Skip to main content

ஆழ்குழாய் கிணற்றில் ஏற்பட்ட நீர்க்குமிழி; மோட்டார், இரும்புக்குழாய்கள் 40 அடி உயரத்திற்கு எகிறியதால் பரபரப்பு

Published on 11/11/2022 | Edited on 11/11/2022

 

water bubble borehole pudhukottai

 

ஆழ்குழாய் கிணற்றில் திடீரென ஏற்பட்ட நீர்க்குமிழியால் ஓடிக்கொண்டிருந்த மோட்டார் தண்ணீர், இரும்புக்குழாய்களுடன் சுமார் ஒரு டன் கனத்துடன் 40 அடி உயரத்திற்கு மேலே எழும்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

 

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றியம் கல்லணை கால்வாய் பாசனப் பகுதியான ஆயிங்குடி கிராமத்தில் குடிநீர் தேவைக்காக சுமார் 350 அடி ஆழத்திற்கு அமைக்கப்பட்டுள்ள ஆழ்குழாய் கிணற்றில் சுமார் 20 அடி ஆழத்தில் தண்ணீர் உள்ளது. ஆனால் 190 அடி ஆழத்தில் 2 அங்குல இரும்பு குழாய்களுடன் 10 எச்.பி நீர்மூழ்கி மோட்டார் பொருத்தப்பட்டு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்குத் தண்ணீர் ஏற்றி விநியோகம் செய்யப்படுகிறது.

 

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆழ்குழாய் கிணற்றிலிருந்து வெளியே வந்த தண்ணீர் கலங்கலாக வந்ததால் கல்லணை கால்வாயில் தண்ணீர் வருவதால் புதிய நீர் ஊற்று ஏற்பட்டு கலங்கி வரலாம் என்று கம்ப்ரசர் மூலம் காற்றூதி கலங்கிய தண்ணீர் வெளியேற்றப்பட்டது. ஆனால் பாதி தூரத்திற்கு கீழ் கம்ப்ரசர் குழாய்கள் செல்லவில்லை. அவ்வளவு அழுத்தமாக இருந்துள்ளது.

 

இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு நீர்த்தேக்கத் தொட்டிக்குத் தண்ணீர் ஏற்ற மோட்டார் ஓடிக் கொண்டிருந்தது. நள்ளிரவில் தண்ணீர் உயரத்திலிருந்து ஊற்றும் சத்தம் கேட்டு அருகிலுள்ள வீட்டிலிருந்தவர்கள் வந்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தனர். அதாவது சுமார் 40 அடி உயரத்திற்கு மேலே உயர்ந்து நின்ற இரும்பு குழாய்களில் 10 அடி நீளமுள்ள ஒரு குழாய் உடைந்து கிடக்க 30 அடி உயரத்தில் நின்ற குழாயிலிருந்து தண்ணீர் கொட்டிக் கொண்டிருந்தது. இவ்வளவு உயரத்திற்கு ஏறிய பிறகும் மோட்டார் ஓடிக்கொண்டிருப்பதைப் பார்த்து மோட்டாரை நிறுத்திவிட்டு, மோட்டார் மற்றும் குழாய்கள் மீண்டும் ஆழ்குழாய் கிணற்றுக்குள் போய்விடாமல் இரும்பு கிளாம்புகள் வைத்து நிறுத்தி வைத்துள்ளனர்.

 

water bubble borehole pudhukottai

 

எதனால் இப்படி நடந்தது என்ற நமது கேள்விக்கு, ஆழ்குழாய் கிணறுகளுக்குள் ஏற்படும் பழுதுகளை கேமரா மூலம் கண்காணித்து பழுது நீக்கும் கொத்தமங்கலம் தொழில்நுட்ப வல்லுநர் வீரமணி நம்மிடம், “ஆயிங்குடி, வல்லவாரி அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆழ்குழாய் கிணறுகளுக்குள் சுமார் 200 அடிக்கு கீழே அதிகமான நீரோட்டங்கள் உள்ளது. மழைக்காலங்களில் அல்லது ஆறுகளில் தண்ணீர் வரும் போது மேலும் புதிய நீரோட்டப் பாதைகள் உருவாகி வேகமாக தண்ணீர் வரும் போது ஆழ்குழாய் கிணறுகளில் தேங்கும். அதே போல புதிய நீரோட்டம் உருவாகும் போது பூமிக்குள் வெற்றிடத்தில் முதலில் காற்று குமிழிகள் ஏற்பட்டு நீரோட்டப் பாதையில் வந்து ஓட்டைகள் உள்ள குழாய்களுக்குள் நுழைந்து காற்று வெளியேறும். நீர்மூழ்கி மோட்டார்கள் உள்ளே இருப்பதால் காற்று வெளியேற முடியாமல் உள்ளேயே பெரிய காற்றுக் குமிழிகள் ஏற்பட்டு அடைக்கும். அதே நேரத்தில் பெரிய காற்றுக் குமிழி ஏற்படும் போதுதான் இது போல மோட்டார்களையும் தூக்கிக் கொண்டு மேலே ஏறி இருக்கிறது.

 

இந்த ஆழ்குழாய் கிணற்றில் கம்ப்ரசர் ஊதியதால் நீரோட்டப் பாதையில் இருந்த தடைகள் உடைக்கப்பட்டு பெரிய காற்று குமிழி ஏற்பட்டுள்ளது. அதனால் தான் இந்த மோட்டாரையும் தண்ணீர், குழாய்களோடு சுமார் ஒரு டன் வெயிட்டோடு தூக்கி இருக்கிறது. மோட்டார் இல்லாத ஆழ்குழாய் கிணறாக இருந்திருந்தால் தண்ணீர் மட்டும் வெளியே வந்து கொட்டி இருக்கும். இதனால் ஆழ்குழாய் கிணறுகளுக்குள் குழாய்கள் உடைந்துள்ளதா என்பதைப் பார்த்த பிறகு மீண்டும் இயக்கலாம்.

 

இதே ஊரில் சற்று தூரத்தில் ஒரு ஆழ்குழாய் கிணற்றிலும் மோட்டார் விழுந்துவிட்டதை எடுக்க முயன்ற போது ஆழ்குழாய் கிணறுக்குள் நீர்க்குமிழிகளால் தண்ணீர் கொப்பளித்துக் கொண்டிருப்பதை எங்கள் கேமராவில் பதிவு செய்திருக்கிறோம்” என்றார். கடந்த ஆண்டு  தஞ்சை மாவட்டத்தில் இதேபோல் தண்ணீர் வெளியேறிக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.