மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பேட்டரி டார்ச் சின்னம் ஒதுக்கி தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாகவும், கூட்டணி தொடர்பாகவும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸ் நக்கீரன் இணையதளத்திடம் கருத்தினை பகிர்ந்து கொண்டார்.
மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பேட்டரி டார்ச் சின்னம் கிடைத்திருக்கிறதே?
இருள் அடைந்த தமிழகத்தை மீட்க வேண்டும் என்பதுதான் எங்கள் தலைவரின் நோக்கமாக இருந்தது. அந்த இருளை போக்க பேட்டரி டார்ச் சின்னம் கிடைத்துள்ளது. மகிழ்ச்சியாக உள்ளது.
தனித்துதான் போட்டியா? அமமுகவுடன் தொடர்பு கொண்டீர்களா?
அதிமுக, திமுக கூட்டணியில் இல்லாமல் போட்டியிடுபவர்கள் தனித்து போட்டி என்றுதான் சொல்ல முடியும். தினகரன் கட்சியுடன் கூட்டணி என்பது புலி வாயில் தப்பித்து முதலை வாயில் விழமாட்டோம். அதிமுக, திமுக வேண்டாம் என்கிறபோது தினகரன் மட்டும் எப்படி சரியாக இருக்கும். அதிமுக மீதான குற்றச்சாட்டுக்களுக்கு பொறுப்பேற்க வேண்டியவர் அவர். தினகரன் கட்சியுடன் கூட்டணி வைக்கும் எண்ணம் ஒரு சதவீதம் கூட கிடையாது.
தேமுதிகவுடன் கூட்டணி வைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதா?
விஜயகாந்த் என்கிற நேர்மையான நபர் மீது மரியாதை வைத்திருக்கிறோம். இப்போது அந்த கட்சி செல்லுகிற வழியை அனைவரும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எல்லாப்பக்கமும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். தேமுதிகவுடன் செல்ல மாட்டோம்.
விஜயகாந்தை கமல் சந்தித்து நலம் விசாரிக்கவில்லையா?
விஜயகாந்தை சந்தித்து நலம் விசாரிக்க கமலுக்கு விருப்பம் இருந்தது. ஒருவேளை கமல் போயிருந்தால் கூட்டணிக்காகத்தான் விஜயகாந்தை சந்தித்தார் என்று பேசுவார்கள். இதனால் போகாமல் இருந்தார். தேமுதிகவின் கூட்டணி உறுதியான பின்னர் ஒருவேளை விஜயகாந்தை சந்திக்க கமல் செல்ல வாய்ப்புள்ளது. இவ்வாறு கூறினார்.