முன்னாள் அமைச்சர் வேலுமணி ஒயிலாட்டம் ஆடுவதில் சிறந்தவர். அவர் உடலை வளைத்து ஒயிலாட்டம் ஆடும் பாங்கு, நடனத்தில் சிறந்த பெண்களையே நாண வைத்துவிடும். அவர் ஒயிலாட்டத்தில் மட்டுமல்ல, ஊழல் ஆட்டத்திலும் மிக நளினமாக ஆடியிருக்கிறார் என்கிறார்கள் இரண்டாவது முறையாக அவரது வீட்டை சோதனையிட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள்.
அ.தி.மு.க.வின் ஊழல் வரலாற்றிலேயே டி.டி.வி. தினகரன், லண்டன் மாநகரில் கோல்ப் மைதானத்துடன் ஒரு பெரிய ஹோட்டலை வாங்கியதுதான் பெரிய கண்டுபிடிப்பாக இருந்தது. 91-96-இல் லண்டன் ஓட்டல் வழக்கு எனப் பெயரிடப்பட்ட அந்த வழக்கு, வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்ப்பு வழக்கில் ஜெ.வுக்கு எதிராக சேர்க்கப்பட்டது. ஆனால் அந்த வழக்கைத் தொடர்ந்து நடத்த முடியவில்லை. இன்றுவரை அந்த வழக்கு முடியவில்லை. லஞ்ச ஒழிப்புத்துறையால் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு இலங்கைத் தமிழர்கள் மூலம் அந்த ஓட்டலை தினகரன் வாங்கியிருந்தார். அதேபாணியில் நித்யானந்தா ஸ்டைலில் ஒரு சிறு தீவையே மாலத்தீவுக்கு பக்கத்தில் இந்தியப் பெருங்கடலில் வாங்கியிருக்கிறார் வேலுமணி என்கிறார்கள் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள்.
வேலுமணிக்கு விமானம் என்றால் ரொம்பப் பிடிக்கும். டெல்லிக்கு கப்பம் கட்டுவதாக இருந்தால்கூட ஸ்பெஷல் சார்ட்டர்டு விமானத்தில்தான் பணத்தைக் கொண்டு செல்வார். குஜராத், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடந்தபோது, ஜக்கி வாசுதேவின் வழிகாட்டுதல்படி சென்னையிலிருந்து சிறப்பு விமானங்கள் வேலுமணியின் மகன் விகாஸ் வேலுமணி உடனிருக்க பறந்தது. அவையெல்லாம் பண கார்கோ விமானங்கள். அவை பெங்களூருவுக்கும் அகமதாபாத்துக்கும் பறந்து பணத்தை டெலிவரி செய்தன. அவ்வப்போது வேலுமணி ஒரிஸாவிலுள்ள தரணி எர்த் மூவர்ஸ் என்கிற தனது சாதியைச் சேர்ந்தவர்களின் தனி விமானத்தை டெல்லிக்கு அனுப்பிவைப்பார்.
அப்படித்தான் வேலுமணியின் மகன் விகாஸ், கரோனா காலத்தில் அடிக்கடி தனி விமானத்தில் பறந்திருக்கிறார். அவர் நேராக எடப்பாடி மற்றும் ஓ.பி.எஸ். மகன் புடைசூழ மொசாம்பிக் என்கிற ஆப்பிரிக்க நாட்டில் நிலாஹி சுரங்கத்தை வாங்கச் சென்றார். அதில் ஒரு பயணத்தை நேர்மையான மத்திய அமலாக்கத்துறை அதிகாரி கண்டுபிடித்துவிட்டார். அந்தப் பிரச்சனை பிரதமர் மோடி அளவிற்குச் சென்றது. அதைச் சமாளிக்க ஓ.பி.எஸ். போய் மோடியை சந்தித்துப் பேசினார்.
இப்படி ஐந்து வருடத்தில் சுமார் 4 மாத காலம் விமானத்தில் வெளிநாடுகளில் சுற்றித் திரிந்திருக்கிறார் விகாஸ் வேலுமணி. விகாசுடன் வேலுமணியின் மனைவி, மகள் மற்றும் வேலுமணியும் பறந்திருக்கிறார்கள்.
உலக நாடுகளில் அமெரிக்காவைத் தவிர அனைத்து நாடுகளுக்கும் இந்தக் குழு பறந்திருக்கிறது. இவர்களது டூர் புரோகிராமில் தவறாமல் இடம்பெற்ற நாடு மாலத்தீவு. மாலத்தீவுக்கு இந்தியாவிலிருந்து இவர்கள் செல்லவில்லை. ஆஸ்திரேலியாவுக்குப் போய் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஒரு இடத்தை அடைந்து, மறுபடியும் ஆஸ்திரேலியாவுக்கு வந்து மாலத்தீவுக்கு பறந்திருக்கிறார்கள்.
இந்த ஆஸ்திரேலியா, மாலத்தீவு ட்ரிப்கள்தான் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகத்தை விளைவித்திருக்கிறது. அமைச்சர் தங்கமணியும் வேலுமணியும் கிரிப்டோ கரன்ஸியில் லட்சக்கணக்கில் முதலீடு செய்திருக்கிறார்கள். வெளிப்படையாக லட்சக்கணக்கில் என கணக்கு வந்தாலும் கிரிப்டோ கரன்ஸிகளில் கறுப்புப் பக்கம் என ஒன்று இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பது கடினம். கோடிக்கணக்கில் வரும் முதலீடுகளை கூட லட்சக்கணக்கில் என்றுதான் கிரிப்டோ கரன்ஸி கணக்குகள் சொல்லும். அதைத் தோண்டிக் கொண்டிருக்கிறார்கள் லஞ்ச ஒழிப்புத் துறையினர்.
அமைச்சர் தங்கமணியும் வேலுமணியும் இணைந்து நித்யானந்தா ஸ்டைலில் ஒரு தீவை வாங்கி, அங்கு சாமியார் ஜக்கி வாசுதேவை வைத்து ஒரு குட்டி இந்து தேசத்தை உருவாக்கத் திட்டமிட்டார்கள் என்கிறது லஞ்ச ஒழிப்புத் துறை வட்டாரங்கள்.
வேலுமணி மகன் விகாஸ் வேலுமணி, ஆஸ்திரேலியாவில் இருந்து குட்டி ஹெலிகாப்டரிலும், விமானத்திலும் பறக்கிறார் என முதலில் செய்தி வெளியிட்டது நக்கீரன்தான். அப்பொழுது நமக்கு எதிராக நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுப்பேன் என மிரட்டினார் வேலுமணி. சாதாரண மில் தொழிலாளியின் மகனான வேலுமணியின் மகன், ஆஸ்திரேலியாவில் தனி விமானங்களில் எப்படிப் பறக்கிறார் என நக்கீரன் எழுப்பிய கேள்வி தன்னை தனிப்பட்ட முறையில் பாதித்ததாக வேலுமணி நமக்கு அனுப்பிய நோட்டீஸ்களில் கூறியிருந்தார். அன்று நக்கீரன் எழுப்பிய கேள்விகளை இன்று லஞ்ச ஒழிப்புத்துறை வேலுமணியை நோக்கி கேட்க, எனது வழக்கறிஞர்கள் ஆடிட்டர்கள் மூலம் பதில் சொல்கிறேன் என விழி பிதுங்கி பதில் சொல்லியிருக்கிறார் வேலுமணி என்கிறது லஞ்ச ஒழிப்புத்துறை வட்டாரங்கள்.
வேலுமணி, நெதர்லாந்தில் இருக்கும் அவரது சகோதரர் செந்தில், கோவையில் இருக்கும் சகோதரர் அன்பரசன், ஆரம்ப காலத்தில் அவரது காண்ட்ராக்ட் சந்திரசேகர், சந்திரபிரகாஷ் மற்றும் அவரது உறவினர்கள் நடத்திய கம்பெனிகளின் பேரில் மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத் ஆகிய இடங்களில் இருந்து கடன் வாங்கியுள்ளார். கோடிக் கணக்கில் வரும் இந்தக் கடன்களை திருப்பிச் செலுத்தவேயில்லை. துபாய் போன்ற சர்வதேச நாடுகளில் இயங்கும் அன்பரசனுக்குச் சொந்தமான மகா கணபதி ஜூவல்லர்ஸில் மட்டும் இப்படி 290 கோடி ரூபாய் வந்திருக்கிறது. ஜூவல்லரி உள்ளிட்ட 13 கம்பெனிகள் வெளி மாநிலங்களிலும் வெளி நாட்டிலும் முதலீடு செய்திருக்கின்றன என்கிறது வேலுமணி மீது போடப்பட்ட எஃப்.ஐஆர். அதையொட்டி வேலுமணியே எதிர்பார்க்காத வகையில் வேலுமணிக்கு வேண்டப்பட்ட மலர்விழி, ஏ.டி.எஸ்.பி. அனிதா, பத்திரிகையாளர்கள் மேல் வேலுமணி சொன்னதற்காக பொய் வழக்குப் போட்டு சிறையில் அடைத்த ஆய்வாளர் லோகநாதன், திருப்பூர் ஆய்வாளர் சந்திரகாந்தா என 60-க்கும் மேற்பட்டவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்தியுள்ளது.
ஏழு மாதங்களுக்குப் பிறகு நடந்த இந்த ரெய்டுகளின் தொடர்ச்சியாக மாலத் தீவு உட்பட வேலுமணியின் வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பாக ஏற்கனவே பதியப்பட்ட இரண்டு வழக்குகளோடு மூன்றாவது வழக்கும் வருகிறது என்கிறார்கள் லஞ்ச ஒழிப்புத்துறையைச் சேர்ந்தவர்கள்.