Skip to main content

மேகதாது அணை விவகாரம்: புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி பிரதமருக்கு கடிதம்..!  

Published on 15/07/2021 | Edited on 15/07/2021

 

mekedatudam issue; Puducherry Chief Minister Rangasamy's letter to the Prime Minister ..!

 

காவிரியின் குறுக்கே மேகதாது என்னுமிடத்தில் புதிய அணை கட்டும் கர்நாடகாவின் முயற்சிக்கு மத்திய அரசு ஒருக்காலும் அனுமதிக்க கூடாது என புதுச்சேரி அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

 

காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் கர்நாடக அரசு அணை கட்டும் முயற்சியைத் தடுப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் உள்ள முதலமைச்சர் அறையில், முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் நடைபெற்றது. புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் முன்னிலையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த அமைச்சர் சந்திர. பிரியங்கா, எம்.எல்.ஏக்கள் திருமுருகன், பி.ஆர். சிவா, பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள், காவிரியின் குறுக்கே அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. இந்த அணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் கிடைக்காது. அதனால் புதுச்சேரிக்கும் காவிரி நீர் ஒரு சொட்டு கூட கிடைக்காத சூழல் உருவாகிவிடும். ஏற்கனவே காரைக்கால் பகுதிக்கு காவிரி நீர் வந்து சேர்வதில் பல்வேறு தடைகள் இருக்கும் நிலையில், காவிரியின் குறுக்கே மேலும் ஒரு புதிய அணை கட்டுவதால் காரைக்காலில் விவசாயம் அழிந்து போகும். புதுச்சேரி மாநிலத்தின் வளர்ச்சிக்குப் பெரும் பின்னடைவு ஏற்படும் எனவும், நதிநீர் பங்கீடு, உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக செயல்படும் கர்நாடக அரசின் அணை கட்டும் நடவடிக்கையைத் தடுக்க வேண்டும் எனவும், இதன் முதற்கட்டமாக புதுச்சேரி அரசின் நிலைப்பாட்டினை தெரிவித்து, மேகதாதுவில் அணை கட்டுவதை ஒரு காலத்திலும் அனுமதிக்க கூடாது எனக் குறிப்பிட்டு பிரதமர் மோடி, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் ஆகியோருக்கு கடிதம் எழுதுவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

 

அதனைத் தொடர்ந்து முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு அரசு தங்களது அதிருப்தியை ஏற்கனவே தெரிவித்திருந்தது. இருப்பினும் கர்நாடக அரசு, மத்திய நீர் ஆணையத்தின் ஒப்புதல் பெற்று தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளது. விவசாயிகள் வாழ்வாதாரத்தைக் கருத்தில்கொண்டு அணை கட்டும் திட்டத்தைக் கைவிடுமாறு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் ஆகியோருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்' என கூறப்பட்டுள்ளது.

 


 

சார்ந்த செய்திகள்