Skip to main content

"இந்த உலகம் என்பது அறிவுப்பூர்வமான ஏற்பாடு அல்ல. அன்புக்கு ஏங்குகின்ற.." - சுகி சிவம் சுவாரசிய பேச்சு!

Published on 02/03/2020 | Edited on 02/03/2020


சிலர் தன்னை தனி மனிதனாகவே நினைப்பதில்லை. ஆடு, மாடுகள் தங்களை எப்படி கூட்டமாக, குழுவாக நினைக்கின்றதோ அதே மாதிரி தன்னையும் சாதியின் பெயரால், மதத்தின் பெயரால் குழுவாக, கூட்டமாக சிலர் நினைத்துக் கொள்கிறார்கள். ஆட்டு மந்தைகளாக அவர்கள் இருக்கிறார்கள். குடிமகன் என்றால் யார் என்ற கேள்வி தற்போது இயல்பாகவே எழுகின்றது. தன்னுடைய மதத்தால், ஜாதியால் தன்னுடைய நாட்டிற்கு என்ன பயன் என்று அறிந்து கொள்பவர்கள் மட்டுமே முழுமையான சிட்டிசன் என்று வரையறைக்குள் வருவார்கள். சிலர் தங்களுக்கு தேவையான படி வரலாற்றின் ஒரு பகுதியை மட்டும் எடுத்துக்கொண்டு பேசுகிறார்கள். நாங்கள் 70 ஆண்டுகளாக எவ்வளவு கஷ்ட பட்டோம் தெரியுமா? என்று கேட்கிறார்கள். நீங்கள் 700 ஆண்டுகளாக என்ன பாடுபடுத்தினீர்கள் என்று தெரியுமா? என்று நாம் கேட்டால் அதற்கான பதில் அவர்களிடம் இருக்காது. அதை யாரும் யோசித்து பார்க்க மாட்டேன் என்கிறார்கள். 70 ஆண்டு கஷ்டத்தை மட்டும் பேச தெரிந்த அவர்களுக்கு 700 ஆண்டுகள் பிறரை கஷ்டப்படுத்தியது எவ்வாறு மறந்து போனது என்று தெரியவில்லை.

 

sf



யாருடன் சேர்கிறோம் என்பது மிக முக்கியம். உள்ளங்கையில் மழை நீர் விழுந்தால் அதை நாம் அப்படியே குடிக்க முடியும். ஏனென்றால் நம்முடைய கை சுத்தமாக இருக்கின்றது. அதுவே விழுகின்ற நீர், சாக்கடையில் விழுந்தால் நம்மால் அதை எப்படி பயன்படுத்த முடியும். கால் கூட அலம்ப முடியாது. எனவே சேர்கின்ற இடம் என்பது மிக முக்கியமான ஒன்று. அதே மழைத்துளி ஒரு சிப்பியில் விழுந்துவிட்டால் அது முத்தாக மாறிவிடுகிறது இல்லையா? எனவே சேரும் இடம் என்பது மிக முக்கியமான ஒன்று. அதே மாதிரி உபதேசங்கள் கூட சரியான காதில் விழ வேண்டும். இல்லை என்றால் சாக்கடையில் விழுந்த நீர் போல தேவையில்லாத ஒன்றாகிவிடும். அதைப் போலத்தான் நல்லவர்களோடு நாம் சேர்ந்து இருந்தால் நல்ல குணநலன்கள் நமக்கு இயல்பாகவே வந்து சேரும். இல்லை என்றால் அதற்கான வாய்ப்புகள் குறைந்து போகும். 

அனைத்திலும் நிறைவாக இருக்க வேண்டும் என்று நான் 50 வயது வரையிலும் நினைத்ததால்தான் எனக்கு பைபாஸ் அறுவை சிகிச்சையே செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டது. 10 மணிக்கு வர வேண்டிய பிள்ளைகள் ஒரு நிமிடம் தாமதமாக வந்தால் கூட அந்த இடத்தை விட்டு நான் சென்று விடுவேன். என்னை ராட்சச அப்பா என்று கூட பிள்ளைகள் சொல்வார்கள். அதை பற்றி அப்போது நான் கவலைப்பட மாட்டேன். இப்போதெல்லாம் எது நடந்தாலும் அனைத்தும் சகஜமப்பா என்ற நிலைக்கு மனம் மாறியுள்ளது. வாழ்க்கை என்பது அணு ஆராய்ச்சியா என்ன? நாம் எல்லாம் மனிதர்களுடன் பழகுகிறோம், எனவே நிறை குறைகள் இருக்கத்தான் செய்யும். ரொம்ப அன்பு உள்ளவர்களால் கூட சில சமயம் நமக்கு பிரச்சனைகள் ஏற்பட்டு விடும். நம்முடைய நேரம் தவறாமையை காப்பாற்ற முடியாமல் போய்விடும். சில சமயம் எனக்கே இந்த சிக்கல் ஏற்பட்டுள்ளது. நான் விமானத்தை பிடிக்க கிளம்பி கொண்டிருக்கும் வேளையில், உங்கள் பேச்சு அன்று மிக நன்றாக இருந்ததே என்று வயதான ஒருவர் நம்முடைய கையை பிடித்து பேசிக் கொண்டிருப்பார். அவரிடம் நம்முடைய கையை உதறிவிட்டு செல்ல முடியாது. சில சமயம் இந்த மாதிரியான சிக்கல்களை நாம் சந்தித்துதான் ஆக வேண்டும். 

பர்ஃபெக்ட் என்ற இந்த விஷயத்தை நான் எப்போது கைவிட்டேன் என்றால், ஆழமாக யோசித்த போதுதான். ஏனென்றால் கடவுளே பர்ஃபெக்ட் இல்லை. அவ்வாறு இருந்திருந்தால் நம்மை அவர் ஏன் படைதிருக்க போகின்றார். இந்த பூமியை ஏன் பிளாஸ்டிக் போட்டு வீணாக்க அவர் அனுமதித்திருக்க போகிறார். இவ்வளவு கோளாறு பிடித்த ஆட்களை அவர் நிச்சயம் படைத்திருக்க மாட்டார். அவர் பர்ஃபெக்ட் ஆக இருந்திருந்தால் இவ்வளவு சாதி, மதங்களை அவர் ஏன் படைத்திருக்க போகின்றார், இவ்வளவு சண்டைகளை ஏன் உருவாக்க போகிறார். நான் கடவுளை குறை சொல்வதாக யாரும் நினைக்க வேண்டாம். காலம் மாறிக்கொண்டே இருக்கின்றது. நேற்று மாதிரி இன்று இல்லை. என்னிடமே நான் 25 வருடத்துக்கு முன்பு பேசிய வீடியோவை வைத்துக்கொண்டு அன்று அப்படி பேசினீர்களே என்று கேட்கிறார்கள். நான் உயிருடன் இருக்கிறேன். நான் சிந்திக்கிறேன், நான் படிக்கிறேன் எனவே காலத்திற்கு ஏற்ப மாற்றி பேசுவேன். இந்த உலகம் என்பது அறிவுப்பூர்வமான ஏற்பாடு அல்ல. அன்புக்கு ஏங்குகின்ற அன்பு பூர்வமான ஏற்பாடு. இந்த உலகிற்கு அன்புதான் முக்கியம். அறிவாளித்தனம் அல்ல. ஒவ்வொரு உயிரும் தன்னிடம் அன்பு காட்டமாட்டார்களா என்று ஏங்குகிறது.