
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் குதிரை சவாரி செய்து கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் மீது நேற்று முன்தினம் (22.04.2025) பயங்கரவாத கும்பல் தாக்குதல் நடத்தியதில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் 17 பேர் காயமடைந்தனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் காஷ்மீருக்குச் சுற்றுலா பயணம் மேற்கொண்டவர்கள் மீது பயங்கரவாத கும்பல் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்திய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, பஹல்காம் உள்ளிட்ட ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு தீவிர கண்காணிப்பில் இந்திய ராணுவப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். அதே சமயம் பஹல்காம் பகுதியில் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கை நடந்து வருகிறது. காஷ்மீரில் உள்ள தீவிரவாதிகளைப் பிடிக்க ட்ரோன் கேமராக்கள், மோப்ப நாய்கள் உதவியுடன் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. அதோடு ஹெலிகாப்டர்கள் மூலம் மலைப்பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் காஷ்மீரில் உள்ள உதாம்பூர் மாவட்டம் பாசன்கார்க் என்ற பகுதியில் ராணுவத்தினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள் ராணுவத்தினரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது. இவ்வாறு நடந்த துப்பாக்கிச் சண்டையில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர் ஒருவர் படுகாயமடைந்ததாகக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இருப்பினும் ராணுவ வீரர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக நேற்று ஜம்மு - காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் அமைந்துள்ள எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இந்திய ராணுவத்தினர் ஊடுருவல் முயற்சியை முறியடித்து 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.