Skip to main content

முகிலனை அசிங்கப்படுத்தி பத்திரிகையாளர்கள் முன்பு நியாயம் கேட்பேன்...

Published on 16/07/2019 | Edited on 16/07/2019

முகிலன் மீது பாலியல் புகார் கொடுத்த பெண், குளித்தலையில் ஒரு மகளிர் விடுதியில் தங்கி யிருக்கிறார். முகிலனுக்கும் அவருக்கும் நடுவில் என்னதான் நடந்தது? அவரையே சந்தித்து கேட்டோம். ""சின்ன வயசுல இருந்தே இயற்கை மீது ஈடுபாடு. எம்.சி.ஏ. படிச்சிருக்கேன். திருச்சி, சென்னை, சிங்கப்பூரில் வேலைசெய்திருக்கேன். 2015-ல் அரசியல் மாற்றம் வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் எல்லோரும் தமிழகம் முழுவதும் சகாயம் ஐ.ஏ.எஸ். அரசியலுக்கு வரவேண்டும் என்று பேரணி நடத்தியபோது பங்கேற்றேன். பிறகு "பனைமரம்' சம்பந்தமான போராட்டத்தில் முதன்முதலாக முகிலனோடு கலந்துகொண்டேன். அறிமுகம் ஏற்பட்ட பின், நான் அவர் அழைத்துச்செல்லும் எல்லா போராட்டத்திலும் கலந்து கொண்டேன். முகிலன் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு, பத்திரிகை செய்திகளுக்கு நான்தான் அழைப்புக் கொடுப்பேன். இந்நிலையில் ஒருநாள் கட்டாயப்படுத்தி என்னை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தினார். நான் எதிர்ப்பு தெரிவித்தேன். 

 

girl

"என் மனைவிக்கும் எனக்குமான தொடர்பு குறைந்துபோனது. உன்னை திருமணம் செய்துகொள்கிறேன்'’ என்று வாக்குறுதி கொடுத்து சமாதானம் செய்தார். இதற்கிடையில 1 வருடம் சிறையில் அடை பட்டுக் கிடந்தபோது அவருக்கு சிறையில் நடந்த கொடுமைகள் அனைத்தையும் அம்பலப்படுத்தினேன். அவர் வெளியே வந்தவுடன் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தினேன். எங்கள் நெருக்கத்தால், என்னை முகிலன் கடத்திவிட்டார் என என் அம்மா காவல் துறையில் புகார் கொடுக்குமளவுக்குப் போனது. அதனை மறுத்து, நான் வீட்டை விட்டு வெளியேறி முகிலன் ஆதரவில் அவர் நண்பர்கள் வீட்டில் தங்கியிருந்தேன். எங்கள் நெருக்கத்தைப் பார்த்தவர்கள் முகிலனிடம் கேட்க ஆரம்பிக்கவும் அவர் என்னை தவிர்க்க ஆரம்பித்தார். அது எனக்கு பெரிய மன உளைச்சலை ஏற்படுத்தியது.


  mukilan



அப்போதுதான் முகிலனுக்கு நன்கு தெரிந்த அரசியல்கட்சி மற்றும் தோழர்கள் அனைவரிடமும் முறையிட்டேன். அச்சமயம் ஸ்டெர்லைட் பிரச்சனை குறித்து இரண்டாம் முறையாக பிரஸ்மீட் தேதி அறிவித்தார். அப்போது முகிலனின் நண்பரிடத்தில் "எனக்கு நியாயம் கிடைக்கவில்லை என்றால் அந்த பிரஸ் மீட்டில் கலந்துகொண்டு முகிலனை அசிங்கப்படுத்தி பத்திரிகையாளர்கள் முன்பு நியாயம் கேட்பேன்' என்று தகவல் அனுப்பினேன். அதற்குப் பயந்த முகிலன் வேறொரு நண்பர் மூலம் பிரஸ் மீட்முடிந்த இரண்டு நாள் கழித்து சந்திப்பதாக செல்போனில் குறுஞ்செய்தி அனுப்பினார். அதைப் பார்த்தவுடன் கொஞ்சம் அமைதி ஆனேன். அந்த பிரஸ்மீட்டில்தான் "நான் கடத்தப்படலாம், உன் உயிருக்கு ஆபத்து' என்றெல்லாம் பேசிவிட்டு மறைந்தார்.


சி.பி.சி.ஐ.டி. போலீஸ் என்னை விசாரணைக்கு அழைத்த போது முகிலனை தொடர்புபடுத்தி எதுவும் சொல்லக் கூடாதென முகிலனின் நண்பர்கள் நிர்பந்தப் படுத்தினார்கள். ஆனால் என்னி டமிருந்த ஆதாரங்கள் அனைத் தையும் ஒப்படைத்தேன். நானும் போராளிதான் ஆனால் எனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காகத்தான் அவரிடம் போராடி வருகிறேன். தமிழகத்திற்கு எதிராக இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக தொடர்ந்து போராடுவேன். போராட வரும் இளம் பெண்களுக்கு எனக்கு நேர்ந்த அநீதி ஒரு முன்னுதாரணமாக அமையும்'' என்று அனைத்தையும் விவரித்துமுடித்துவிட்டுதான் ஓய்ந்தார்.