தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவரும் தெலுங்கானா ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் ராஷ்ட்ரிய சேவா சங்கத்தின் ஒரு பிரிவான சம்வர்தினி நியாஸ் மூலம் உருவாக்கப்பட்ட ‘கர்ப்பசன்ஸ்கார்’ திட்டத்தை மெய்நிகர் மூலம் தொடங்கி வைத்தார்.
அப்போது பேசிய அவர், “கிராமங்களில் கர்ப்பிணிகள் ராமாயணம், மகாபாரதம் உட்பட பிற இதிகாசங்கள் மற்றும் நல்ல கதைகளைப் படிப்பதை நாம் பார்த்திருக்கிறோம். குறிப்பாக தமிழ்நாட்டில், கர்ப்பிணிகள் கம்ப ராமாயணத்தின் சுந்தரகாண்டத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நம்பிக்கை உள்ளது. எனவே, கர்ப்பகாலத்தில் சுந்தரகாண்டம் படிப்பது கருவிலிருக்கும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது” எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில் திமுக அமைச்சர் கீதா ஜீவன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் ஆளுநர் தமிழிசையின் கருத்து குறித்து கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்துப் பேசிய அவர், “ஒரு மருத்துவர் இப்படி சொன்னால் என்ன அர்த்தம். கர்ப்பிணி பெண்கள் ராமாயணம் படிக்கலாம், மகாபாரதம் படிக்கலாம், பாடல்களை கேட்கலாம், அனைத்து கதைகளையும் கேட்கலாம், இசையை கேட்கலாம். குழந்தைகளுக்கு நல்லது என்றுதான் சொல்கிறார்கள். அதற்காக ஈசியாக டெலிவரி ஆகலாம் என ஒரு மருத்துவர் பேசியது எனக்கு ஆச்சரியமாக உள்ளது” எனக் கூறினார்.