மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச்சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போர் கோலம் பூண்டுள்ளது. இந்திய அரசியலமைப்பு பிரிவு 14-ன் அடிப்படையில் குடியுரிமை சட்டம் நடைமுறையில் இருந்தது. இந்நிலையில் இந்த சட்டத்தில் மதங்களை முன்னிறுத்தி திருத்தம் செய்யப்பட்டுள்ளதால் மதச்சார்பற்ற தேசத்தின் மாண்பை நிலை நாட்ட வேண்டும் என்ற நோக்கத்தில், சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி பலதரப்பு மக்கள், மாணவர்கள் போராடி வருகின்றனர். ஜனநாயக முறையில் நடைபெற்று வரும் பல போராட்டங்களில் மாணவர்கள் மீது காவல்துறையின் அணுகுமுறை அனைவருக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
குடியுரிமை திருத்தச்சட்டம்(CAA), தேசிய குடிமக்கள் பதிவேடு(NRC), தேசிய மக்கள் தொகை பதிவேடு(NPR) உள்ளிட்ட சட்டங்களை ரத்து செய்யக்கோரி டெல்லி ஜவர்ஹலால் நேரு, ஜாமியா மில்லியா, உ.பி. அலிகார் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு டிசம்பர் 15 ஆம் நாளன்று ஜாமியா மில்லியா மாணவர்கள் மீது டெல்லி காவல்துறை நடத்திய தடியடியில் வன்முறை வெடித்தது. பின்னர், காவல்துறையினர் வன்முறையை நிகழ்த்தியதாக சில காணொளிகளும் வெளியாயின. காவல்துறையினர் அனுமதியின்றி வளாகத்திற்குள் நுழைந்ததாக தலைமை பேராசிரியர் வசீம் அகமது கான் குற்றம் சாட்டினார். ஆனால், வன்முறையில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாணவர்கள் காவல்துறையினர் மீது கற்களை எறிந்ததாக காவல்துறையின் சார்பில் குற்றம் சாட்டினர்.
அதை தொடர்ந்து, கடந்த டிசம்பர் 15-ல் உ.பி அலிகார் பல்கலைக்கழகத்தில் குடியுரிமை திருத்தச்சட்டத்தை எதிர்த்து மாணவர்கள் போராடினர். அன்று இரவு 8 மணி அளவில், காவல்துறையும் RAF ஆயுதப்படைகளும் கண்ணீர்ப்புகைக் குண்டுகள், ரப்பர் தோட்டாக்கள் உள்ளிட்ட ஆயுதங்களை வளாகத்திற்குள் மாணவர்கள் மீது காவல்துறை பிரயோகப்படுத்தினர் என்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் கேட் காவலரை மிருகத்தனமாக அடித்து, பின்னர் கண்ணீர் குண்டுகளை வீசுவதன் மூலம் பலவந்தமாக நுழைத்துள்ளதாக கூறப்படுகிறது.
அதன் பின்னர், கடந்த ஜனவரி 5 ஆம் தேதி டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், விடுதி கட்டண உயர்வை கண்டித்து மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தை நடத்திவந்தனர். இந்நிலையில் அன்று இரவு 7.30 மணி அளவில் கல்லூரி வளாகத்திற்குள் புகுந்த ABVP அமைப்பினர் முகமூடியை அணிந்து ஆயுதங்களால் மாணவர்களை தாக்கினர். இந்த தாக்குதலில் மாணவர் அமைப்பின் தலைவர் அய்ஷா கோஷ் உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டு படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதல் குறித்து உண்மை முகங்கள் ஊடகங்களில் அம்பலமானது. குறிப்பாக, பெரியார் விடுதியில் தாக்குதல் தொடங்கியபோது காவல்துறையினர் ஏற்கனவே வளாகத்திற்குள் இருந்ததாகவும், மாணவர்களை தாக்குவதற்கு ஒரு காவல்துறை அதிகாரி ABVP அமைப்பினரை ஊக்குவித்தார் என்றும் சம்பவத்தில் ஈடுபட்ட அவஸ்தி, மற்றும் ரோஹித் ஷா ஊடகத்தில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர். சம்பந்தப்பட்டவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக, பாதிக்கப்பட்ட மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்தது எந்த வகையில் ஏற்புடையதாகும். வன்முறைக்கு நாங்கள் தான் காரணம் என்று இந்து ராக்ஷா தளம் பொறுப்பேற்ற பின்னரும் காவல்துறை நடவடிக்கை பாய்ந்தபாடில்லை.
பிப்ரவரி 10 ஆம் நாளன்று நாடாளுமன்றம் நோக்கி மாணவர்கள் நடத்திய பேரணியில் காவல்துறையினர் மாணவர்களை பலவந்தமாக அப்புறப்படுத்தியுள்ளனர். மாணவிகளையும் காவல்துறையினர் அடித்து மிருகத்தனமான முறையில் நடந்துள்ளனர். மாணவிகள் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் கள்ள மௌனம் காக்கின்றனர். உ. பி. மதராஸா மாணவர்களை அடைத்து வைத்த காவல்துறையினர் சித்தரவதைக்கு உள்ளாக்கினர். டெல்லியில் மாணவர்கள் மீது துப்பாக்கி எடுத்து சுடும் ஒருவரை பிடிக்காமல் அதை வீடியோ எடுக்கும் அவலம் டெல்லியில் அரங்கேறியது. ஜாமியா மில்லியா மாணவர்களை, கல்லூரி நூலகத்திற்குள் சென்று காவல்துறையினர் வெறித்தனமாக தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளிவந்தது. மாணவர்கள் கைகளில் கற்களை வைத்து தாக்கினர் என்று காவல்துறையினர் குற்றம் சாட்டினர். ஆனால் அவர்கள் கையில் இருந்தது Brown colour wallet என்று ஆய்வில் நிரூபனமானது. இதுகுறித்து, மத்திய உள்துறை அமைச்சகமோ, காவல்துறை தலைமையோ எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மௌனம் காப்பது ஜனநாயகத்தின் மாண்பை சீர்குலைத்துள்ளது.
குடியுரிமை திருத்தச்சட்டம் நிறைவேற்றியதில் இருந்து போராட்ட களம் வன்முறை களமாக மாற்றப்பட்டு வருகின்றது. உரிமைகளுக்காக அறவழியில் மாணவர்கள் நடத்தும் போராட்டங்களில் காவல்துறையினரின் சில அடக்குமுறைகள் ஆட்சியாளர்களின் எதேசதிகார போக்கை வெளிப்படுத்தியுள்ளது. அரசு கொண்டுவரும் சட்டங்களை முழு மனதுடன் ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் மக்களுக்கு இல்லை. அதை எதிர்த்து போராட கூடிய உரிமையும் மக்கள் பெற்றிருக்கிறாரார்கள். ஆனால், போராடும் மக்களையும், மாணவர்களையும் தேச விரோதிகள் என்று சித்தரித்து அரசு அடக்குமுறைகளை கையாள்கிறது. "போராடும் மக்களை தேச விரோதிகள் என்று கூற முடியாது" என்று உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார். மும்பை உயர்நீதிமன்ற நீதிபதிகள் டி.வி.நளவாடே, எம்.ஜி. செவலிகார் "அரசு கொண்டுவரும் சட்டங்களை எதிர்த்தும் போராடும் மக்கள் யாவரும் தேச துரோகிகள் இல்லை" என்று தீர்ப்பொன்றில் தெரிவித்துள்ளனர். ஆனால், காவல்துறைவின் போக்கு நீதிக்கு எதிர்மாறாக செயல்படுகிறது. இந்திய அரசியலமைப்பு சட்டம் 21 ன் படி எந்த ஒரு விசாரணையும் இல்லாமல் வழக்கு பதிவு செய்யக்கூடாது என்று கூறுகிறது. ஆனால், மாணவர்கள், பொதுமக்கள் மீது வழக்குகளை பதிந்து அதிகார வரம்பை மீறி வருவது காவல்துறையின் செயல்பாடுகளில் தொடர்கதையகாவே தொடர்கிறது.
நிற்க! மாணவர்கள் மீது ஏன் அரசு இவ்வளவு வன்மம் காட்டி வருகின்றது என்பது அனைவரின் கோபக்கனியாக உள்ளது. 2003 -ல் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் "காவி நமது நிறம், கல்வி நிலையங்களை பச்சை மயமாக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா?" என்று பேசியது ஜனவரி 22 ஆம் நாள் இந்தியா டுடேவில் வெளியானது. வாஜ்பாயின் வாய் மொழியை இன்று பாஜக அரசு நிறைவேற்றி வருகிறதா? என்று அனைவரிடமும் அச்சம் நிலவியுள்ளது. ஜே.என்.யூ. மாணவர்கள் அரசுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பி வருகின்றனர் என்றும், அவர்களை சிறையிலடைப்போம் என்று மிரட்டும் தொனியில் அமித்ஷா பேசியது, நடைபெற்ற வன்முறைகளுக்கு சான்றாக அமைகிறது. தொடர்ந்து போராட்டங்களை ஒடுக்கும் செயலில் ஈடுபடும் மத்திய, மாநில அரசுகள், மக்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்க மறுப்பது வேதனையிலும் வேதனை. மக்களாட்சியில் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மறுக்கும் அரசுகளின் இறுதி அத்தியாயத்தை மக்கள் தங்களது போரட்டங்களின் மூலம் எழுதுவார்கள் என்பதே சர்வாதிகாரிகளின் வரலாறாகும். மலர்களை அறுத்து மாலை தறித்தவர்களே; மதங்களை பிளந்து மகுடம் சூட்டுகிறார்கள்.
-சாக்லா.