குறிப்பு : இந்தத் தொடர் ஒரு குற்றவாளிக்கு வக்காலத்து அல்ல. 1994ஆம் ஆண்டு நக்கீரனில் இந்தத் தொடர் வெளிவருவதைத் தடுக்க அதிகாரத்தின் உச்சியில் இருப்பவர்கள் எத்தனையோ கெடுபிடிகளை செய்தார்கள். அதுவே ஒரு தனிக்கதை. அந்த அளவுக்கு ஆட்டோ சங்கருடன் பல அரசியல்வாதிகள், அதிகாரிகள் தொடர்பு இருந்தது. நாம் சற்றும் எதிர்பார்க்காத தலைவர்கள் கூட அவனது வாழ்வில் வந்து போவார்கள். அதிர்ச்சிகள் காத்திருக்கின்றன, அடுத்தடுத்த பகுதிகளில்...
என் வாழ்க்கையை எந்த இடத்தில் இருந்து சொல்ல ஆரம்பிச்சாலும் வேதனையான முள் ஒண்ணு விசாலமா முளைச்சிருப்பதைப் பார்க்கலாம். மத்தவங்களுக்கு வாழ்க்கையிலே கஷ்டம் வரும். எனக்குக் கஷ்டமே வாழ்க்கையாயிடுச்சு.
அப்ப எனக்கு ஏழெட்டு வயசிருக்கும். பள்ளிக்கூடம் விட்டு வந்ததும் வராததுமா சுடச்சுட அந்தச் செய்தியை சொன்னாங்க. அம்மா வாயிலேயும் வயித்திலேயும் அடிச்சுக்கிட்டு அழுதுச்சு. "டேய் சங்கரு! உன் அப்பா ஒருத்தியோட ஓடிப் போயிட்டாருடா!'' என் காதுலே காய்ச்சின இரும்பை ஊற்றின வலி! அந்தச் செய்தியை ஜீரணிச்சுக்கிற வயசில்லை அது; இன்னும் சொல்லப்போனா அது செய்தியே இல்லை. இடி! பையன் வீட்டைவிட்டு ஓடறது நடக்கும். தகப்பன் ஓடறதாவது? ஏற்கனவே என் அப்பாவுக்கு ரெண்டு பெண்டாட்டி. மூத்த சம்சாரம் இருக்கிறப்ப ரெண்டாவதா என் அம்மாவைக் கட்டிக்கிட்டாரு... இந்த மூன்றாவது சம்சாரம் புது சமாச்சாரம்!
என் அம்மாவுக்கும், பெரியம்மாவுக்கும் இருந்த குழந்தைகளை வச்சு ஒரு நர்சரி ஸ்கூலே நடத்தலாம். அம்புட்டு பிள்ளைங்க! ஓடிப்போன மனுஷன் சும்மா போயிருக்கக் கூடாதா... இருந்த சொத்து பத்தையெல்லாம் வித்து, பணத்தையும் எடுத்துகிட்டு போயிட்டாரு! நாங்க சோத்துக்கு லாட்டரி!
அம்மாவும், பெரியம்மாவும்... ஏன், மொத்த குடும்பமும் இடிஞ்சு போயிட்டோம்.
"இனிமே என்ன பண்றது?'
எனக்கு பயங்கரக் குழப்பம்.
அப்பா ஏன் ஓடிப்போகணும்? வீட்டிலே ரெண்டு அம்மாவை வைச்சிருக்கிற மாதிரி, இந்த மூணாவது அம்மாவையும் வைச்சிருக்கிறதுதானே? இனிமே அப்பா வருவாரா, மாட்டாரா? வருவார்ன்னா எப்ப? வந்து கொஞ்சநாள்லே நாலாவதா ஒரு அம்மாவைக் கூட்டிவருவாரா? அவளோடும் ஓடிப்போவாரா? இன்னும் எத்தனை அம்மாவைக் கூட்டி வருவார்? இதுக்கெல்லாம் யாரிடம் கேட்டால் பதில் தெரியும்?
அம்மாகிட்டே கேட்க மனசில் தெம்பில்லை. பிடிக்காத கேள்விகளுக்குப் பதில் கேட்டால், ஒண்ணு அம்மா அழும் அல்லது அடிச்சு என்னை அழவிடும். பத்து, பதினைஞ்சு குடும்பங்களுக்கு வைக்கவேண்டிய கஷ்டத்தை, கடவுள் எங்க ஒரு குடும்பத்துக்கே குடுக்கிறது எப்பவும் வாடிக்கை! அப்பவும் அப்படித்தான்.
அம்மாவும் பெரியம்மாவும் அக்கம்பக்க வீடுகளில் பாத்திரம் கழுவி, பாத்திரம் கழுவி அம்புட்டு குழந்தைகளோட வயித்தைக் கழுவ முடியுமா என்ன? குழந்தை பெறக்கிறதை நிறுத்த கருப்பையை கத்தரிக்கிறாங்களே...? அதுபோல பசியை நிறுத்த இரைப்பையை எடுத்துடலாம்ன்னு ஒரு ஏற்பாடு இருந்தா, எவ்வளவு நல்லா இருக்கும்? ஹும்!!
தம்பி மோகன் அழுதுகிட்டே வந்தது தூரத்திலிருந்தே தெரிந்தது. என்னைவிட ரெண்டு வயசு சின்னவன் அவன்! பசி பொறுக்கத் தெரியாது! அதற்குப் பழகவும் இல்லை. அப்போதைக்கு ஆறுதல் சொல்லுவேன் நான்! அம்மாகிட்டேயும் சிபாரிசு செய்வேன். அம்மா ஏதாச்சும் கொடுத்து அவன் அழுகையை நிறுத்தும். எதுவுமில்லைன்னா உதையாச்சும் கொடுத்து நிறுத்தும். எனக்குத்தான் பாவமா இருக்கும்! பசியைவிடவும் இந்த பாசம் என்னை படுத்தின பாடு ரொம்பவும் அதிகம்!
அவன் அழுகைக்குக் காரணம் கேட்டேன். ஸ்கூல்லே யாரோ ஒரு பையன் எங்க அப்பா ஓடிப்போனதை சொல்லி கேலி பண்ணிக்கிட்டேயிருக்கான்னு சொன்னான். எனக்கு கண்ணுமண்ணு தெரியாம கோபம் வந்துச்சு. "யாருடா அவன்?'' தம்பி பசியைத் தீர்க்கத்தான் வகை தெரியல; பழியைத் துடைக்கவுமா முடியாது.
"சொல்லு யாரவன்?''
"ஜோஸி நாயரோட பையன்''
அம்மா பாத்திரம் தேய்க்கிற வீடுகளில் ஒன்றுதான் ஜோஸி நாயர் வீடும். இருக்கட்டுமே! சம்பளம் தரதுக்குத்தான் வேலை வாங்கறாங்களே... ஏச்சும் வாங்கணுமா என்ன? ஜோஸி நாயரோட மகனை விசாரிக்கக் கிளம்பினேன்.
ஸ்கூலிலே நாங்க ரெண்டுபேரும் மும்முரமா மோதிக்கிட்டிருந்த சமயத்திலே வாத்தியார் வந்துட்டாரு. சண்டை விலக்கினாரு. எனக்கு செம அடி! "படவா ராஸ்கல்! அவனை ஏண்டா அடிக்கிறே? ஜோஸி நாயர் மகன் மட்டுமா பேசறான்... ஊர் முழுக்க உன் அப்பாவைப் பேசத்தான் செய்யுது. ஊரைப்பூரா அடிப்பியா?'' "அவரு செஞ்சதுக்கு எங்களுக்கு ஏன் சார் தண்டனைன்னு கரகரப்பா கேட்டேன். அடக்கப் பார்த்தும் மீறிக்கிட்டு கண்ணீர் ததும்பினது.
வாத்தியார் பெருமூச்சு விட்டார்! "சங்கர்... நிறைய வாய்களை மூடறதை விட ரெண்டு காதுகளையும் மூடிக்கிறது சுலபமா... இல்லையா?'' அவர் சொன்னதன் அர்த்தம், அப்ப எனக்கு சுத்தமாப் புரியல. இப்ப புரியறபோது, அது காலம் கடந்த ஞானம்!
அதற்கப்புறம் வறுமையிலே நாங்க திண்டாடினது, ஸ்கூல்லே ஜோஸி நாயரோட பையன் என் தம்பியைக் கேலி செய்தது... நான் சண்டைக்குப் புறப்பட்டது... இதெல்லாம் நடந்து ஒரு வருஷம் கூட ஆகியிருக்காது. இன்னொரு இடியையும் அந்த சின்ன வயசிலே நான் சந்திக்க வேண்டியிருந்தது. அப்பவும் அப்படித்தான் அலறினேன்.
தூங்கிட்டிருந்த என்னை உலுக்கி எழுப்பிச்சு பெரியம்மா. அரக்கப் பரக்க விழித்தேன்.
"என்ன பெரியம்மா?''
"ஒன் ஆத்தாக்காரி ஒருத்தன்கூட ஓடிப்போயிட்டாடா?''
அப்படியே உறைஞ்சு போயிட்டேன். நெஞ்சுக்குள்ளே பூமி குலுங்குகிற அதிர்வு.
"பெரியம்மா''ன்னு அலறிட்டேன்.
பெரியம்மா விவரிச்சாங்க. இருக்கிற துணிமணி, பண்ட பாத்திரத்தோட கொஞ்சநஞ்சமிருந்த பணத்தையும் தூக்கிட்டு தன் கள்ளக்காதலன் கூட அம்மா ஓடிடுச்சாம்!
அப்படியே அப்பாவோட பாணி! ரெண்டு பேருமா எங்கிருந்துதான் ஜோடி சேர்ந்தாங்களோ? உலகத்திலே யாருக்காவது கிடைப்பாங்களா சார், இப்படி ஒரு அம்மாவும் அப்பாவும்? எச்சிலைக் கடிச்சு விழுங்கினேன். தம்பி மோகன் நடந்த விபரம் தெரியாததால் வாயில் விரல்போட்டு தூங்கிக்கிட்டிருந்தான்.
"யாரு கூட ஓடிச்சு?''ன்னேன். கசப்பு என் மனசைக் கசக்கினது. பெரியம்மா அமைதியா சொல்லிச்சு.
"ஜோஸி நாயர்கூட''
நொறுங்கிப்போனேன். பெட்ரோல் கிணத்தில வெடிகுண்டு விழுந்தது மாதிரி குலைஞ்சு போயிட்டேன். மெள்ள மெள்ள அழ ஆரம்பிச்சேன். விசும்பல் வளர்ந்து பெரிசான அழுகையா மாற பெரியம்மா ஆறுதலா தடவிக்கொடுத்தாங்க.
"அழாதடா... நாதான் இருக்கேனில்ல. அப்புறமென்ன?''
அப்புறமும் என் அழுகை நின்ற பாடில்லை.
"ச்ச்ச்! கண்ணை துடைச்சிக்கயேன் ராசா! நாதான் இருக்கேனில்லே. ஏன் கவலைப்படறே?'' -பெரியம்மா.
"அதுக்கில்ல பெரியம்மா..... எனக்காச்சும் இது பழகிப்போச்சு. ஜோஸி நாயரோட மகன் பாவமில்ல? அப்பா ஓடிப்போனது அவனுக்கு இதானே மொத தடவை... எவ்வளவு கஷ்டப்படுவான் அவன்?'' அலறினேன்.
என் எதிர்காலம் திசை திரும்பியது.
எந்த திசையில்? அடுத்த வெள்ளி (11-மே-2018) சொல்கிறேன்...
முந்தைய பகுதி...