Skip to main content

20 லட்சத்தில் தொடங்கி, 8.4 கோடியில் முடிந்த ஏலம்- தமிழக வீரர் வருண் EXCLUSIVE INTERVIEW

Published on 19/12/2018 | Edited on 19/12/2018
varun chakravarthy


2019ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டியில் வீரர்களை வாங்கும் ஏலம் நேற்று ராஜஸ்தான் உதய்பூரில் நடந்தது. இந்த ஏலத்தில் 150 வீரர்களில் 60 வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டிருந்தனர். நேற்று ஏலத்தில் வாங்கிய அனைத்து வீரர்களின் மொத்த தொகை 105.80கோடி. அதிலும் தமிழக வீரரான வருண் சக்கரவர்த்தி என்பவர் ஏலத்தில் உயர்ந்த தொகைக்கு பஞ்சாப் அணியால் எடுக்கப்பட்டுள்ளார். 27 வயதாகும் வருண், டிஎன்பிஎல்லில் மதுரை பாந்தர்ஸ் என்னும் அணிக்காக விளையாடியவர். கடந்த டிஎன்பிஎல் சீசனில் 10 ஆட்டங்கள் விளையாடி 9 விக்கெட் எடுத்திருக்கிறார். விஜய் ஹசாரே டிராபியில் 22 விக்கெட் எடுத்திருக்கிறார். இந்தநிலையில், ஐபிஎல் ஏலத்தில் வருண் 8.40கோடிக்கு பஞ்சாப் அணியால் எடுக்கப்பட்டிருக்கிறார். பின்னர், அவரிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு கலந்துரையாடினோம்....
 

தஞ்சாவூர் பையன் என சொல்கிறார்கள்?
 

நான் தஞ்சாவூர் பையன் எல்லாம் இல்லை, சென்னை பையன்தான். அம்மாவுக்கு வேலை விஷயமாக தஞ்சாவூருக்கு மாற வேண்டிய சூழ்நிலை இருந்தது. அதனால் தஞ்சாவூருக்கு மாறினோம்.
 

டி.என்பி.எல், விஜய் ஹசாரே என தொடங்கி தற்போது ஐபிஎல்லில் வந்து நிற்கிறீர்கள். ஆனால், இந்த வெற்றிகளுக்கு முன்பு பல தோல்விகளை சந்தித்திருப்பீர்கள் அல்லவா?
 

டி.என்.பி.எல்லுக்கும் முன்பு பல இடங்களுக்கு வாய்ப்பு தேடி அழைந்திருக்கிறேன். பலமுறை தேர்வாகாமலும் இருந்திருக்கிறேன். சிலர் எனக்கு விளையாடுவதற்கான வாய்ப்புகளை அப்போது அளித்தார்கள். அவர்களுக்கெல்லாம் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துகொள்கிறேன்.
 

இந்த ஏலத்தில் உங்களை கொல்கத்தா அணிதான் வாங்க மும்முரம் காட்டும் என்று சொல்லப்பட்டது. அதையும் தாண்டி, சென்னை, கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகள் உங்களை ஏலத்தில் எடுக்க மும்முரம் காட்டியது. கொல்கத்தா ஏன் உங்களை வாங்க நினைத்தது தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் இருப்பதானாலா?
 

ஆமாம், நான் முதலில் கொல்கத்தா அணிக்காகதான் தேர்வாகுவேன் என்று மீடியாக்களில் சொல்லப்பட்டது. அதற்கு காரணம் தினேஷ் கார்த்திக் மட்டுமல்ல கொல்கத்தா அணியில் பலமுறை நான் டிரையல்ஸில் கலந்துகொண்டு விளையாடியிருக்கிறேன். இருந்தாலும் நான் பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணிக்காக தேர்வாகியுள்ளது மிகவும் சந்தோசத்தை தருகிறது. ஏன் என்றால் பஞ்சாபிற்கு ரவிச்சந்திரன் அஷ்வின்தானே கேப்டன். 
 

உங்களை  ‘மிஸ்டரி ஸ்பின்னர்’ என்று அனைவரும் அழைக்கிறார்கள். அந்த பெயருக்கு ஏற்றார்போல் நீங்களும் செயல்பட்டுகொண்டுதான் வருகிறீர்கள்?
 

மிஸ்டரி ஸ்பின்னர் என்பதை நான் செய்யவில்லை, அனைத்து ஊடகங்களும்தான் அவ்வாறு அழைக்கிறது. எனக்கு மிகவும் சந்தோசமாக இருக்கிறது அனைத்து ஊடகமும் என்னை ஆதரிக்கிறது. இவ்வளவு நாட்கள் நான் பல கஷ்டங்களை சந்தித்து வந்திருக்கிறேன், தற்போது ஊடகங்கள் என்னை ஆதரிப்பதை பார்க்கையில் மிகவும் சந்தோசமாக இருக்கிறது. 
 

ஹர்பஜன் சிங் உங்களை பற்றி ட்விட்டரில் தெரிவித்தது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
 

எனக்கு அது மிகவும் சந்தோசத்தை தருகிறது. சர்வதேச அளவிலான கிரிக்கெட்டர், இந்திய அணியில் பல வருடங்களாக தலைசிறந்த ஸ்பின்னராக நிலைத்து நின்றவர். அவர் என்னை பற்றியெல்லாம் பேச வேண்டும் என்கிற அவசியம் அவருக்கு இல்லை இருந்தாலும் என்னையும் ஒரு பொருட்டாக நினைத்து ட்விட்டரில் அவருடைய கருத்தை தெரிவித்திருப்பது எனக்கு மிகவும் சந்தோசத்தை அளிக்கிறது. 
 

நேற்று நடந்த ஏலத்தில் 20 லட்சத்தில் தொடங்கிய உங்களின் பேஸ் பிரைஸ் 42 முறை உயர்ந்து 8.40 கோடிக்கு எடுக்கப்பட்டிருக்கிறீர்கள். இவ்வளவு பெரிய தொகைக்கு எடுக்கப்பட்டது பயமளிக்கிறதா?
 

பயம் எல்லாம் இல்லை பிரதர். இந்த தொகைக்கு எடுக்கப்பட்டது எனக்கு மேலும் பொறுப்பை அளித்திருக்கிறது பிரதர்.