மூன்று வயது தர்ஷன் விருதுநகரில் உள்ள குழந்தைகள் நலக்குழுமத்திடம் விடப்பட்டுள்ளான். எம்.ரெட்டியபட்டி காவல்நிலையத்தில் பதிவாகியுள்ள இக்குழந்தை சம்பந்தப்பட்ட வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் இருவரை தனிப்படை அமைத்து காவல்துறை தேடி வருகிறது.
இந்த வழக்கில் சட்டம் தன் கடமையைச் செய்தபோது, சோகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் பெண் காவலர் ஒருவர் கதறி அழுதிருக்கிறார். யார் யாரோ செய்த குற்றத்தின் பலனை இச்சிறு வயதில் தர்ஷனும் அனுபவிக்க நேரிட்டிருப்பது, அந்தக் காவல் நிலையத்தில் உள்ள ஈர நெஞ்சினரை உலுக்கியிருக்கிறது.
சட்டத்தின் பார்வையில் மட்டுமல்லாது, பொதுவான கண்ணோட்டத்திலும், இவ்வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை ‘ஸ்கேன்’ செய்கிறது இக்கட்டுரை!

பெற்றோர் என உரிமை கோரும் ராஜலட்சுமி – சக்திமுருகன்:
விருதுநகர் அல்லம்பட்டியைச் சேர்ந்த சக்திமுருகனுக்குத் திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். கூலித்தொழிலாளியான இவர், 2015-ல் கல்போது கிராமத்துக்கு வேலைக்குச் சென்றபோது, 15 வயதே ஆன ராஜலட்சுமியோடு பழகியதில், அவள் கர்ப்பமானாள். ஏதோ கசந்து இருவரும் பிரிந்த நிலையில், பிரசவத்திற்காக ராஜலட்சுமியை கல்லூரணியில் உள்ள சங்கர் மருத்துவமனையில் சேர்த்தார் அவளுடைய அம்மா முத்துலட்சுமி. 15-3-2016 அன்று ராஜலட்சுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது. உறவைக் கைகழுவிவிட்டதால், முறையற்ற காதலனென்றோ, கணவனென்றோ சக்திமுருகனைச் சொல்லமுடியாத நிலையில், பிரசவம் பார்த்ததற்கான கட்டணத்தைக்கூட செலுத்தாமல், அந்த ஆண் குழந்தையை அம்போவென அந்த மருத்துவமனையிலேயே விட்டுவிட்டுச் சென்றுவிட்டார்கள் தாயும் மகளும்.
சட்ட விரோதமாக தத்தெடுத்த ஜெயராஜ் – சண்முகப்பிரியா:
அருப்புக்கோட்டை மணி நகரத்தைச் சேர்ந்த இவர்களுக்குத் திருமணமாகி 10 வருடங்களாகியும் குழந்தை இல்லை. பெற்றவளால் கைவிடப்பட்ட ஆண் குழந்தை ஒன்று சங்கர் மருத்துவமனையில் இருக்கிறது என்று அங்கு பணிபுரிந்த ஊழியர் குழந்தை என்பவர் மூலம் தகவல் கிடைத்ததும், பிரசவம் பார்த்ததற்காக ராஜலட்சுமி தரப்பு செலுத்தாத ரூ.10 ஆயிரத்தைக் கொடுத்துவிட்டு, அங்கிருந்து குழந்தையை எடுத்துச் சென்று கடந்த மூன்று வருடங்களாக வளர்த்து வந்தனர் இத்தம்பதியர்.
டாக்டர் வினோதமயந்தி – சித்த மருத்துவர் வடிவேல்முருகன் தம்பதியர்:

கல்லூரணியில் உள்ள சங்கர் மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவம் பார்த்து வருகிறார் எம்.பி.,பி.எஸ். டாக்டரான வினோதமயந்தி. இவருடைய கணவர் வடிவேல்முருகன் சித்த மருத்துவர் ஆவார். இவர்களின் மருத்துவமனையில் கடந்த 15-3-2016 அன்று 16 வயதே ஆன ராஜலட்சுமிக்கு சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. இக்குழந்தை பிறப்பை டாக்டர் வினோதமயந்தி தனது மருத்துவமனையில் ஆவணப்படுத்தவில்லை.

அதே நேரத்தில், குழந்தை இல்லாத தவிப்பில் இருந்த ஜெயராஜ் – சண்முகப்பிரியா தம்பதியினருக்கு, 21-3-2016 அன்று தங்கள் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்ததாக பொய்யாகப் பதிவிடுகிறார். இந்தப் பதிவை வைத்து, ராஜலட்சுமிக்குப் பிறந்த ஆண் குழந்தையைத் தங்களின் குழந்தை எனச்சொல்லி, பிறப்புச்சான்று பெற்றுவிடுகிறார்கள் ஜெயராஜ் தம்பதியினர். கணவன்(?) கைவிட்ட நிலையில், 15 வயதில் கர்ப்பமாகி 16 வயதில் பிரசவித்த ராஜலட்சுமியும் அவளது தாய் முத்துலட்சுமியும் அப்போது குழந்தை தேவையில்லை என்பதில் உறுதியாக இருந்ததை, ஜெயராஜ் தம்பதியினருக்கு சாதகமாக்கிவிட்டார் வினோதமயந்தி. அதனால், தங்களின் மருத்துவமனையில் ‘விடுமுறை’ பலகையைத் தொங்கவிட்டு, சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.

குழந்தையின் பாட்டி முத்துலட்சுமி:
முதல் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வாழ்க்கை நடத்திவந்த சக்திமுருகன், மீண்டும் ராஜலட்சுமியுடனான தொடர்பை புதுப்பித்துக்கொள்ள, 2017-ல் இரண்டாவதாக அவளுக்குப் பெண் குழந்தை பிறந்தது. அப்போது, முதலாவதாக தான் பிரசவித்த ஆண் குழந்தை நினைவுக்குவர, அதைக் கைப்பற்றும் முயற்சியில் இறங்கினார்கள் சக்திமுருகனும் ராஜலட்சுமியும். அந்தக் குழந்தையை அப்போதே பணத்துக்கு விற்றுவிட்டார் பாட்டி முத்துலட்சுமி என்று மருத்துவமனை தரப்பிலும், தத்தெடுத்த பெற்றோர் தரப்பிலும் கூறிவிட, விருதுநகர் மாவட்ட கண்காணிப்பாளர் வரையிலும் சக்திமுருகன் தரப்பு முறையிட, பாட்டி முத்துலட்சுமி தலைமறைவாகிவிட்டார்.
நடந்ததும் நடக்காததும்..
முத்துலட்சுமி தன் மகள் ராஜலட்சுமியிடம் குழந்தை இறந்தே பிறந்தது என்று அப்போது நம்ப வைத்ததாகவும், இரண்டாவதாகப் பெண் குழந்தை பிறந்ததும் மகள் ராஜலட்சுமி ஆண் குழந்தைக்கு ஏங்கிய நிலையில், அந்த ஆண் குழந்தை உயிரோடுதான் இருக்கிறது, முறையற்ற வழியில் பிறந்த குழந்தை என்பதால் வீண் பிரச்சனை வரும், குழந்தை இல்லாத பெற்றோரிடம் கொடுத்தால் பணம் கிடைக்கும் என்று டாக்டர் வினோதமயந்தி ஆசை வார்த்தை கூறியதால், அக்குழந்தையை அவர்களிடமே ஒப்படைத்துவிட்டேன் என்று கூறியதாகவும்தான் முதல் தகவல் அறிக்கை பதிவாகியிருக்கிறது.

நேர்மையான அந்தக் காவல்துறை அதிகாரி “தங்களுக்குப் பிறந்த ஆண் குழந்தை மீது சக்திமுருகன் – ராஜலட்சுமி தம்பதியினருக்கு பெரிதாகப் பாசம் எதுவுமில்லை. காவல்துறையினரின் முன்னிலையில் தர்ஷனை அவர்கள் தொட்டுக்கூட பார்க்கவில்லை. தர்ஷனுக்காக கதறித் துடித்ததெல்லாம் மூன்று வருடங்கள் ஆசையுடன் வளர்த்த சண்முகப்பிரியாவும் ஜெயராஜும்தான். முறையாகத் தத்தெடுக்காமல் குறுக்கு வழியில் குழந்தையை விலைக்கு வாங்கியதுதான் அவர்கள் செய்த குற்றம்.
சக்திமுருகன் – ராஜலட்சுமி தம்பதியினர் மூலம் நடந்த விவகாரத்தைக் கேட்டறிந்த ஒரு விவரமான ஆள், ‘வழக்கு பதிவானால் கஷ்டமும் நஷ்டமும் உங்களுக்குத்தான் என்று மிரட்டி பெரிய அளவில் பணம் கேட்கலாம். ரூ.5 லட்சமே குறைந்த தொகைதான். டாக்டர் தம்பதியினரிடமும் தத்தெடுத்த பெற்றோரிடமும் லம்ப்பாக பணத்தைக் கறந்துவிட முடியும்.’ என்று தூண்டிவிட்டிருக்கிறார். இந்த பிளாக்மெயிலை வினோதமயந்தியும் ஜெயராஜும் கண்டுகொள்ளவில்லை. அதன்பிறகே, புகார் ஆனது. ஏற்கனவே மனைவி குழந்தைகள் இருந்தும், மைனர் பெண்ணைக் கர்ப்பம் ஆக்கிய விவகாரமும் சக்திமுருகனுக்கு எதிராகவே இருக்கிறது.” என்றார்.
தன்னை வைத்துத்தான் இத்தனை சட்ட மீறலான காரியங்களும் நடந்திருக்கின்றன என்பதை அறிந்திடும் வயதில் தர்ஷன் இல்லை. வளர்த்த தாய் – தந்தையிடமிருந்து பிரித்தபோது அழுது புரண்டாலும், தற்போது குழந்தைகள் நலக்குழுமத்தில் உள்ள சிறுவர்களுடன் விளையாடி பொழுதைக் கழிக்கிறான்.