் இன்றைய போட்டியின் போது கருப்பு நிற பட்டை அணிந்து பங்கேற்பர் எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது. போட்டியின்போது கொண்டாட்ட நிகழ்ச்சி எதுவும் நடைபெறாது. பட்டாசுகள் வெடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது என பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இந்த தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளின் வரைபடங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த தாக்குதலை நேரில் பார்த்தவர்கள் அளித்த தகவல்களின் அடிப்படையில் 3 பயங்கரவாதிகளின் வரைபடம் வரையபட்டுள்ளது. அஷிஃப் ஃபௌஜி, சுலைமான் ஷா, அபுத் தல்ஹா ஆகியோர் தாக்குதலில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மொத்தம் 6 பேர் கொண்ட குழுவினர் தாக்குதல் நடத்திய நிலையில் 3 பேரின் வரைப்படங்கள் மற்றும் பெயர்கள் தற்போது வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.