
பழங்குடியின இளைஞரை மின் கம்பத்தில் கட்டி வைத்து இரண்டு நபர்கள் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள அட்டப்பாடியைச் சேர்ந்தவர் 19 வயது சிஜி. பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த இவர் சாலையோரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த பால் சேகரிப்பு வேன் அருகே வழுக்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது. சாலையைத் தடுத்து வேண்டுமென்றே விழுந்து வாகனத்தை சேதப்படுத்தியதாகக் கூறி, வாகனத்தை ஓட்டிய விஷ்ணுதாஸ் (31) மற்றும் அவரது உதவியாளர் ரெஜி மேத்யூ (21) ஆகிய இரண்டு பேரும் சிஜுவை சாலையோர மின் கம்பத்தில் கட்டி வைத்து தாக்கியுள்ளனர்.
சிஜுவை மின் கம்பத்தில் கட்டப்பட்ட நிலையிலேயே சுமார் 30 நிமிடங்கள் அங்கேயே விட்டு அவர்கள் சென்றுள்ளனர். அதன் பின்னர் அங்கு சென்ற வழிப்போக்கர்கள், சிஜுவை விடுவித்தனர். பழங்குடியின் இளைஞரை மின்கம்பத்தில் கட்டி வைத்தது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. அதனை தொடர்ந்து, விஷ்ணுதாஸ் மற்றும் ரெஜி மேத்யூ ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்துள்ளனர். சிஜு தற்போது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாகக் கூறப்படுகிறது.