சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருகிறது. அதனால் அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களின் பலத்தைக் காட்ட முழுவீச்சுடன் தயாராகிவருகின்றன. கூட்டணி பலமாக இருந்தாலும், வியூகங்கள் வகுத்தாலும் நிதி இல்லையேல் விதி மாறும் என்பதே தற்போதைய தேர்தல் களத்துக்கான இலக்கணமாக இருக்கிறது. தேர்தலுக்கான நிதியைத் திரட்டுவதில் அனைத்து அரசியல் கட்சிகளுமே இப்போது தீவிரமாக இருக்கின்றன.
"தேர்தலில் ஒவ்வொரு வேட்பாளரும் இவ்வளவுதான் செலவு செய்யவேண்டும்' என்று வரம்பை நிர்ணயித்திருக்கிறது தேர்தல் ஆணையம். அந்த வரம்புக்குள் வீடு கட்டி விளையாட முடியாமல் திணறும் அவர்கள், கள்ளக் கணக்கை எழுதவே படாதபாடுபடுவார்கள். இவர்களின் திண்டாட்டத்தைக் கொஞ்சம் குறைக்கும்வகையில், வேட்பாளர்களின் செலவு வரம்பை 10 சதவீத அளவிற்கு அதிகரித்திருக்கிறது மத்திய அரசு. பீகார் சட்டமன்றத் தேர்தல் மற்றும் பல்வேறு மாநிலங்களில் நடக்க வேண்டிய 64 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், ஒரு மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் ஆகியவற்றை விரைவில் தேர்தல் ஆணையம் நடத்த இருக்கிறது. இந்த நிலையில்தான், வேட்பாளர்களின் செலவு வரம்பு உயர்த்தப் பட்டிருக்கிறது.
இதற்கான பரிந்துரையைக் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே தேர்தல் ஆணையம் செய்திருந்த நிலையில், இப்போது மத்திய அரசு அதை ஏற்றுக்கொண்டு, அதற்கான அரசாணையை வெளியிட்டிருக்கிறது.
மத்திய சட்டத்துறை அமைச்சகம், இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்... மக்களவை தேர்தலில் வேட்பாளர்கள் செலவு தொகை வரம்பு ரூ.70 லட்சமாக இருந்த நிலையில், தற்போது ரூ.77 லட்சமாக அது உயர்த்தப்பட்டுள்ளது. சட்டமன்றத் தேர்தல்களில் வேட்பாளர்களின் செலவு வரம்பு ரூ.28 லட்சத்தில் இருந்து ரூ.30.8 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் "வேட்பாளர்களுக்கான இந்த செலவு வரம்பானது மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடும்’என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வரம்புத் திருத்தம் மத்திய அரசால் அறிவிக்கப் படும்வரை அமலில் இருக்கும்' என்றும் கூறப் பட்டுள்ளது.
தேர்தல் நிதி வசூலிக்கும் முறை பற்றிய நடைமுறைகளில் குளறுபடிகளும் இருக்கின்றன. "எலெக்டோரல் பண்ட் என்றால், அரசியல் கட்சிகள் தேர்தல் நிதிப் பத்திரங்கள் மூலம் நன்கொடை பெறும் முறையாகும். இதை 2017-ஆம் ஆண்டு மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இதன்படி, இந்தப் பத்திரங்களைப் பாரத ஸ்டேட் வங்கியின் குறிப்பிட்ட கிளைகளில், ஒரு தனி நபர் அல்லது இந்தியாவில் நிறுவப்பட்ட அமைப்பு ஒன்றால் வாங்கமுடியும். ஒவ்வொரு காலாண்டிலும் முதல் பத்து நாட்கள் இவை விற்பனைக்குக் கிடைக்கும். வங்கி மூலமாகவே அதை அவர்கள் தாங்கள் விரும்பும் அரசியல் கட்சிக்கு நன்கொடையாக வழங்கலாம். இதில் மிகப்பெரிய பித்தலாட்டம் என்னவென்றால் அந்த பத்திரங்களில் அதை வாங்கியவரின் பெயர் இருக்காது. இப்படி, பெயர் தெரியாமல் நன்கொடை வாங்கும் தேர்தல் பத்திர முறையை எதிர்கட்சியினர் உள்ளிட்டோர் எதிர்த்து வந்தனர். குறிப்பாக "இது முறைகேட்டுக்கு வழிவகுக்கும்' என பலர் வழக்கும் தொடர்ந்தனர். தற்போது அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
சரி... இது ஒரு புறம் இருக்கட்டும். அரசியல் கட்சிகளில் மற்றொரு வடிவிலான நிதி திரட்டல் விவகாரத்தைப் பார்ப்போம். பெரும்பாலும் கட்சிகள் ஆசை காட்டியும் சிறு வியாபாரிகளை மிரட்டியும் தேர்தல் நிதி வாங்குவது வழக்கமாக இருக்கிறது. இதற்கிடையே, வணிக நிறுவனங்கள் தாமாக முன்வந்து நிதி வழங்குவதும் உண்டு. இப்படி தேர்தல் சாக்கில் பல்வேறு வகைகளில் நிதி குவிவதால், அதில் ருசிகண்ட அரசியல் கட்சிகள், ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும் தேர்தல் நிதியை வசூலிப்பதில் ஆர்வம் காட்டுகின்றன.
ஒரு கட்சியின் எந்தத் தொண்டர் அதிக அளவில் தேர்தல் நிதியை வசூலித்துத் தருகிறாரோ, அவரே சில சமயங்களில் வேட்பாளராகவும் தேர்வாகிறார். இவ்வாறாக நிதி செய்யும் தேர்தல் மாயங்கள் கொஞ்சநஞ்சமல்ல. இப்படி பல வகைகளிலிருந்து அரசியல் கட்சிகளுக்கு வந்துசேரும் தேர்தல் நிதி எவ்வளவு? அதைக் கட்சிகள் எந்தெந்த வகைகளில் பெறுகின்றன? அதை எப்படிச் செலவு செய்கின்றன என்பதில் இதுவரை எந்த வெளிப்படைத் தன்மையும் இல்லை. அவர்களைக் கண்காணிக்காமல் விடுவதால் தான், வாக்குகள் பல சரக்குக்கடைப் பொருட்கள் போல, பசைப் பார்ட்டிகளால் வாங்கப்படுகின்றன.
2004 தொடங்கி 2014 வரையிலான 11 ஆண்டுகளில் தேர்தல் செலவுகளைச் செய்திருக்கும் அரசியல் கட்சிகள், அந்தத் தொகையில் ஏறக்குறைய 70 சதத்தை எந்த வகைகளில் பெற்றன என்ற விவரம் அதி காரப்பூர்வமாகத் தெரிவிக்கப்படவில்லை. இதை ஜனநாயகச் சீர்திருத்தங்களுக்கான அமைப்பு தனது ஆய்வறிக்கையில் கூறியுள்ளது.
"வரும் சட்டமன்ற தேர்தலிலாவது தேவையற்ற பணப்புழக்கம் தடுக்கப்படுமா? அரசியல் கட்சிகளின் உண்மையான தேர்தல் வரவு செலவுக் கணக்குகள் ஆராயப்படுமா?' என்பதற்கெல்லாம் இங்கே உத்தரவாதம் இல்லை. எனவே, என்னதான் செலவு வரம்பை வைத்தாலும், வரும் தேர்தல்களிலும் வாக்காளர்களை வளைத்து ஜனநாயகத்தை முடக்க, கரன்ஸிக் கட்டுக்கள் அங்கங்கே காத்துக்கொண்டிருக்கின்றன.
-சேகுவேரா