Skip to main content

“அவைக்குள் ஜாதியைப் பற்றி பேசுவதன் மூலம் மக்களை தூண்டிவிடக் கூடாது” - மல்லிகார்ஜுன கார்கே

Published on 23/12/2023 | Edited on 23/12/2023
“People should not be provoked by talking about caste in them” - Mallikarjuna Karke

நாடாளுமன்றத் தாக்குதல் நினைவு தினமான கடந்த 13 ஆம் தேதி, மீண்டும் நாடாளுமன்ற மக்களவையினுள் பாதுகாப்பு அத்துமீறல் நடந்தது. கடந்த 13ம் தேதி நாடாளுமன்றக் கூட்டத்தொடர் வழக்கம்போல் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, நாடாளுமன்ற வளாகத்தில் பார்வையாளர்களாக வந்திருந்த இரண்டு நபர்கள் வண்ணப் புகையை அவை முழுக்க வீசிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதனைத் தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்றும், நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் வந்து, பாதுகாப்பு மீறல் குறித்து விளக்கம் தர வேண்டும் என்று கோரிக்கை வைத்து நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவத்துக்கு பின்பு இதுவரை 146 எம்.பி.க்கள் மீது இடைநீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது பேசுபொருளாக மாறியுள்ளது. 

இந்த நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் கடந்த (19-12-23) காலை, இடைநீக்கம் செய்யப்பட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள், பதாகைகளை ஏந்தி மத்திய அரசுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தின் போது, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி, மாநிலங்களவை தலைவரும் குடியரசுத் துணைத் தலைவருமான ஜகதீப் தன்கர் அவை நடவடிக்கையின் போது செய்வதைப் போல், அனைவரின் முன்னிலையில் நடித்துக் காட்டிக் கொண்டிருந்தபோது, ராகுல் காந்தி தனது செல்போனில் அந்த காட்சியை வீடியோ எடுத்தார். ஜகதீப் தன்கரை போல் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. நடித்துக் காட்டிய காட்சியையும், அதனை ராகுல் காந்தி வீடியோவாக எடுத்த காட்சியும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி சர்ச்சையாகி வருகிறது. இதற்கு ஆளும் கட்சியான பா.ஜ.க எம்.பி.க்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். 

இது தொடர்பாக குடியரசுத் துணைத் தலைவரும், மாநிலங்களவை தலைவருமான ஜகதீப் தன்கர் தனது கண்டனத்தை தெரிவித்திருந்தார். அதில் அவர்,  “இது விவசாயக் குடும்பத்திலிருந்து வந்த எனக்கும் எனது ஜத் சமூகத்திற்கும் அளிக்கப்பட்ட அவமானம்” என்று கூறியிருந்தார். 

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “மாநிலங்களவைத் தலைவரின் கடமை என்பது அவைக்குள் உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதாகும். அவைக்குள் ஜாதியைப் பற்றி பேசுவதன் மூலம் மக்களை தூண்டிவிடக் கூடாது. நான் கூட அவையில் பேசுவதற்கு அனுமதிக்கப்படவில்லை. உடனே நான் தலித் என்பதால்தான் எனக்கு பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது என்று கூறலாமா?” என்று கேள்வி எழுப்பினார். 

சார்ந்த செய்திகள்