Skip to main content

“சம்பளம் வேண்டாம்” - ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் 

Published on 02/07/2024 | Edited on 02/07/2024
Andhra Pradesh Deputy Chief Minister Pawan Kalyan refused salary

சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலோடு ஒடிசா, ஆந்திரப் பிரதேசம், சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலும் நடைபெற்றது. இதில் ஆந்திரப் பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தலில் ஆட்சியில் இருந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்த்து தெலுங்கு தேசம் கூட்டணி அபார வெற்றி பெற்றிருந்தது. 175 தொகுதிகள் கொண்ட ஆந்திராவில், தெலுங்கு தேசம் கட்சி 135 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சிகளான ஜன சேனா கட்சி 21 இடங்களிலும், பா.ஜ.க 8 இடங்களிலும்  வெற்றி பெற்றது.  

அந்த வகையில் சட்டமன்றத் தேர்தலில் சந்திரபாபு நாயுடு ஆந்திர முதல்வராக கடந்த மாதம் 12ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டார். இதனையடுத்து, ஆந்திர அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கப்பட்டன. அதன்படி முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்குச் சட்டம் மற்றும் ஒழுங்கு, பொது நிறுவனங்கள் மற்றும் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்படாத அனைத்து துறைகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டன. ஜன சேனா கட்சியின் தலைவரும், நடிகருமான பவன் கல்யாண் துணை முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். 

இந்த நிலையில், தனக்கு வழங்கப்பட்ட சம்பளத்தை வாங்க மறுத்துள்ளதாக பவன் கல்யாண் தெரிவித்துள்ளார். நலன்புரி ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தில் பங்கேற்ற பிறகு ஒரு கூட்டத்தில் பங்கேற்று பவன் கல்யாண் கூறியதாவது, “முகாம் அலுவலகத்தை புதுப்பிப்பதற்காகவும் பழுதுபார்ப்புக்காகவும் என்ன செய்ய வேண்டும் என்று அதிகாரிகள் என்னிடம் கேட்டனர். நான் அவர்களிடம், ஒன்னும் செய்ய வேண்டாம். அதை அப்படியே விடுங்கள் என்று சொன்னேன். புதிய மரச்சாமான்கள் எதுவும் வாங்க வேண்டாம், தேவைப்பட்டால் நானே கொண்டு வந்து தருகிறேன் என்று சொன்னேன்.

மூன்று நாட்கள் சபையில் கலந்துகொள்வதற்காக எனது சம்பளம் ரூ.35,000 தொடர்பான ஆவணங்களில் என்னிடம் கையொப்பம் பெற செயலகத்தில் இருந்து அதிகாரிகள் வந்தனர். ஆனால், நான் சம்பளம் வாங்க முடியாது என்று கூறிவிட்டேன். நான் அமைச்சராக இருக்கும் பஞ்சாயத்து ராஜ் துறையில் போதிய நிதி இல்லை என்பதால், அந்தச் சலுகைகளை மறுத்துவிட்டேன்” என்று கூறினார். 

சார்ந்த செய்திகள்

 

Next Story

“ஆந்திர மாநில மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள்” - செல்வப்பெருந்தகை ஆவேசம்!

Published on 30/06/2024 | Edited on 30/06/2024
People of Andhra State will never forgive

ஆந்திராவில் உள்ள பாபட்லா மாவட்டத்தில் அம்மாநிலத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டிக்கு சிலை ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. இந்த சிலைக்கு அடையாளம் தெரியாத மர்மநபர்கள் நேற்று (29.062024) தீ வைத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த சம்பவத்திற்குத் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான கு. செல்வப்பெருந்தகை தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமது இளமைப்பருவம் முதல் காங்கிரஸ் இயக்கத்தில் இணைந்து ஆந்திர மாநிலம் முழுவதும் யாத்திரை மேற்கொண்டு மக்களைச் சந்தித்து உரையாடி, நம்பிக்கை பெற்று சோனியா காந்தியின் ஆதரவோடு அம்மாநிலத்தின் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுச் சிறப்பாக பணியாற்றியவர் மறைந்த ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி. அம்மாநிலத்தில் பரவியிருந்த பிற்போக்கு சீர்குலைவு சக்திகளை முறியடித்து, ஆந்திர மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் சென்றவர். இவர் ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்தது ஆந்திர மாநிலத்திற்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கே பேரிழப்பு. அத்தகைய வலிமையான தலைமையை இழந்ததனால்தான் இன்றைக்கு மொழியின் அடிப்படையில் அமைக்கப்பட்ட ஆந்திர மாநிலம் இரு கூறுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. 

People of Andhra State will never forgive

ஒன்றுபட்ட ஆந்திராவின் வளர்ச்சிக்கு தம்மை அர்ப்பணித்துக்கொண்ட மறைந்த ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் சிலையைத் தீ வைத்துச் சேதப்படுத்தியிருப்பதைத் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன். ஒட்டுமொத்த ஆந்திர மாநில வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட மறைந்த தலைவரை இழிவுபடுத்துகிற வகையில் அவரது சிலையைச் சேதப்படுத்தியதை விட நன்றி கெட்ட செயல் வேறு எதுவும் இருக்க முடியாது. அப்படிப்பட்ட செயலை செய்தவர்கள் எவராக இருந்தாலும் ஆந்திர மாநில மக்கள் அவர்களை மன்னிக்கவே மாட்டார்கள்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

மக்களவை சபாநாயகர் பதவி?; சந்திரபாபு நாயுடு கூறிய முக்கிய தகவல்

Published on 24/06/2024 | Edited on 24/06/2024
 Important information given by Chandrababu Naidu for Lok Sabha Speaker post?

ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்தல் பரப்புரையில், அதிக பெரும்பான்மையாக 400 இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைப்போம் என பா.ஜ.க தொடர்ந்து கூறி வந்தது. ஆனால், ஜூன் 4ஆம் தேதி வெளியான தேர்தல் முடிவுகள் பா.ஜ.கவுக்கு பெரும் ஏமாற்றத்தைப் பெற்றுத் தந்தது. 

543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றுள்ளது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பா.ஜ.க தனித்து 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தது. இதனால் ஆட்சி அமைக்கத் தனிப்பெரும்பான்மை இல்லாத பா.ஜ.கவுக்கு, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சி மற்றும் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளார். 

இதற்கிடையில், பா.ஜ.கவுக்கு ஆதரவளித்த தெலுங்கு தேசம் கட்சியும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியும்,  பல்வேறு நிபந்தனைகள் விதித்ததாகத் தகவல் வெளியானது. அதில், மூன்றுக்கும் மேற்பட்ட கேபினட் அமைச்சர்கள் பதவியைத் தெலுங்கு தேசம் கட்சிக்கு வழங்க வேண்டும் என்றும் சபாநாயகர் பதவியை எதிர்பார்ப்பதாகவும் தகவல் வெளியானது. அதே போல், ரயில்வே உள்ளிட்ட முக்கிய துறைகளை ஒதுக்க வேண்டும் என்றும், சபாநாயகர் பதவி தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்றும் ஐக்கிய ஜனதா தளம் எதிர்பார்ப்பதாகத் தகவல் வெளியானது. 

இதனிடையே, மக்களவையின் முதல் கூட்டத்தொடர் வரும் ஜூன் 24ஆம் தேதி தொடங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இன்று (24-06-24) தொடங்கிய மக்களவைக் கூட்டத்தொடர் ஜூலை 3ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அந்த வகையில், இன்று மக்களவை தற்காலிக சபாநாயகராக பாஜக எம்.பி. பர்த்ருஹரி மஹ்தாப் பதவியேற்றார். அதேவேளையில் மக்களவை சபாநாயகர் தேர்தல் ஜூன் 26ஆம் தேதி நடைபெறும் என மக்களவை செயலகம் அறிவிப்பு வெளியிட்டது. 

இந்த நிலையில், சபாநாயகர் பதவிக்கான தங்களில் நிலைப்பாடு என்ன என்பதைத் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், ஆந்திரப் பிரதேச முதல்வருமான சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். ஆந்திராவில் நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் பேசிய சந்திரபாபு நாயுடு, “மக்களவை சபாநாயகர் தேர்தலுக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடன் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. அந்த அழைப்பில் சபாநாயகர் தேர்தல் குறித்து அமித்ஷா என்னிடம் பேசினார்.

ஆனால், அதற்கு நான் தெலுங்கு தேசம் கட்சிக்குச் சபாநாயகர் பதவி தேவையில்லை, அரசுக்கு நிதி மட்டுமே வேண்டும் என்று கூறினேன். மாநிலம், பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் பல உதவிகளைச் செய்யுமாறும் கூறினேன். ஆந்திரா மக்கள் கூட்டணியை நம்பி ஆட்சியைக் கொடுத்துள்ளனர். அதனால், மேலும் பதவி கேட்டால் மாநில நலன் பாதிக்கப்படும். மாநில நலன்களே நமக்கு முக்கியம்” என்று கூறினார். முன்னதாக, மக்களவை சபாநாயகர் தேர்தலில் பா.ஜ.க பரிந்துரைக்கும் வேட்பாளருக்கு ஆதரவளிப்பதாக ஐக்கிய ஜனதா தளம் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.