கேப்டன் விஜயகாந்த், சினிமாத்துறையில் தனது 40 ஆவது ஆண்டை இந்த வருடம் அடியெடுத்து வைக்கிறார். அதற்காக அவருக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் பல பிரபலங்கள் கலந்துகொண்டு விஜயகாந்துக்கும் அவர்களுக்குமான தொடர்பும், அவரது அரசியல் பயணம் போன்றவற்றை பற்றி புகழ்ந்து பேசியுள்ளனர். அவ்வாறு பேசியவர்களில் ஒருவரான நடிகர் சத்யராஜ் உரை,
"என் அன்பு நண்பர், புரட்சிக் கலைஞர், தேமுதிகவின் தலைவர் விஜயகாந்த் அவர்களே, அவர்களின் உள்ளங்களே". நான் எப்பொழுதும் என் நண்பனை பற்றி பேசும்போது சொல்வேன் திரையுலகில் அள்ளிக்கொடுத்தவர் எம்ஜிஆர், அதை எங்களுக்கு சொல்லிக்கொடுத்தவர் விஜயகாந்த் என்று. தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவின் எந்த ஒரு மூலையில், யாருக்கு கஷ்டம் என்றாலும் முதல் நன்கொடை இவருடையதாகத்தான் இருக்கும். ஆனால், அதில் என்ன பிரச்சனை என்னவென்றால் இவர் எக்கச்சக்கமா தூக்கி கொடுத்துவிடுவார். எங்களுக்கு எல்லாம் அது பெரிய சிரமமாகப் போய்விடும். அவர் அந்த காலத்திலேயே பத்து லட்சம் என்பதை சாதாரணமாக தூக்கி கொடுப்பவர். தற்போது அந்தத் தொகையெல்லாம் ஒரு கோடி வரை இருக்கும். அவர் அத்தனை செய்கிறார் என்பதால்தான் நாங்களும் ஓரளவுக்காவது செய்ய முன் வருவோம். இவ்வளவு செய்தும் தளராது இருக்கிறார் என்றால் அதற்கு காரணம், சகோதரி பிரேமலதாதான். நம் வீட்டில் யாராவது உதவி செய்ய முன் வருகிறோம் என்றால், அதை முதலில் வேண்டாம் என்று தடுப்பது மனைவியாகதான் இருக்கும். ஆனால், சகோதரியோ அள்ளி கொடுங்கள் என்ற மனதைக் கொண்டவர். அப்படிப்பட்ட பலம் விஜயகாந்துக்கு அமைந்திருக்கும் என்றால் அது அவரது மனைவியாக தான் இருக்க வேண்டும்,
எதுவாக இருந்தாலும் சரி, ஈழத்தில் போர் உச்சத்தில் இருந்த போது. இயக்குனர் மணிவண்ணன் இயக்கத்தில் பெரியார் திடலில் நாடகம் ஒன்றில் நடித்துக்கொடுத்து பெரும் வசூலை செய்து கொடுத்தார். அந்த நாடகத்தில் நானும் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருப்பேன். ஈழப்போருக்காக கலையுலகத்தில் இருந்து முதன்முதலில் சம்பாரித்துக்கொடுத்தவர் என் நண்பன் விஜயகாந்த்தான். நடித்ததில் மட்டுமல்ல, தன் பையனுக்கு பிரபாகரன் என்று பெயரும் சூட்டினார் அதுதான் கெத்து, அதுதான் தில், அதுதான் தூள். எல்லாவிஷயத்திலும் முதன்மையாக இருப்பவர், நடிப்பதிலும் கூட. சண்டை காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்துவிடுவார். அதேபோல மற்ற நடிகர்களிடமும் எதிர்பார்ப்பார். இவர் ஒரு தைரியசாலி. வாழ்க்கைக்கும் சரி, தொழிலுக்கும் சரி, அரசியலுக்கும் சரி தைரியம் முக்கியம்.
நான் ஒன்று கேள்விப்பட்டேன், ஒருமுறை மனோரம்மா ஆச்சி வீட்டுக்கு சென்றுவிட்டு வரும்போது வழியில் எந்த பெண்மணியின் தங்க சங்கிலியோ பறிக்கப்பட்டு ஒரு திருடன் ஓடியிருக்கிறான். அவனை விரட்டி சென்று பிடித்து கொடுத்திருக்கிறார். யாராக இருந்தாலும் இதனை செய்ய யோசிப்பார்கள். ஆனால், அவரது தைரியமும் மனிதாபிமானமும் எதையும் யோசிக்காமல் மக்களுக்காக செய்ய துணிந்தது. அவர் ஒரு உண்மையான கதாநாயகன். கார்கில் போர் காலகட்டத்தில், மதுரைக்கு ஒரு நிகழ்ச்சிக்காக சென்று வரும்போது திண்டுக்கல் கொடைரோட்டில் பஞ்சம். ரயிலை நிறுத்தி அந்த மக்களுக்கு சாப்பாடு வழங்கியவர் விஜயகாந்த். எல்லோரும் கேட்டால்தான் உதவி செய்வார்கள், ஆனால் கேட்காமலிலேயே உதவி செய்பவர் இவர் ஒருவர் தான். நான் நடித்த வள்ளல் என்ற படம் நிதி பற்றாக்குறையாக இருந்தது. அவருக்கு அந்த செய்தி எப்படியோ செல்ல காலை ஆறு மணிக்கெல்லாம் போன் செய்து வாருங்கள் என்ன என்று போய் பார்த்துவிட்டு வருவோம் என்றார். இத்தனைக்கும் அப்போது நான் ஒரு சக நடிகன். ஒரு போட்டி பொறாமை எல்லாம் இல்லாமல் எனக்காக வரேன்" என்றார். அப்போதுதான் எனக்கு புரிந்தது அவர் படத்திற்குத்தான் வள்ளல் என்ற டைட்டிலை வைத்திருக்க வேண்டும்.
அவரும் நானும் நிறைய படங்கள் நடித்திருக்கிறோம். அதில் நிறைய காமெடிகளும் உண்டு. யானை என்னை துரத்த வேண்டும், ஆனால் அது என்னை துரத்தவே இல்லை. அதற்கு விஜயகாந்த் நீங்கள் கையில் வெல்லக்கட்டியை வைத்துக்கொண்டு ஓடுங்கள் யானையும் துரத்தும். கொஞ்சம் ஒடியவுடன் தூக்கி போட்டுவிடுங்கள். சரி விஜய். ஆனா யானை நான் வெல்லத்தை தூக்கி போட்டதே பார்க்காமல் இருந்தால் என் கதி என்ன என்று யோசித்துப்பாருங்கள் என்று அவரிடம் சொன்னேன். அப்போது சிரிக்க ஆரம்பித்தவர்தான் சிரித்துக்கொண்டே இருந்தார்
சரத் சொன்னாரு மீம்ஸ் போடுறவங்கள பத்தி, அவனுங்க கிடைக்கிறானுங்க பொடி பசங்க. நீங்க மீம்ஸ் போடும் போது எங்களுக்கு ஆங்கிலம் தெரியவில்லை என்று போடுகிறீர்கள். எதற்கு தெரிய வேண்டும். ஆங்கில ஹீரோக்களுக்கு தமிழ் தெரியுமா? ஷாருக்கானுக்கு தமிழ் தெரியுமா? அவர் அவருக்கு அவர்கள் மொழி தெரிந்தால் போதும் அவ்வளவுதான். அவருக்கு தமிழ் தெரியும்ல அது போதும். எனக்கும் ரசிகர்களை வளர்த்துக்கொள்ளுங்கள், மன்றங்கள் வைத்துக்கொள்ளுங்கள் என்றெல்லாம் சொல்லுவார். அவருக்கு அவர் ரசிகர்கள், தொண்டர்கள் தான் கடைசி வரை. ரசிகர்களின் மேல்அப்படியொரு அன்பு அவருக்கு உண்டு. அப்படியொரு நல்ல நண்பர் எனக்கு கிடைத்ததை நான் மிகவும் பெருமையாக கருதுகிறேன். நாங்கள் இருவரும் நாற்பது வருடத்தை கடந்துவிட்டோம். நண்பனுக்காக என்ன வேண்டுமானாலும் செய்ய கூடிய நல்ல உள்ளம் அவர், அவரது விழாவை சிறப்பிக்க வந்ததற்கு மகிழ்ச்சி அடைகிறேன்