Skip to main content

கோவாக்சின் ஆய்வக பரிசோதனையை தற்காலிகமாக இரத்து செய்தது பிரேசில்!

Published on 24/07/2021 | Edited on 24/07/2021

 

covaxin

 

இந்தியாவில் தயாரிக்கப்படும் கோவாக்சின் தடுப்பூசியை, பிரெகிஸா மெடிகாமென்டோஸ் மற்றும் என்விக்ஸியா பார்மாசூட்டிகல்ஸ் எல்.எல்.சி ஆகிய நிறுவங்கள் மூலம் வாங்குவதற்கு பிரேசில் ஒப்பந்தம் செய்திருந்த நிலையில், இந்த ஒப்பந்தம் தொடர்பாக ஊழல் சர்ச்சை எழுந்தது. ஃபைசர் நிறுவனத்தின் தடுப்பூசி கோவாக்சினைவிட விலை குறைவாக இருக்கும்போது, அதிக விலை கொடுத்து கோவாக்சின் தடுப்பூசியை வாங்குவது ஏன் என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின.

 

கோவாக்சினின் அதிக விலை, விரைவான பேச்சுவார்த்தைகள், ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதல்கள் நிலுவையில் இருப்பது ஆகியவற்றைச் சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சிகள், தடுப்பூசி வாங்குவதில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ ஊழல் செய்துவிட்டதாகவும், பிரேசிலுக்கும் கோவாக்சினை தயாரிக்கும் பாரத் பயோடெக் நிறுவனத்துக்கும் இடைத்தரகராக செயல்படும் பிரெகிஸா மெடிகாமென்டோஸ் நிறுவனம் அதிக லாபம் ஈட்டியுள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின.

 

இதனையடுத்து ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரிக்க நாடாளுமன்ற நிலை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், கோவாக்சின் ஒப்பந்தத்தைப் பிரேசில் தற்காலிகமாக இரத்து செய்தது. இந்தநிலையில் பாரத் பையோடெக் நிறுவனம், கோவாக்சின் தடுப்பூசி தொடர்பாக பிரெகிஸா மெடிகாமென்டோஸ் மற்றும் என்விக்ஸியா பார்மாசூட்டிகல்ஸ் எல்.எல்.சி ஆகிய நிறுவனங்களுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை இரத்து செய்வதாக அறிவித்தது. அதேநேரத்தில், கோவாக்சின் தடுப்பூசிக்கு அனுமதி பெற பிரேசில் நாட்டின் மருந்து ஒழுங்குமுறை ஆணையமான அன்விசா-வுடன் தொடர்ந்து பணியாற்றுவோம் எனவும்  பாரத் பையோடெக் நிறுவனம் கூறியது.

 

இந்தநிலையில், பிரேசில் நிறுவனங்களுடனான ஒப்பந்தத்தை பாரத் பையோடெக் நிறுவனம் இரத்து செய்ததையடுத்து, கோவாக்சின் தடுப்பூசியின் ஆய்வக சோதனைகளைப் பிரேசிலின் மருந்து ஒழுங்குமுறை ஆணையமான அன்விசா தற்காலிகமாக இரத்து செய்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்