கோவையில் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் அணிந்திருந்த நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை கணபதி போலீஸ் காலனியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது மனைவி இந்திராணி (வயது 62). ஓய்வு பெற்ற பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர். இவர் நேற்று மாலை வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த வாலிபர் ஒருவர் இந்திராணி கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் நகையை பறித்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் சத்தம் போட்டார். உடனே அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர். அதற்குள் நகை பறித்த வாலிபர் அங்கு தயாராக நின்ற மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி ஓடி விட்டார். புகாரின் பேரில் சரவணம்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல், போத்தனூர் சுந்தராபுரத்தை சேர்ந்தவர் மகேஸ்வரி (39). அரசு பள்ளி ஆசிரியை. இவர் வீடு அருகே நடந்து சென்ற போது அவரை பின் தொடர்ந்து வந்த வாலிபர் ஒருவர் மகேஸ்வரி அணிந்திருந்த 5 பவுன் நகையை பறிக்க முயன்றார். சுதாரித்துக் கொண்ட மகேஸ்வரி நகையை பறிகொடுக்காமல் இறுக்கி பிடித்துக் கொண்டு திருடன்... திருடன்... என சத்தம் போட்டார். உடனே வாலிபர் அங்கிருந்து ஓடி, அங்கு மோட்டார் சைக்கிளில் காத்திருந்த கூட்டாளியுடன் தப்பினார்.
இந்த இரு சம்பவங்கள் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே நாளில் நடைபெற்ற 2 நகைபறிப்பு சம்பவங்கள் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நகைபறிப்பு சம்பவங்கள் நடைபெற்ற பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். இதில் 3 சம்பவங்களிலும் ஒரே கும்பல் கைவரிசை காட்டியது கண்டுபிடிக்கப்பட்டது.
ஒரு வாலிபர் ஹெல்மெட் அணிந்தவாறு மோட்டார் சைக்கிளில் தயாராக நிற்கிறார். மற்றொரு வாலிபர் நகையை பறித்துக் கொண்டு, தயாராக நிற்கும் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி செல்லும் காட்சிகளை சேகரித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.